அரண்மனை – 2 விமர்சனம்

 

கோபத்தில் இருந்தான் மாயாண்டி.. அவனை சமாதானப்படுத்திக்கொண்டு இருந்தான் விருமாண்டி.. வேறென்ன அரண்மனை-2 படத்திற்கு அவனை விட்டுவிட்டு தான் மட்டும் போய் பார்த்து வந்திருக்கிறான்.. இத்தனைக்கும் இரவுக்காட்சி போகலாம் என மாயாண்டி சொல்லி இருந்தாலும், காலையிலேயே வேறு நண்பர்கள் முதல் காட்சிக்கே கூப்பிட்டதால் போய்விட்டான்.. இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் கோபம் தணிந்து..

மாயாண்டி : சரி சரி கதைய சொல்லு..

விருமாண்டி : டேய்.. நாளைக்கு வேணும்னா நானும் கூட வர்றேண்டா..

மாயாண்டி : படம் பார்க்குற மூடு இப்ப இல்ல.. நீ கதைய சொல்லு..

விருமாண்டி : கிராமத்து ஜமீன்தார் ராதாரவி.. அவரோட ரெண்டு பையனுங்க கண்மணி சுப்பு, சித்தார்த்.. ஊர்ல கோயில் வேலை நடக்கிறதால அம்மன் சிலையை பீடத்துல இருந்து தூக்கி தனியா வச்சுட்டு பத்து நாள் கழிச்சு கும்பாபிஷேகம் பண்ண முடிவு பண்றாங்க..

மாயாண்டி : அடடே புது விஷயமா இருக்கே..

விருமாண்டி : கேளு.. சாமி, பீடத்துல இல்லாததுனால சில மந்திரவாதிங்க புதைஞ்சு கிடக்கிற பேய்களை எழுப்பி விட்டுர்றாங்க.. அதுல ஒண்ணு அரண்மனைக்குள்ள போயிருது.. முதல்ல ராதாரவியை அட்டாக் பண்ணி கோமாவுல தள்ளுது.. பாரினுக்குப்போன சித்தார்த்தும் அவருக்கு நிச்சயம் பண்ணுன முறைப்பொண்ணு பொண்ணு த்ரிஷாவும் உடனே திரும்பி வர்றாங்க.. அவங்க வந்தபின்னாடி அடுத்து வீட்டு வேலைக்காரன் ராஜ்கபூரை போட்டுத்தள்ளுது.

மாயாண்டி : இரு இரு.. அரண்மனை படத்துலயும் வேலைகாரனைத்தானே பேய் கொன்னுச்சு..

விருமாண்டி : முழுசா கேளுப்பா. இதுல அந்த பேய் நடமாடுறது சித்தார்த்தோட அண்ணன் பையன் கண்ணுக்கு மட்டும் தெரியுது.. அவன் சொல்றான்.. ஆனா யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க..

மாயாண்டி: முதல் பார்ட்ல கூட ஒரு குழந்தை இப்படித்தானே சொல்லுச்சு..

விருமாண்டி: ஆமா.. அது பொம்பிள புள்ளை. இது ஆம்பளை பையன்

மாயாண்டி: அட வித்தியாசம் தான்.. மேல சொல்லு

விருமாண்டி: அந்த வீட்டுக்கு த்ரிஷாவோட கல்யாண வேலைகளை கவனிக்க வர்றார் அண்ணன் சுந்தர்.சி.. பார்க்காதே.. போன பாகத்துல லாயர வந்தவர்.. இந்த பாகத்துல கேமராமேனா வர்றார். போதுமா..? அவருக்கு இந்த பிரச்சனை லைட்டா தெரிய வர்றப்ப வீடெல்லாம் கேமரா பிக்ஸ் பண்றார்..

மாயாண்டி: முதல் பாகத்துலயும் பண்ணுனார்ல.. திரும்பவும் இதுலயும் பண்ணுறாரா..?

விருமாண்டி: பேய் இருக்குறத கண்டுபிடிக்கனும்னா, பேய் சுயமா யோசிச்சு இந்த கேமரா டெக்னிக்கை கண்டுபிடிக்கிற வரைக்கும் எத்தனை பாகம் எடுத்தாலும் இந்த வேலையத்தான் பார்ப்பாரு.. கேளு.. அடுத்து சித்தார்த்தோட அண்ணன் பையன தண்ணீர்ல தள்ளி கொல்லப்பார்க்குது.. அப்போ சுந்தர்.சி வந்து காப்பாத்திடுறாரு..

மாயாண்டி:  அடுத்த பலி யாரு..?

விருமாண்டி: வேற யாரு ராதரவியோட மூத்த மகன் பஞ்சு சுப்பு தான்.. அடுத்து சித்தார்த்துக்கும் தப்பி பிழைச்ச அவரோட அண்ணன் பையனுக்கும் குறிவைக்குது.

மாயாண்டி: அட.. அப்ப குடும்பத்துல இருக்குற ஒவ்வொரு ஆளா பழி வாங்குதுன்னா இதுல யாரோ ஒருத்தரு யாருக்கோ கெடுதல் பண்ணிருக்கணும் இல்லையா..?

விருமாண்டி: பெரிய கண்டுபிடிப்பு.. கெடுதல் பண்ணிருக்காங்க தான்.. அதனால தான பழிவாங்குது… சுப்புவ கொல்றதுக்காக பேய் இழுத்துட்டுப்போனத கேமரா பதிவுல பார்த்த சித்தார்த் அப்படியே ஷாக் ஆகி நிக்கிறாரு..

மாயாண்டி: ஏன் பேய் அவருக்கு தெரிஞ்ச ஆளா..?

விருமாண்டி: அது வேற யாரும் இல்லப்பா.. அந்த வீட்டோட ஒரே குலவிளக்கு.. சித்தார்த்தோட தங்கச்சி ஹன்ஷிகா தான்ப்பா.?

மாயாண்டி: என்னது சித்தார்த்தோட தங்கச்சியா ஹன்ஷிகா.? என்னப்பா சொல்ற..?

விருமாண்டி: தங்கச்சியே தன்னோட குடும்ப ஆளுங்களை கொல்றா… அதுக்கு ஆச்சர்யப்படலை.. ஆனா சித்தார்த்துக்கு ஹன்ஷிகா தங்கச்சின்னதும் அதிர்ச்சியாகுற.. இன்னொன்னு தெரியுமா..? போன படத்துல புருஷன் பொண்டாட்டியா வந்த மனோபாலாவும் கோவை சரளாவும் இதுல அண்ணன் தங்கச்சி.

மாயாண்டி: அய்யோ.. அதுசரி அந்த வீட்டு பொண்ணே எதுக்கு அவங்க குடும்பத்தை அழிக்க நினைக்குது..?

விருமாண்டி: பின்ன பேய்க்கதைன்னா பிளாஸ்பேக்ல வித்தியாசமாண ஸ்டோரி வேணாமா..? அத தியேட்டர்ல போய் பாத்துக்க.. முழுக்கதையும் சொன்னா சுந்தர்.சி வருத்தப்படுவாரு..

மாயாண்டி : முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் பிளாஸ்பேக் வித்தியாசமா இருக்கே..

விருமாண்டி : ஆமா.. அதனால தான டைட்டில்ல கூட இதுல ’2’ன்னு சேர்த்திருக்காங்க.. அட ஏன்ய்யா நீ வேற..? இதுலயும் தங்கச்சிய பார்க்க சுந்தர்.சி வர்றாரு.. பேயை கண்டுபிடிக்க கேமரா வைக்கிறாரு.. முதல் படம் மாதிரியே கோடாங்கி சாமியாரு ஒருத்தன் அந்த வீட்ல ஆபத்து வரப்போறத சொல்றான். அதுல ஆண்ட்ரியா மேல இறங்குன பேய் இதுல த்ரிஷா மேல இறங்குது.. அது பத்தாதுன்னு சுந்தர்.சி மேலயும் இறங்குது..

மாயாண்டி : இது வித்தியாசமா இருக்கே…

விருமாண்டி : அதுல சந்தானம் சமையல்காரனா அசிஸ்டன்ட்டோட வந்தாரு. இதுல சூரி நாட்டு வைத்தியனா உள்ள வர்றாரு.. அதுல ரெண்டு பேரையும் ஒரு காட்டு காட்டுன மாதிரி இதுலயும் சூரியை ஒரு காட்டு காட்டுது.. கேராளவுல இருந்து பூசாரி வர்றாரு.. அவரு பூனம் பஜ்வாவோட சித்தப்பா.. பூனம் அந்த வீட்டுல ராதாரவிய கணிக்க வந்த நர்ஸ். சுந்தர்.சியை வேற ரூட் விடுத்து. கோவில் திருவிழா அன்னிக்குத்தான் பேயை அழிக்க முடியும்னு டெக்னிக் எல்லாம் சொல்லித்தர்றாரு கேரளா பூசாரி. அதே மாதிரி க்ளைமாக்ஸ் அம்மன் சாங்.. அதுல குஷ்பு டான்ஸ்.. சித்தார்த் கோவிலை நெருங்க நெருங்க பேய் அவரை துரத்துது.. கடைசில அம்மன் அருளால எல்லாம் சுபம்..

மாயாண்டி : யார் யாரு எப்படி நடிச்சிருக்காங்கன்னு…

விருமாண்டி : பேய்ப்படத்துல எல்லாரும் எப்படி நடிப்பாங்களோ அப்படித்தான் நடிச்சிருக்காங்க.. நீ தியேட்டர்ல போய் படத்தை பாரு.. ஒரு தடவ பார்க்கலாம்யா.. சுந்தர்.சி படம்ல.. நம்பி போ..