அழகு குட்டி செல்லம் – விமர்சனம்


மீண்டும் ஒரு குட்டீஸ்கள் படம் தான் இதுவும்.. நூற்றாண்டு பாரம்பரிய மிக்க பள்ளியை நடத்திவரும் பாதர் சுரேஷுக்கு, அந்தப்பள்ளிக்கு வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் நிதி உதவி நின்றுவிடப்போகிறது என்கிற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அதை காப்பாற்றுவதற்காக அந்த வருடம் பள்ளி ஆண்டுவிழாவுக்கு வாடிகனில் வரும் தலைமை பாதரை குளிர்விக்க ஏசுநாதர் நாடகத்திற்கு ஏற்பாடு செய்கிறார்..

பழைய மாணவர்கள் ரிகர்சலுக்கு தயாராக, புதியவர்கள் நான்கு பேர் வாய்ப்பு கேட்டும் மறுக்கிறார் சுரேஷ். ஆனால் புதியவர்களோ விடாமல், தங்களது நாடகத்தின் இறுதியில் குழந்தை ஏசு பிறக்கும் கட்சியில் நிஜமான குழந்தையை காட்டுவோம் என கூற அவர்களை நம்பி நாடக வேலைகளை ஒப்படைக்கிறார் சுரேஷ் ..

நாட்கள் நெருங்க நெருங்க நாடகத்தில் நடிக்கும் குழந்தை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.. இடையில் தங்கள் கூவத்தின் கரையில் கண்டுபிடித்த குழந்தையும் கூட அவர்களை கைவிட்டு, அநாதை ஆசிரமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அந்த ஆசிரமத்தில் தங்கி, தற்போது தங்களுடன் படிக்கும் நண்பன் உதவியுடன் குழந்தையை கடத்தும் முடிவுக்கு வருகின்றனர்.. அந்தவிதமாக தாங்கள் நினைத்ததை குழந்தைகளால் நடத்திக்காட்ட முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

முழுக்க முழுக்க குழந்தைகள் கதைதான் என்றாலும் கூட, மூன்று பெண் குழந்தைகளுக்குப்பின் நான்காவதாக ஆண் குழந்தை எதிர்பார்க்கும் கருணாஸ், வெடிவிபத்தில் தங்களது குழந்தையை இழந்த ஈழ தமிழர் தம்பதியான அகில்-ரித்விகா, குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் சேத்தன்-வினோதினி, கல்லூரி பருவத்தில் தெரியாமல் செய்த தவறால் குழந்தையை பெற்றுக்கொள்ளும் மாணவி, அனாதை ஆசிரமம் நடத்தும் தம்பி ராமையா, பள்ளிக்கூடத்தின் நலனை மட்டுமே கருதும் பாதர் என பெரியவர்களின் பிரச்சனைகளையும் தொட்டு அதற்கு குழந்தைகளின் வாயிலாக தீர்வும் சொல்லியிருக்கிறார்கள்.

மகப்பேறு இல்லாதவர்கள், பிறந்த குழந்தையை பறிகொடுத்தவர்கள், இதுவும் பெண் குழந்தையா என தூக்கி எறிபவர்கள் என ஒவ்வொருவரின் விரக்தியான மனநிலைக்கும் தீர்வு அவர்களிடமே இருப்பதை சுட்டியும் காட்டியிருக்கிறார்கள்.. பள்ளிக்குழந்தைகளாக நடித்திருக்கும் அந்த ஐந்து சிறுவர்களின் நடிப்பும் கொஞ்சம் ஓவர் டோஸ் என்றாலும் கூட, அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது..

நான்காவதும் பெண் குழந்தையா என விரக்தியாகும் கருணாஸ், அந்த குழந்தையை தூக்கி வீசிவிட்டார் என்று தனது மனைவியை போட்டு அடிக்கும் காட்சியில், கருணாஸ் நல்ல குணச்சித்திர நடிகராக மெருகேறுகிறார் என்பதை காட்டுகிறது..

விடலை பருவத்தில் திருமணத்திற்கு முன்பே காதலனால் கர்ப்பம் தரித்தாலும், பின்னர் தன்னம்பிக்கையுடம் மீண்டு வரும் அந்த இளம்பெண் யாழினி மனதில் நிற்கிறார். பள்ளியை இடைவிடாமல் நடத்த துடிக்கும் பாதாராக சுரேஷும், எல்லா வார்த்தைகளையும் ‘முருகா’ என்கிற ஒற்றை சொல்லிலேயே லாவகமாக சொல்லும் தம்பிராமையாவும் சரியான தேர்வு..

குழந்தைகளுக்காக படம் எடுக்க நினைத்து, போகப்போக குடும்ப கதைகளையும் உள்ளே கிளை பரப்பி இருப்பது நன்றாகவே தெரிகிறது.. மாணவர்கள் நாடகத்திற்காக உயிருடன் ஒரு குழந்தையை கொண்டு வருகிறேன் என சொன்னால் ஒரு பள்ளியின் பாதர் அதை தடுக்க வேண்டாமா..?

அதேபோல நாடகம் நடத்த முடியாமல் அவமானப்படும் பழைய மாணவர் டீம், ஏதிர் தீமை நடத்தவிடாமல் தடுப்பதற்காக குழந்தையை மொட்டை மாடியில் மறைத்து வைப்பது, அதை தர மறுப்பது என்கிற வன்முறை மனநிலை சார்ந்த காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

குழந்தைகள் தங்கள் சக்திக்கு உட்பட்டு என்ன சாகசம் பண்ணமுடியுமோ அதை வைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சார்லஸ்.. குழந்தைகள் ஓரளவு விரும்பி பார்ப்பார்கள் என்று தாராளமாக சொல்லலாம்.