பாகுபலி – விமர்சனம்

மகிழ்மதி நாட்டுக்கு அரசனாக அரியணை ஏற காத்திருக்கும் இரு வாரிசுகள் தான் பிரபாசும் (பாகுபலி) ராணாவும் (பல்லால தேவன்). ராணாவின் தந்தை நாசருக்கு தன மகன் மன்னனாக வேண்டும் என ஆசை.. ராணாவின் அம்மா ரம்யா கிருஷ்ணனுக்கோ தந்தையில்லாமல் வளரும் பிரபாஸ் மன்னனாக வேண்டும் என்பது விருப்பம்..

இந்த நேரத்தில் மகிழ்மதி நாட்டின்மீது படையெடுத்து வருகிறான் கொடூர குணம் கொண்ட காளகேயர்களின் தலைவன்.. அரசியை அவ்காதூராக பேசிய அவனை யார் வெல்கிறார்களோ அவனே நாட்டின் அரசன் என முடிவாகிறது. வெல்பவர் பிரபாஸ் தான் என்றாலும் சூழ்ச்சியால் அரியணை ஏறும் ராணா, தனது அடிமை சத்யராஜ் மூலமாக தந்திரமாக பிரபாசை கொல்கிறார். பிரபாஸின் மனைவி அனுஷ்காவை இரும்புச்சங்கிலியால் பூட்டி சிறை வைக்கிறார்.

பிரபாஸின் குழந்தையுடன் தப்பிக்கும் ரம்யா கிருஷ்ணன், குழந்தையை மலையோர கிராமத்து தலைவி ரோகிணியிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் துறக்கிறார். வளர்ந்து வாலிபனாக மாறும் சிவுடு (அதுவும் இன்னொரு பிரபாஸ் தான்) தனது காதலி தமன்னாவின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக கிளம்பி, தன் அன்னை என அறியாமலேயே அனுஷ்காவை சிறை மீட்டு வருகிறான்.

இதற்கு முன் நடந்த உண்மைகள் அனைத்தும் மகனுக்கு தெரிய வருவதோடு முதல் பாகம் முடிகிறது. தனது தந்தையின் சாவுக்கு காரணமான எதிரி ராணாவை பழி தீர்த்தானா..? தனக்குரிய சிம்மாசனத்தை கைப்பர்ரினானா என்பது இனி வரவிருக்கும் இரண்டாம் பாகத்தில்..

பாகுபலி, சிவுடு என இரட்டை வேடங்களில் பிரபாஸ் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார்.. தினவெடுத்த தோள்கள், கூர்மையான பார்வை, போர் வியூகம் வகுப்பது, கண்களில் தெரியும் கோபம், வாள் சுழற்றும் வீரம், மலைகளில் தாவி அரும் லாவகம் என ஒரு வரலாற்று வீரனை நம் கண்முன் நிறுத்துகிறார். அவருக்கு நிகரான போர்க்குணமும் ஆனால் சூழ்ச்சியும் வன்மமும் நிறைந்த வீரனாக ராணாவும் பளிச்ச்டுகிறார்..

ஒரே உடையோடு, சங்கிலியால் பிணைக்கப்பட்ட அனுஷ்காவுக்கு நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு குறைவு.. அதேசமயம் தங்களது ராணியை காப்பற்றுவதற்காக வில்லேந்தி கிளம்பும் தமன்னா ஆச்சர்யப்படுத்திகிறார். விசுவாசத்தின் மறுபெயர் என்றால் அது சத்யராஜ் என்று சொல்லும் அளவுக்கு கட்டப்பா என்கிற அடிமை வேடத்தில் சத்யராஜ் திகைக்க வைக்கிறார். சகுனித்தனம் பண்ணும் நாசர், நேர்மையான ஆட்சி நடத்த விரும்பும் ரம்யா கிருஷ்ணன், தத்தெடுத்த மகனுக்காக பதறும் தாயாக ரோகிணி அனைவருமே குறைசொல்ல முடியாத பாத்திரங்களாக மிளிர்கிறார்கள்.

வரலாற்று கதையை படமாக்கும்போது, நாமும் கதையில் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டால்தான் அது சரியாக படமாக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். செந்தில் குமாரின் ஒளிப்பதிவும் கீரவாணியின் அருவியாய் கொட்டும் பின்னணி இசையும் சேர்ந்து, ராஜமவுலியின் எண்ணங்களை காட்சிகளாய் உருவகப்படுத்தி ரசிகனை கட்டிப்போட்டுவிடுகின்றன.

முதல் பாகத்தை பார்த்துவிட்டு வரும் ரசிகனின் முகத்தில் ஒரு பிரமிப்புடன் கூடிய ஒரு சலிப்பு தெரியும்.. அந்த சலிப்பும் அடுத்த பாகத்தை நாளைக்கே ரிலீஸ் பண்ணிவிடக்கூடாதா என்கிற ஏக்கத்தின் பிரதிபலிப்பு தான்..

அதுதான் ராஜமவுலி..!