பூலோகம் – விமர்சனம்

உள்ளூர் பாக்ஸர் ஜெயம் ரவி, உலக சாம்பியன் பாக்ஸரை எப்படி வீழ்த்துகிறார் என்பதையும் இன்றைய வியாபார உலகில் சில சுயநலவாதிகளால் பாக்ஸிங் எப்படி உயிரை எடுக்கும் விளையாட்டாக மாறுகிறது என்பதயும் கன்னத்தில் அறைகிற மாதிரி சொல்லியிருக்கிறார்கள்.

எந்நேரமும் தீப்பிடித்து வெடிக்க தயாராக இருக்கிற அணுகுண்டு மாதிரி பாக்ஸர் கேரக்டரில் அடித்து பின்னுகிறார் ஜெயம் ரவி.. ஏற்கனவே எம்.குமரன் படத்திலேயே அவரை பாக்ஸராக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதால், இந்தப்படத்தில் அவர் பாக்ஸிங்கில் அதிரடிப்பதையும் இயல்பாகவே ஏற்றுக்கொள்ள முடிகிறது.

அதேபோல பாக்ஸிங்கில் தேசிய, உலக சாம்பியன்களை வீழ்த்துவதோடு, பாக்ஸிங்கை பணம் சம்பாதிக்கும் சூதாட்ட களமாக மாற்றும் ராஜதந்திரியான பிரகாஷ்ராஜின் வியாபார சாம்யராஜ்யத்தை தகர்த்து எறியும்போதும் ‘சபாஷ் ரவி’ என சொல்லவைக்கிறார். பாக்ஸிங் சம்பந்தப்பட்ட படம் என்பதற்காக இந்த அளவுக்கு ஒரு நடிகர் மெனேக்கேடுவாரா என்கிற ஆச்சர்யம் படம் முழுவதும் நம்மை ஆட்கொள்கிறது.

உடம்பெங்கும் டாட்டூ குத்தி அவ்வப்போது ஜெயம்ரவியை சீண்டி அழகு காட்டினாலும், ஜெயம் ரவியின் வெற்றிக்கு பக்கபலமாக மாறும் த்ரிஷாவின் கதாபாத்திரமும் கூட அழகுதான்.. பாக்ஸர்களை தூண்டிவிட்டு அவர்களுக்குள் கொலைவெறியை உருவாக்கும் சேனல் பிசினஸ்மேனாக பிரகாஷ்ராஜ் ஏக பொருத்தம். அதிலும் ஜெயம் ரவிக்கும் அர்பித் ரங்காவுக்குமான குத்துச்சண்டை போட்டியை நிகழ்த்த காலத்தையும் சூழலையும் தயார் செய்வது பக்கா மீடியா பிளான்.

பாக்ஸிங் கோச்சுகளாக வரும் பொன்வண்ணன், சண்முகராஜன் பகை மறந்து ஒன்று கூடுவது நெகிழ்வு என்றால், பொன்வண்ணனின் முடிவு மனம் கனக்க வைக்கிறது.. இன்டர்நேஷனல் மல்யுத்த வீரராக நேதன் ஜோன்ஸ்.. அவர் பக்கத்தில் ஜெயம் ரவி நிற்பதை பார்த்தாலே ஆயிரம் ரூபாய் நோட்டு பக்கத்தில் நூறு ரூபாய் நோட்டை வைத்த மாதிரி இருக்கிறது.. இருவருக்குமான சண்டைகாட்சியையும் சும்மா சொலக்கூடாது உக்கிரமாகவே படமாக்கியிருக்கிறார்கள்..

தனது சிஷ்யரான இயக்குனர் கல்யாண் கிருஷ்ணனுக்காக வசனம் எழுதும் பணியை செவ்வனே செய்துள்ளார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.. சுயநல மீடியாக்களையும், வெளிநாட்டு வர்த்தக மோகத்தையும் சாடு சாடென்று சாடுகிறது அவரது பேனா.. அதிலும் அந்த வசனங்களை ஜெயம் ரவி பேசும்போது தியேட்டரில் க்ளாப்ஸ் அள்ளுகிறது..

மயானக்கொள்ளை என்கிற காட்சியிலும் அதற்கான பாடலிலும் தனது இருப்பை காட்டிக்கொள்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் வி.டி.விஜயன்-கணேசகுமார் ஆகியோரின் படத்தொகுப்பும் பாக்ஸிங் ரசிகனாக நம்மை மாற்றி பார்வையாளர் இருக்கையை விட்டு நகரவிடாமல் வைக்கின்றன.

எதற்காக இத்தனை வருடம் இந்தப்படத்தை ரிலீஸ் செய்யாமல் வைத்திருந்தார்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.. காரணம் இந்தப்படம் எப்போது வந்தாலும் ஜெயிக்கிற படம்.. காலாகாலத்தில் ரிலீஸ் பண்ணியிருந்தால் அப்போதே தயாரிப்பாளரின் கடனை அடைத்திருக்கும். படத்தின் இயக்குனரான கல்யாண் கிருஷ்ணனையும் முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம் பிடிக்கவைத்திருக்கும் என்பதே உண்மை.

பூலோகம் – பொழுதுபோக்கிற்கு 100 சதவீத கியாரண்டி..