டார்லிங் – 2 விமர்சனம்


கடந்த வருடம் வெளியான டார்லிங் படம் வெற்றி பெற்றதால் அந்த வெற்றி அடையாளத்துடன் அதன் இரண்டாம் பாகம் என்கிற அடைமொழியுடன் அந்தப்படத்துக்கு துளியும் சம்பந்தம் இல்லாமல் வெளியாகி இருக்கிறது இந்த டார்லிங்-2.. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பு இதற்கும் கிடைக்குமா..? பார்க்கலாம்.

நண்பர்கள் ஐந்து பேர் வால்பாறைக்கு பிக்னிக் போகிறார்கள். ஜாலியாக என்ஜாய் பண்ணலாம் என போன இடத்தில் இவர்கள் தங்கியிருக்கும் பங்களாவுக்குள் ஆண் பேய் ஒன்று இவர்களில் ஒருவரை கொல்ல காத்திருக்கிறது. அது இவர்களின் நண்பனாக இருந்து தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனவனின் ஆவி.

நண்பர்களாக இருந்தவர்களில் ஒருவரை எதற்காக இந்த ஆவி கொல்ல துடிக்கிறது..? இறுதியில் நடந்தது என்ன என்பது க்ளைமாக்ஸ்..

கலையரசன், புதுமுகம் ரமீஸ் ராஜா, காளி வெங்கட், மெட்ராஸ் ஜானி இன்னும் ஒரு நண்பர் என ஐந்துபேரும் பேய்ப்படத்திற்கே உரியபடி ஆரம்பத்தில் நட்பு டான்ஸ் ஆடுகிறார்கள். அப்புறம் பேய் வரும்போதெல்லாம் பயப்படுகிறார்கள்… ஒவ்வொருவரும் தனித்தனியாக கோபப்பட்டு உடன் இருப்பவர்களையும் படம் பார்க்கும் நம்மையும் கூட டார்ச்சர் பண்ணுகிறார்கள்.

கதாநாயகியாக வரும் மாயாவுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு தான் என்றாலும் அவரது களையான முகமும் அந்த சிரிப்பும் நம்மை வசீகரிக்கிறது. காளி வெங்கட் மற்றும் முநீஷ்காந்த் என் இருவர் மட்டும் அவ்வப்போது நகைக்க வைக்கிறார்கள். படத்தில் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக்கின் பணி அபாரமானது. ஆனால் அவரது கைவண்ணத்திற்கு திரைக்கதை சரியாக ஒத்துழைக்கவில்லையே என்பதுதான் வருத்தம்.

பேய்ப்படம் என்கிற லேபிளுடன் வந்துள்ள இந்தப்படத்தில் மிஞ்சிப்போனால் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே பயப்பட முடிகிறது. பேய்க்கதையில் பிளாஸ்பேக்கும் க்ளைமாக்ஸும் வலுவாக இருக்கவேண்டாமா.? ஆனால் இதில் உப்புச்சப்பு இல்லாத, ஏற்றுக்கொள்ள முடியாத, பழிவாங்குவதற்கு சொல்லப்படும் சோப்ளாங்கி காரணம் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ். இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

பேய்ப்படம் என்றாலே மிகப்பிரமாண்டமான பங்களாவையும் இருட்டு நேரத்தையும், மாடியில் இருந்து மேலும் கீஎழும் இறங்குவதையும், கதாபாத்திரங்கள் அனைவரும் ஒவ்வொரு அறையாக சுற்றி வருவதையும், மின் விளக்குகள் நினைத்த நேரத்தில் அணைந்து விடுவதையும் மட்டும் இன்னும் எத்தனை படங்களில் தான் காட்டிக்கொண்டு இருக்கப்போகிறார்களோ..? கடவுளுக்கே.. இல்லையில்லை அந்த பேய்களுக்கே வெளிச்சம்.