முற்பகல் செய்த கவுதம் மேனனுக்கு இப்போ பிற்பகல் விளைகிறதோ..?


இளைய தலைமுறையின் இருதுருவ நடிகர்கள் எனப்படும் சிம்பு, தனுஷ் இருவரையும் வைத்து ஒரே நேரத்தில் படங்களை இயக்கும் வாய்ப்பு கவுதம் மேனனுக்கு கிடைத்தது. ஆனால் இரண்டு படங்களையும் முடிக்க முடியாமல் அடுத்த படத்திற்கு ஜெயம் ரவியுடன் பேசிவருகிறாராம் கவுதம் மேனன்..

சிம்பு சம்பள பிரச்சனை காரணமாக ‘அச்சம் என்பது மடமையடா’ படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்கி கொடுக்கிறார் என சொல்லப்படுகிறது. தனுஷோ, அவரது அண்ணன் செல்வராகவனை வைத்து படம் தயாரிப்பதாக சொன்ன கவுதம் மேனன் அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறாரே என்கிற கோபத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை விட்டுவிட்டு வெற்றிமாறன் படத்தில் நடிக்க போய்விட்டார்.

ஒருபடத்தில் நடிக்கும்போதே அதைவிட்டுவிட்டு இன்னொரு படத்திற்கு போவது நல்ல செயலா என இவர்களை பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். அப்படிப்பார்த்தால், ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே மற்றொரு படத்தில் கமிட்டாவதும் இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஒன்றும் புதிதல்லவே.

ஏற்கெனவே, சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே, அஜித் கால்ஷீட் கிடைத்தது என்பதற்காக அந்தப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, அஜித் படத்தை இயக்கியவர் தானே கவுதம் மேனன்.

அதன்பின்னராவது சிம்பு படத்தை முடித்தாரா, என்றால் அதுவும் இல்லை. சிம்பு மீது குற்றம் சாட்டிவிட்டு தனுஷ் படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார். அன்றைக்கு ஆரம்பித்த அந்த பிரச்சினைதான் இன்னும் முற்றுப்பெறாமல் கவுதம் மேனனை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இப்போது தனுஷ் படமும் அம்போவென பாதியில் நிற்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற பழமொழி கவுதம் விஷயத்தில் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.