வண்ண “ஜிகினா” – விமர்சனம்

பாவாடைசாமி என்கிற பெயர், கருப்பான நிறம் என அழகில்லாத தன்னை காதலிக்க யார் இருக்கிறார்கள் என தாழ்வு மனப்பான்மையால் மறுகுகிறார் கால்டாக்ஸி ட்ரைவர் விஜய் வசந்த். தனது ஐ.டி நண்பர்களின் கொடுத்த ஐடியவால், தான் ஏற்கனவே சந்தித்த வேறொரு அழகான இளைஞனின் புகைப்படத்தையும் பெயரையும் பயன்படுத்தி, பேஸ்புக்கில் பொய்கணக்கு துவங்கும் விஜய்வசந்துக்கு, பேஸ்புக்கில் உள்ள சானியாதாராவை பிடித்துப்போகிறது.

முகம் காட்டாமல் ஆடியோ சாட்டிங்கில் பேசிப்பழகும், விஜய்வசந்தின், காரில் ஒருநாள் ஏதேச்சையாக பயணிக்கும் சானியதாராவுக்கு விஜய் வசந்தின் வெகுளித்தனம் பிடித்துவிட, அவருடன் கலகலப்பாக பழகுகிறார். சரி.. அதுதான் நேரிலேயே தனது உருவம், பெயரையெல்லாம் மதித்து நன்றாக பழகுகிறாரே, இனி பேஸ்புக்கில் பொய் சாட்டிங்கை நிறுத்தி, உண்மையை சொல்லிவிட்டு, அப்படியே தனது காதலையும் வெளிப்படுத்தலாம் என நினைக்கிறார் விஜய் வசந்த்.

ஒருகட்டத்தில் வில்லனிடமிருந்து சானியதாராவை காப்பாற்றும் விஜய் வசந்துக்கு, தான் பேஸ்புக்கில் பயன்படுத்திய பொய்முகத்துக்கு சொந்தக்காரனே நிஜத்திலும் சானியாவின் உண்மையான காதலனாக இருப்பது தெரியவருகிறது.

வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்யும் நோக்கில் மலை உச்சிக்கு செல்லும் விஜய் வசந்த், அங்கு ஏற்கனவே தற்கொலை செய்வதற்காக வந்து நிற்கும் ஒரு பெண்ணை பார்க்கிறார். அந்தப்பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ய, தானே காரணம் என்கிற அதிர்ச்சிகரமான உண்மை விஜய் வசந்துக்கு தெரிய வருகிறது. யார் அந்த பெண், அந்த பெண் தற்கொலை செய்யும் அளவுக்கு விஜய் வசந்த் என்ன செய்தார் என்பது பிளாஸ்பேக கம் க்ளைமாக்ஸ்.

ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி, அழகன் அழகி படங்களை எடுத்து படம் பார்பவர்களை நோகடிக்கும் இயக்குனர் (ரவி) நந்தா பெரியசாமியின் இந்த முந்தய படங்கள் கொடுத்த அடியை யோசித்து இந்தப்படத்துக்கு செல்ல தயங்கிய வேளையில், படத்தை வாங்கி வெளியிட்டுள்ள நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் என்கிற ஒரே நம்பிக்கையில் உள்ளே நுழைந்தோம் பார்த்தீர்களா..”நமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்”..என நம்மளை முந்தய படங்களை போலவே வெளுத்து வாங்குகிறார்.

விஜய் வசந்தின் தாழ்வு மனப்பான்மை, சிரிப்பை வரவழைக்கும் அவரது பெயர் எல்லாம் சரி… முகம் காட்டாமல் காதலிப்பதும் சரிதான். ஆனால் பழகிய சில நாட்களிலேயே மொபைலுக்கு மாறி கடலைபோடும், இந்த நவீன யுகத்தில் பேஸ்புக்கில் பழகினோம் என்பதற்காகவே நாள்கணக்காக பேஸ்புக்கில் ஆடியோ சாட்டிங்கிலேயாவா(ஆடியோ கால்னு ஒரு ஆப்சன் இருக்கு தெரியுமா?) பேசிக்கொண்டிருப்பார்கள்..

விஜய்வசந்த் செய்வது போலவே, அவரை காதலிக்கும் பெண்ணும் இதேபோல சானியா போட்டோவை வைத்து டுபாக்கூர் வேலை பார்த்திருப்பது ட்விஸ்ட் தான் என்றாலும், நேரில் சந்திக்கவேண்டிய இக்கட்டான சூழல் ஏற்படும்போது இருவருமே தாங்கள் யாருடைய போட்டோவை உபயோகப்படுத்துகிறார்களோ, அவர்களிடமே சென்று தங்களது காதலரை சந்திக்கும்போது உண்மையை சொல்லி உதவ அழைத்து வருவது என்ன சார் லாஜிக்..?

அப்படி அழைத்துவரும் பட்சத்தில் அழகாக இருக்கும் தனது காதலரை அவர் தட்டிக்கொண்டு போய்விடுவாரே என்கிற குறைந்தபட்ச பயம் கூடவா இல்லாமல் போய்விடும்…? என்னமோ போங்கள்… இயக்குனர் தனது இஷ்டத்துக்கு, நினைத்த நினைப்புக்கு, கதையையும் கற்பனையையும் இழுத்திருக்கிறார்.. எல்லாமே வறட்டு இழுப்பு தான்.

இதில் பேஸ்புக்கில் தன்னுடன் நட்பாகும் அழகிய பெண்களையெல்லாம் படுக்கையில் வீழ்த்த நினைக்கும் வில்லன் என்கிற உபரி கதை வேறு.. நல்ல கதைகளாக தேர்ந்தெடுக்கும் விஜய் வசந்த், இந்த தாழ்வு மனப்பான்மை கதை தனக்கு செட்டாகும் என அவராகவே தன்னை குறைத்து மதிப்பிட்டுக்கொண்டுள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது.

என்னதான் அழகில்லாத பெண் ஹீரோவை காதலிப்பதாக காட்டினாலும், சினிமா என வரும்போது அந்த அழகில்லாத பெண்கூட, அப்படி மேக்கப் போட்டுக்கொண்ட ஒரு அழகான ஹீரோயினாக இருந்தால் தான் படம் பார்க்கும் ரசிகனால் படத்துடன் ஒன்றமுடியும்.

துணிச்சல் என்கிற பெயரில் சுமாரான பெண்ணை தேர்ந்தெடுத்ததும், அடிக்கடி அவரை குளோசப்பில் காட்டுவதும், இயக்குனர் ரவி நந்தா பெரியசாமியின் பெருந்தன்மையாக இருந்தாலும், மொக்கை கதை என தெரியாமல் படம் பார்க்க வரும் ரசிகனை மேலும் மேலும் சோதிப்பதாகத்தான் அது அமைந்திருக்கிறது.

இயக்குனர் தனது மூன்றாவது படத்திற்கு வைத்த ‘அழகன் அழகி’ டைட்டில் இந்தக்கதைக்குத்தான் பொருத்தம்..அதேபோல அவர் தனது இரண்டாவது படத்திற்கு வைத்த ‘மாத்தி யோசி’ டைட்டிலை இனியாவது சரியாக உபயோகப்படுத்தி நல்ல படம் கொடுக்க முயற்சிக்கலாம். அல்லது சினிமா தவிர வேறு என்ன பண்ணலாம் என ‘மாத்தி யோசி’க்கலாம்.

வண்ண ஜிகினா என நம்பி போனவர்களுக்கு சாணிப்பொடியை கையில் கொடுத்து அனுப்பியிருக்கிறார் இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி.