ஜில் ஜங் ஜக் – விமர்சனம்


வழக்கமாக அரைத்த மசாலாவையே அரைக்கவேண்டாம் என் நினைத்த சித்தார்த், தனது தயாரிப்பிலேயே புதிய முயற்சியாக உருவாக்கி நடித்துள்ள படம் தான் இந்த ‘ஜில் ஜங் ஜக்’. கிட்டத்தட்ட கௌபாய் பாணி கதையம்சத்துடன் இதை உருவாக்கியுள்ளார்கள்..

சித்தார்த்திடம் அவரது இரண்டு நண்பர்களையும் சேர்த்து போதைப்பொருளை கைமாற்ற சொல்லி அசைன்மென்ட் கொடுக்கிறார் தேவா என்கிற அமரேந்திரன்.. அதுவும் எப்படி போதைப்பொருளை பெயிண்டுடன் கலந்து அதை கார் மீது பூசி காரை எதிர் தரப்பினரிடம் சேர்க்கவேண்டும்.. போகும் வழியில் காரை வேறு ஒரு நபர் கடத்த, அந்த கார் சினிமா ஷூட்டிங்கில் சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு சின்னாபின்னமாகிறது.

இதனால் அதேபோல புதிய கார் ஒன்றை தயார் செய்யும் பணிகளில் ஈடுபடும் சித்தார்த் போகிறபோக்கில் அமரேந்திரனின் எதிரியான ராதாரவியிடம் (ரோலக்ஸ் ராவுத்தர்) அவரது கையாளன அட்டாக்’கிடமும் சிக்குகிறார்.. இறுதியில் எதிரிகள் அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்கும் சூழல் உருவாகிறது. என்ன நடக்கிறது என்பது க்ளைமாக்ஸ்.

கேட்டப்ப முதல் பேச்சு, நடை என அனைத்திலும் இமேஜ் பற்றி கொண்டுகொள்ளாமல் புது ஸ்டைலை பின்பற்றியிருக்கிறார் சித்தார்த் (ஜில்). அவருக்கு துணையாக வரும் ஜக் என்கிற நபர் தொணதொணவென பேசும்போது ஹாலிவுட் நடிகர் க்ரிஸ் டக்கரை ஞாபகப்படுத்துகிறார். ‘ஜங்’கும் தன பங்கிற்கு அசத்துகிறார்..

இதில் நம்மை முக்கியமாக கவர்பவர்கள் இரண்டு பேர்.. ஒருவர் ரோலக்ஸ் ராவுத்தராக வரும் ராதாரவி.. இதுவரை அவர் ஏற்றிராத வேடம், கெட்டப் என்று இதை தாராளமாக சொல்லலாம்.. அடுத்ததாக அமரேந்திரனின் பி.ஏவாக அந்த குண்டு பூசணி’ உடம்புக்காரர்.. அவர் பேசும் காட்சிகளில் எல்லாம் கைதட்ட அதிர்கிறது போங்கள்..

சாதாரண அடியாளாக வந்து, ‘மெட்ராஸ்’ படத்தில் கொஞ்சம் நடிப்பிலும் மிரட்டிய ‘அட்டாக்’ சாய்தீனா இதில் காமெடியில் சூப்பராக ஸ்கோர் செய்கிறார். நாசர், ஆர்.எஸ்.சிவாஜி, பகவதி பெருமாள் ஆகியோரும் தங்களது பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

கௌபாய் பட மூடுக்கு நம்மை அழைத்து செல்லும் வேலையை செவ்வனே செய்திருக்கின்றன ஸ்ரேயா கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும். அதேபோல வசனங்களில் பல இடங்கள் ‘தெறி’க்க விடுகின்றன. புதிய முயற்சி ஒன்றை தமிழ் சினிமாவில் களம் இறக்கும் விதமாக படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனர் தீரஜ் வைத்தி வரவேற்கப்படவேண்டியவரே..!