ஜிப்பா ஜிமிக்கி – விமர்சனம்

ஆடுகளம் நரேனும் அவரது நண்பரும் தங்கள் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் செய்துவைத்து சம்பந்தியாக நினைக்கிறார்கள்.. ஆனால் வாரிசுகளோ எலியும் பூனையுமாக இருக்கிறார்கள்.. இப்படிப்பட்டவர்கள் நண்பனின் திருமணத்திற்கு போய்விட்டு திரும்புவதற்குள் எப்படி காதலாகி கசிந்து உருகுகிறார்கள் என்பது தான் கதை(யாம்).

படத்தின் கதாநாயகனும் நாயகியும் நடைப்பயணத்தில் வைகோவையே மிஞ்சிவிட்டார்கள் போங்கள்.. நாயகன் க்ரிஷ் திவாகர் நடிப்பில் நம்ம அருண்பாண்டியனையே ஓவர் டேக் செய்கிறார்.. தயாரிப்பாளரின் மகனாம். கதாநாயகி குஷ்பு பிரசாத்தின் கேரக்டர் வடிவமைப்பு சரியில்லை என்றாலும் ஆள் பார்க்க நன்றாக இருக்கிறார். படம் பார்க்க வரும் ரசிகனை ஓரளவுக்காகவது கூல் பண்ணி அனுப்புகிறார்.

நான் கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், இளவரசு, ஹீரோயின் தந்தை என பெரிசுகள் எல்லாம் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர். ராஜேந்திரனின் வாய் பேசமுடியாத மனைவியாக வரும் அந்த பெண்மணி முகத்தில் காட்டும் எக்ஸ்பிரசன்கள் சூப்பர்,. ஆனால் அந்தம்மாவை தவிர எல்லோரும் பக்கம் பக்கமாக புத்திமதி சொல்வதுதான் தாங்கமுடியவில்லை.

‘இரண்டு பேரும் காதலாவது தான் கதை’ என்றான பிறகு படத்தை அப்படியே முடிக்காமல்.. இல்ல..இல்ல.. நான் இன்னும் கால் மணி நேரம் படம் எடுத்தே தீருவேன் என இழுத்து நம்மளை நூடுல்ஸ் ஆக்குகிறார் இயக்குனர்.

படத்தின் ஒரே ஒரு ஆறுதல் சில காட்சிகளில் பிரமாண்டமாய் தெரியும் கூர்க் ஏரியாவின் அழகு.

“காசும் இருக்கு. நம்ம பையனுக்கு ஹீரோ ஆகணும்னு ஆசையும் இருக்கு” என படம் எடுத்தல், எப்படி இருக்குமோ.. அப்படியே இருக்கு படம்!