ஜோக்கர் – விமர்சனம்


தனக்கென சொந்தமாக கழிப்பறை கட்டும் பிரச்சனையில் ஆரம்பித்து தனக்கான கல்லறையைத் தேடிக் கொண்ட ஒரு சாமானியனின் கதைதான் இந்த ஜோக்கர்.

பப்பிரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த குருசோமசுந்தரம் தனக்குத்தானே ஜனாதிபதியாக பிரகடனம் செய்துகொண்டு அமல்படுத்த முடியாத உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டு ஊர்மக்களின் பார்வையில் கோமாளியாக வலம் வருகிறார். ஆனால் இவரது கோமாளித்தனங்கள் அதிகாரிகளுக்கு அவ்வப்போது சிக்கல்களை உருவாக்குகின்றன. அது அவரை இந்த உலகத்தை விட்டே அப்புறப்படுத்தம் அளவுக்கு கொண்டு செல்கிறது. இவர் ஜனாதிபதியாக தன்னை மாற்றிகொண்டதற்கு பின்னணியில் நடந்தது என்ன என்பதை ஒரு சாமானியனின் பார்வையிலிருந்து விவரிக்கிறது இந்தப்படம்.

கோட் சூட் அணிந்து கொண்டு, டி.வி.எஸ்.50ல் ஒரு நிழற்குடையை மாட்டிக் கொண்டு, வித்தியாசமாக வலம் வரும் குருசோமசுந்தரம் ஆரம்பத்திலேயே ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். அவர் செய்யும் விஷயங்கள் வேடிக்கையாக இருந்தாலும், அவர் முன்னெடுக்கும் போராட்டங்கள் அனைத்தும் சாமானியனுக்கானவை என்பது மறுக்க முடியாதவை. ஆனால் யாருக்காக அவற்றை நடத்தகிறாரோ அவர்களே அவரை புறக்கணிப்பது கண்டு புலம்பித் தவிக்கும் காட்சிகளில் நடிப்பில் பர்ஸ்ட் மார்க் வாங்குகிறார் குருசோமசுந்தரம்.

கழிப்பறை இருக்கும் வீட்டில் தான் கல்யாணம் செய்வேன் என்கிற கனவுடன் வாழ்க்கையைத் துவக்கி கழிப்பறை மூலமாகவே தனது பரிதாபமான முடிவைத் தேடிக்கொள்ளும் மல்லிகா கதாபாத்திரத்தை அழகாக பிரதிபலித்திருக்கிறார் ரம்யா பாண்டியன். அடுத்து குருசோமசுந்தரத்தின் பக்கபலமாக போராட்ட வீர்ர்களாக வரும் பெரியவர் மு.இராமசாமி மற்றும் இளம் விதவை காயத்ரி கிருஷ்ணா போன்றவர்களை இன்னும் ஏதோ சில நகரங்களில் சகமனிதர்களுக்காக தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருப்பதை நாம் அடிக்கடி இப்போதும் பார்க்கலாம்.

ஷான் ரோல்டனின் இசையில் அதிகார வர்க்கத்தைச் சாடும் “என்னங்கடா உங்க சட்டம்” பாடல் எளிமை, இனிமை. சகமனிதனின் எளிய வாழ்க்கை முறையைக் கூட அரசு இயந்திரம் எப்படி சிதைத்து விடுகிறது என்பதையும், சாமானிய மனிதனின் சமநீதி உரிமையை அதிகார வர்க்கம் எப்படி புறக்கணிக்கிறது என்பதையும் காட்சிப் படிமங்களின் மூலம் விளக்க முற்பட்டிருக்கிறார் இயக்குனா ராஜூ முருகன். திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பை ஏற்றியிருந்தால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருப்பான் இந்த ஜோக்கர்.