கபாலி – விமர்சனம்

நீண்ட நாளைக்கு பிறகு ரஜினி தனது வயதிற்கேற்ற கதையுடன் கேங்க்ஸ்டராக மிரட்டியிருக்கும் படம் ‘கபாலி’.

சிறையில் தனது அறையில் இருந்து வெளியேறுவதற்கு முன் வாசல் கம்பியை பிடித்து தொங்கியபடி இரண்டுமுறை புல் அப்ஸ் எடுத்துக்கொள்கிறாரே.. இத்தனை வயதிலும் ‘கபாலி’யின் வீரம் குறையவில்லை என்பது அந்த ஒரு காட்சியிலேயே விளங்கி விடுகிறது.

மாணிக்கம்-அன்வர் பாட்ஷா நட்பு போல கபாலி-அமீர் என்கிற ரஜினி-ஜான் விஜய்யின் நட்பு இதிலும் மிக அழகாக காட்டப்பட்டுள்ளது.. இதுநாள் வரை வில்லனாக, கோமாளி காமெடியனாக நாம் பார்த்து வந்த ஜான் விஜய்க்கு ஆயுசுக்கும் மரியாதை செய்திருக்கும் படம் இது.

சிறையில் இருந்து ரிலீஸாகி தனது மனைவி பற்றிய விபரம் தேடிவரும் ரஜினியிடம் எகத்தாளமாக மைம் கோபி பேசுவதும், வழக்கமாக காரோட்டும் ஜான் விஜய்யை மாறி உட்கார சொல்லிவிட்டு, ட்ரைவர் சீட்டில் உட்காரும் ‘கபாலி’ மைம் கோபியை கைலாசத்துக்கு அனுப்புவதும் செம.

வில்லனின் இடதுகை ஒருவன் வெகு கிண்டலாக ‘கபாலி’யை காலாய்த்தபடி பேசி திடீரென அவரை தாக்க முயல, முழுக்கை சட்டைக்குள் இருக்கும் ஆயுதத்தை திடீரென எடுத்து எதிரியை அட்டாக் பண்ணிவிட்டு ‘கபாலிடா’ என ரஜினி வசனம் பேசுவது ஸ்டைல்.

ரஜினியிடம் அடியாளாக சேரும் அட்டகத்தி தினேஷ், ரஜினிக்கு பாதுகாவலனாக தன்னை காட்டிக்கொள்ள எடுக்கும் தடபுடல்கள் காமெடி ரகமாகவும் கபாலிக்காக உயிர்விடும் காட்சிகள் சீரியசாகவும் நம் மனதை தைக்கின்றன. தினேஷுக்கு இது முக்கியமான படம்.

தந்தையை கொன்றது கபாலி தான் என மனதிற்குள் பொருமியபடியே வலம் வரும் கலையரசன், மனநிலை பிறழ்ந்தவர் போல ரஜினியை அப்பா என அழைத்து பரவசப்படும் ரித்விகா என மெட்ராஸ் ஜோடி இதிலும் நம்மை தனித்தனியாக ரசிக்க வைக்கிறார்கள். மலேசிய தமிழ் தலைவராக கொஞ்ச நேரம் வந்தாலும் நாசரின் நடிப்பு நிறைவு.

மனைவி உயிரோடு இருக்கிறாளா இல்லையா என தேடும் ரஜினியிடம் எதிர்பாராத விதமாக அவரின் ஒரிஜினல் மகளாக தன்ஷிகா கொடுக்கும் அந்த என்ட்ரி சூப்பர்.. படம் முழுவதும் ரஜினியை செல்லமாக மிரட்டியபடி பாந்தமாக வலம் வரும் ராதிகா ஆப்தேவுக்கு திருஷ்டி சுத்தி போடத்தான் வேண்டும்.

தனது மனைவி உயிரோடு இருக்கிறாள் என தெரிந்து மகளுடன் சேர்ந்து அவரை தேடி, அவரை காணும் அந்த கடைசி நிமிடம் வரை ரஜினியிடம் தென்படும் ஏக்கம், பதைபதைப்பு எல்லாம் சேர்ந்து அவரை கண்டுகொண்டபின் காட்டும் ‘மகிழ்ச்சி’.. நமக்கும் மகிழ்ச்சியே..

ரஜினி சிங்கமென சீறிப்பாய தயாராகும்போதெல்லாம் பின்னணி இசையில் சைரனை அலறவிட்டு ‘நெருப்புடா’ என டெம்போ ஏத்துகிறாரே சந்தோஷ் நாராயணன்.. அது மட்டும் தான் படத்தில் இவர் செய்த உருப்படியான வேலை.. மற்ற அனைத்தும் சொதப்பல்..

வழக்கமான ரஜினி ரசிகனாக படம் பார்க்க வந்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தாலும், அட தலைவரை இப்படியெல்லாம் கூட பார்க்கமுடியுமா என ரஜினியை வெளிக்கொணர்ந்த இயக்குனர் ரஞ்சித் பாராட்டுக்குரியவரே.. எனினும் அட்டகத்தி, மெட்ராஸ் போன்று சுவாரஸ்ய களத்திற்கு நம்மை இழுத்து கொண்டு போக தவறிவிடுகிறார் ரஞ்சித். ரஜினி படம் போன்று மசாலா படமாக இல்லாமலும் இருப்பது சிறிது ஏமாற்றமே..

என்றாலும் ரஜினி என்ற மெகா நடிகனுக்காக அவரை புது தோற்றத்தில் பார்க்க ஆசைப்படுகிறவர்கள், இது ரஜினி படம் என்ற நினைவு இல்லாமல் தியேட்டருக்கு சென்று ஒரு முறை ரசித்து வரலாம் இந்த கபாலியை..