கிடாரி – விமர்சனம்


ஊருக்குள் கட்டப்பஞ்சாயத்து, காண்ட்ராக்ட், சொத்து கைமாற்றுதல் என சகல விஷயங்களையும் தனது கைக்குள் வைத்திருப்பவர் கொம்பையா பாண்டியன். அவருக்கு விசுவாசமான தளபதியாக இருப்பவன் யாருமற்ற அனாதையான கிடாரி.. கொம்பாவையின் மேல் ஒரு சிறு கீறல் கூட விழாமல் பாதுகாக்கிறான் கிடாரி.. அவனையும் மீறி கொம்பையா ஒருநாள் கொலை தாக்குதலுக்கு ஆளாகிறார்..

கொம்பையாவை கொலைசெய்ய முயன்றது யார் என வெறியுடன் ஒவ்வொரு ஆளாக பழைய பகையாளிகளை சந்தேகப்படும் கிடாரிக்கு, கொம்பையா பாண்டியன் பற்றி மேலும் சில புதிய உண்மைகளும் தனது பிறப்பு பற்றிய உண்மையும் தெரிய வருகிறது.. அதிர்ச்சியாகும் கிடாரி இறுதியில் என்ன முடிவெடுத்தான் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

கொஞ்சம் ஜில்லா, கொஞ்சம் விஜயகாந்தின் பெரியமருது, கொஞ்சம் ஜீவாவின் திருநாள் ஆகியவற்றை மிக்ஸ் பண்ணி புதிதாக இரண்டு டிவிஸ்ட்டுகளை சேர்த்து, அதற்கு கொம்பன் முலாம் பூசினால் அதுதான் ‘கிடாரி’.. புரியவில்லை என்றால் படம் பார்க்கும்போது தன்னால் புரியும்..

விசுவாசி கேரக்டருக்கு சசிகுமார் செம பிட்.. கத்தியை எடுத்தால் நேபாள கூர்க்கா போல ரத்தம் பார்க்காமல் வைக்க மாட்டேன் என்கிறாரே.. ஆனால் அவர் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு போகும்போது ஒரு பில்ட் அப் ஏற்றுகிறார்களே சாமி.. கொஞ்சம் ஓவர்தான். வெற்றிவேல் படத்தில் கதாபாத்திரமாக நடித்திருந்த நிகிலா விமலை இதில், டிவி.எஸ்-50, சசிகுமாருடன் முத்தம் என நடை, உடை, பாவனைகளில் அப்படியே நாடோடிகள் அனன்யாவாகவே மாற்றியிருக்கிறார்கள்.. என்ன புதுமையோ..?

கொம்பையா பாண்டியனாக வரும் வேலா ராமமூர்த்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம்.. படம் முடிவதற்குள்ளாகவே ஐயா நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா என பலமுறை நம்மை கேட்க வைத்துவிடுகிறார். இறுதிக்காட்சிகளில் கொஞ்ச நேரமே வந்தாலும் நெப்போலியனின் நடுப்பில் இன்னும் அந்த மிடுக்கு குறையவில்லை.. அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிட்டார். ஜோக்கர்’ மு.ராமசாமி, சுஜா வாருணி, ஓ.ஏ.கே.சுந்தர் என பல உபரி நட்சத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை..

தர்புகா சிவாவின் இசை பெரிய அளவில் மனதை தைக்கவில்லை.. இயக்குனர் பிரசாந்த் முருகேசன் கதைக்களத்தை மாற்றாவிட்டாலும் கூட, சின்னச்சின்ன விஷயங்களில் ‘அட பரவாயில்லையே’ என சொல்லவைத்திருக்கிறார்.. திரைக்கதையிலும் அதை காட்டியிருந்தால், கிடாரி செம விருந்து வைத்திருப்பான்.