கிருமி – விமர்சனம்

போலீஸ் இன்பார்மர்களின் வாழ்க்கையை வேறொரு கோணத்தில் அலசும் படம் தான் இந்த ‘கிருமி’..

ரேஷ்மி மேனனை திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்கு தந்தையான பின்னும் கூட வேலைவெட்டி எதுவும் இல்லாமல் வீட்டுக்கு கூட சரிவர போகாமல் ஊர் சுற்றுகிறார் ‘மதயானைக் கூட்டம்’ கதிர்.. அவருக்கு போலீஸ் இன்பார்மரான சார்லி மூலமாக, போலீஸ் நண்பர்கள் குழுவில் வேலை கிடைக்கிறது.. இந்த நோ பார்கிங் ல இருக்கிற பைக், கார்களுக்கு லாக் போடறது.. குடிச்சிருக்கியா இல்லையானு செக் பண்ற மாதிரியான ஒரு அல்லக்கை வேலைதான் என்றாலும் தானும் ஒரு போலீஸ் தான் என்ற மிதப்புடன் திரிகிறார் கதிர்..

அந்த கெத்தில் பலரையும் போட்டுக்கொடுத்து போலீசில் மாட்டிவிடும் கதிர், பக்கத்து ஸ்டேஷன் லிமிட்டை சேர்ந்த பார் நடத்தும் தென்னவனையும் தனது இன்ஸ்பெக்டரிடம் மாட்டிவிடுகிறார்.. ஆனால் அந்த இரண்டு இன்ஸ்பெக்டர்களும் நட்பாகிவிட, இப்போது சிக்கல் கதிருக்கு எதிராக திரும்புகிறது. அதில் இருந்து அவர் தப்பித்தாரா..? இல்லை அந்த வேலைக்காக தன்னை காவு கொடுத்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

போலீஸுடன் அதீத நட்பு காட்டுவது என்றைக்காவது ஆபத்தில் தான் முடியும் என்பதை கதிர் தனது கதாபாத்திரம் மூலம் பிரதிபலிக்கிறார்… இல்லையில்லை பயம் காட்டியுள்ளார். தனக்கு கிடைக்கும் சின்னச்சின்ன மரியாதைகளை வைத்து போலீஸ் ஆகிவிட்டதாகவே நினைத்து பூரிக்கும்போதும், அதே போலீஸ் தனக்கு எதிராக திரும்பியதும் உயிருக்கு பயந்து ஓடும்போதும் ஒரு போலீஸ் இன்பார்மரின் நிலையை ஜஸ்ட் லைக் தட், உணர்த்திவிடுகிறார்..

அட.. ஒரு குழந்தைக்கு அம்மாவாக ரேஷ்மி மேனன்.. ஆனால் அதை தனது நடிப்பால் நம்பவைத்து ஈடுகட்டுகிறார் ரேஷ்மி.. இன்னொரு இன்பார்மராக வரும் சார்லி, கதிரை “வேணாண்டா.. ரொம்ப ஓவரா போகாதடா” என எச்சரித்துவிட்டு, அவருக்காக தன் உயிரை பலிகொடுக்கும்போது நெகிழ வைக்கிறார்.

இவங்கதான்யா ஒரிஜினல் போலீஸ் என்கிற விதமாக கச்சிதமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது டேவிட் மற்றும் மாரிமுத்து இருவரின் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரங்கள்.. ‘கே’யின் இசையில் ‘நாணல் பூவாய்’ பாடலும் படமாக்கப்பட்ட விதமும் அருமை. காட்சிக்கு காட்சிக்கு தனது ஒளிப்பதிவாலும் விறுவிறுப்பை கூட்ட முடியும் என நிரூபிக்கிறது அருள் வின்சென்ட்டின் கேமரா..

படத்தின் பலம் மணிகண்டனின் நேர்த்தியான, சில சமயம் சாட்டையாய் வீசுகின்ற வசனங்கள்.. மணிகண்டனின் கதைக்கு உயிரோட்டம் கொடுத்து படமாக்கியுள்ளார் இயக்குனர் அனுசரண்.. படத்திற்கான நடிகர்கள் தேர்வு சோடைபோகவில்லை.. திரைக்கதையில் முன் பாதியில் இருக்கும் வேகம் இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் குறைகிறது. எனினும் போலீஸ் எனும் ‘கிருமி’களுடன் நாம் பார்த்து தான் பழக வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை நம்மிடம் விதைக்க தரவில்லை இயக்குனர்.

மொத்தத்தில் இந்த கிருமி கொஞ்சம் வீரியம் குறைவான கிருமி தான்.

Verdict: 2.8/5