மாரி – விமர்சனம்

சண்முகராஜனின் வலது கை தனுஷ்.. இன்னொரு கை மைம் கோபி.. புறா பந்தயம் நடத்துவது, செம்மரம் கடத்துவது என தனுஷ், அந்த ஏரியாவின் தாதாகவாக வலம் வர அவரிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறார் மைம் கோபி. தனுஷ் ஏரியாவுக்கு புதிதாக குடிவந்து, வீட்டிலேயே துணிக்கடை ஆரம்பிக்கும் காஜல் அகர்வாலுக்கு தனுஷ் தேவையில்லாத டார்ச்சர் கொடுக்கிறார்.

அதிலிருந்து தப்பிக்க எஸ்.ஐ விஜய் யேசுதாஸின் உதவியை நாடுகிறார் காஜல். தனுஷ் செய்ததாக சொல்லப்படும் ஒரு கொலையை தோண்டித்துருவி, காஜலின் மூலமாக தனுஷை சிக்கவைக்கும் விஜய் யேசுதாஸ், சண்முகராஜனையும் தனுஷையும் ஜெயிலுக்கு அனுப்புகிறார். மைம் கோபி, எஸ்.ஐயின் உதவியுடன் தாதாவாக மாறுகிறார்.

ஜெயிலில் இருந்து திரும்பிவரும் தனுஷ், நிலைமை மாறியிருப்பதை கண்டு அமைதியாக வேறு பகுதிக்கு போக நினைக்கிறார். ஆனால் மைம் கோபியின் ஆட்கள் அவரை தேவையில்லாமல் சீண்ட, அவர்களை அடித்து நொறுக்கிவிட்டு மீண்டும் ஏரியாவுக்குள் கால்வைக்கிறார் தனுஷ். தொடர்ந்து விஜய் யேசுதாசுக்கும் தனுஷுக்குமான மோதல் சூடு பிடிக்க, யார் கை ஓங்குகிறது என்பது க்ளைமாக்ஸ்.

தனுஷ் எப்பவாவது ஒரு தடவை கெத்து காட்டினால் ரசிக்கலாம்.. எப்பவுமே கெத்து காட்டுவதாக நினைத்துக்கொண்டு, எந்நேரமும் சிகரெட் பிடித்தபடி, தண்ணியடித்தபடி ஏரியாவுக்குள் வலம் வரும் தனுஷை, அவரது ரசிகர்களுக்கே போரடிக்கும் விதமாக காட்டியுள்ளார் இயக்குனர் பாலாஜி மோகன். காஜல் அகர்வால் தனுஷை வெறுத்தாலும் கூட தன் வெட்டிவிட, தனுஷ் வீட்டின் மொட்டை மாடியே கதி என்று கிடக்கிறார்.. அதுவும் இரவு பகல் என நேரம் காலம் இல்லாமல் வந்து போவது என்ன லாஜிக்கோ..?

எந்த ஊரில் இன்னும் இப்படி அப்பட்டமாக மாமூல் வசூலிக்கிறார்கள் பாஸ்..? அதெல்லாம் பாட்ஷா காலத்திலேயே ஆனந்தராஜோடு முடிந்துவிட்டது என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தோம்..? முதல் காட்சியில் தனுஷிடம் அடிவாங்கும் அடியாட்கள், அடுத்த காட்சியிலும் அவர் முன்னாடியே திரும்பவும் வசூல் பண்ண வருவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

ஆரம்பத்தில் இருந்து புறா பந்தயத்தை பற்றிய பில்டப்பை கொடுத்துவிட்டு, புறாவை டைவ் அடிக்க விடுவதோடு நிறுத்திக்கொண்டு விட்டார்கள். விஜய் யேசுதாஸ் பார்க்க நன்றாக இருந்தாலும் போலீஸ் கேரக்டர் அவருக்கு பொருந்தவே இல்லை. அதிலும் டயலாக் டெலிவரி பண்ணும்போது சிரமப்படுகிறார்.. நம்மையும் சிரமப்படுத்துகிறார்.

கதை சென்னைக்குள் நடக்கும் கதையா, வெளியூரில் நடக்கும் கதையா என்பது ரொம்ப நேரம் வரைக்கும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஒரு காட்சியில் திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேசன் என்கிற போர்டை பார்த்ததும் தான் அட சென்னையில் தான் கதை நடக்கிறதா என்கிற சந்தேகமே விலகுகிறது. அந்த அளவுக்கு தனுஷ் படத்தை ஒரே ஒரு செட்டுக்குள் வைத்து முடித்துவிட்ட பெருமையை பாலாஜி மோகன் தட்டிச்செல்கிறார்.

படத்தின் ஆறுதல் என்றால் தனுஷின் அல்லக்கைகளாக வரும் ரோபா சங்கர் மற்றும் அடிதாங்கி வினோத்தின் சேஷ்டைகளும் டைமிங் டயலாக்குகளும் தான். அனிருத்தின் இசை போரடிக்க ஆரம்பிப்பதை இதில் நன்றாகவே உணரலாம்.

பாலாஜி மோகன் தான் மூன்று ஸ்கிரிப்ட் எழுதியதாகவும், அதில் தனுஷுக்கென்றே ஒரு ஸ்கிரிப்ட்டை எழுதியதாகவும் சொல்லி தனுஷிடம் மூன்றையுமே கொடுத்தாராம். தனுஷ் மூன்றையும் படித்துவிட்டு, அதில் தனக்காக எழுதிய ஸ்கிரிப்ட் எது என்று அவராகவே கண்டுபிடித்து அதை படமாக பண்ணலாம் என ஒகே சொன்னாராம்..

ஆக யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது என்பது தனுஷ் விஷயத்தில் உண்மையாகிப்போனதுதான் பரிதாபம்.