மய்யம் – விமர்சனம்

பணக்காரர் ஒருவரின் மகளான சுஹாசினி குமரன் தான் காதலிக்கும் நவீன் சஞ்சயை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறுவதாக காதலனுக்கும் திருமண ஏற்பாடுகளை கவனிக்கும்படி நண்பன் குமரன் தங்கராஜுக்கும் தகவல் அனுப்புகிறார். இந்த நிலையில் திருமண செலவுக்காக நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுக்க நுழைகிறார்கள் நண்பர்கள் இருவரும்..

இவர்களது செல்போனை தட்டிவிட்டு உடைத்த ஜெய் குஹேனியும் அங்கே பணம் எடுக்க வருகிறார். மூவரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் அதே நேரத்தில் ஏ.டி.எம் மையத்தை விட்டு கொஞ்சம் தள்ளி ஒரு முரட்டுத்தனமான இளைஞன் இவர்கள் வெளியே வரட்டும் என கொலைவெறியுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறான். அவனை விசாரிக்கப்போன காவலாளியை அடித்து கொல்கிறான். சற்று நேரத்தில் போலீஸ் ஒருவர் வர அவரையும் கொல்கிறான்.

பயத்தினால் ஏ.டி.எம் அறையிலேயே அமர்ந்துவிடும் இந்த மூவருக்கும் அதனுடன் இணைந்த பக்கத்து அறையில், இன்னொரு காவலாளி ரோபோ சங்கர் இருப்பது தெரிய வருகிறது. அவரை அவரது குடிகார நண்பன் முருகானந்தம் கோபத்தில் அறைக்குள் வைத்து வெளியே பூட்டிவிட்டு சென்று விட்டதால் ரோபோ சங்கரால் வெளியே வந்து உதவ முடியாத நிலை.

அந்தப்பக்கம் இருந்துகொண்டே வெளியே இருக்கும் கொலைகாரனை சமாளிக்க சில சொதப்பலான ஐடியாக்கள் கொடுக்கிறார். அனைத்தும் தோல்வியில் முடிகிறது. ஒரு கட்டத்தில் ஏ.டி.எம் மையத்திற்குள்ளேயே அந்த கொலைகாரன் நுழைய மூவரும் சேர்ந்து அவனை தாக்கி கொல்கிறார்கள்.. ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் அந்த கொலைகாரன் வெளியே நடமாடுவதை பார்த்து அதிர்ச்சியாகிறார்கள்.

அப்படியானால் இங்கே இவர்கள் கொலைசெய்தது யார்.. வெளியே நிற்கும் கொலைகாரன் ஏன் உள்ளே வராமல் வெளியே உலாவுகிறான், இவர்களால் அவனை மீறி ஏ.டி.எம் மையத்தில் இருந்து தப்பிக்க முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

படத்தில் என்ன புதுமை என்றால், இந்தப்படத்தின் இயக்குனர் முதல் அனைத்து டெக்னீசியன்கள் வரை தற்போது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்கள் என்பதுதான். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பொறியியல் படிக்கும் மாணவரான ஆதித்யா பாஸ்கரன் என்பவர் தான் இந்தப்படத்தின் இயக்குனர். கதையையும் திரைக்கதையையும் கூடவே காசையும் கொடுத்து இந்தப்படத்தை ஏ.பி.ஸ்ரீதர் என்பவர் தயாரித்துள்ளார்.. அது மட்டும் தான் புதுமை.

படிக்கும் மாணவர்களை ஒழுங்காக படிக்க விட்டுவிட வேண்டுமே தவிர எந்த அனுபவமும் இன்றி படம் எடுத்து சாதனை படைக்கிறேன் என இறங்கினால் அதற்கு உதாரணம் தான் இந்த மய்யம். சரி இளைஞர்களிடம் பொறுப்பை ஒப்படைத்த தயாரிப்பாளர் கதையையும் அவர்களையே எழுத சொல்லி ஒதுங்கியிருக்கலாம். கொஞ்சமாவது தேறியிருக்கும்..

ஆளே இல்லாத இடத்தில் காட்டுக்குள் அமைந்திருக்கும் ஏ.டி.எம் மையமே கதையின் நம்பகத்தன்மையை குறைத்து விடுகிறது. ஏ.டி.எம் மையத்திற்குள் மாட்டிக்கொண்டது அவர்களா இல்லை தியேட்டருக்குள் மாட்டிக்கொண்டது நாம் தானா என்கிற சந்தேகத்தை வெளியில் வந்ததும் பட்டிமன்றம் போட்டு பேசும் அளவுக்கு நாயகர்கள் இருவரும் ரோபோ சங்கரும் சேர்ந்து போடும் பிளேடு டைப் காமெடி தாங்க முடியவில்லை.

மூவரும் பேசியே கொல்கிறார்கள். வெளியே கொலைகாரன் நிற்கிறான் என்பது தெரிந்தும் கூட அந்த சூழலில் எப்படி ஐயா காமெடி பண்ண மனசு வரும்..? இதாவது பரவாயில்லை தெரியாமல் ஒருத்தனை கொலைசெய்துவிட்டு அந்த டெட்பாடி உள்ளே கிடக்கும்போதே மீதிப்படத்திற்கும் காமெடி என்கிற பெயரில் தாளிக்கிறார்கள்.. அதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை..

பாவம் நம்மைப்போல கதாநாயகி ஜெய் குஹேனியும் அவர்களிடம் மாட்டிக்கொண்டதால் அவரை குறைசொல்ல மனம் வரவில்லை. படத்தில் ஆறுதலான ஒரே விஷயம் என்னவென்றால் குடிகாரராக வரும் முருகானந்தத்தின் சலம்பல்கள் தான். ஒரே அறைக்குள் நடக்கும் கதையை வைத்து எத்தனையோ ஹாலிவுட் படங்கள் வெளியாகி நம்மை மிரட்டியிருக்கின்றன. அதில் பத்தில் ஒரு பங்கு தாக்கத்தை கூட இந்தப்படம் ஏற்படுத்தவில்லை.

இறுதியில் இவர்களை அவ்வளவு நேரம் மிரட்டிய கொலைகாரன் ஒரு ஆவி என்றும், இவர்களை காப்பாற்றவே ஏ.டி.எம் மையத்தை விட்டு இவர்களை வெளியேற விடாமல் தடுத்தது என்றும் அதற்கு ஒரு பிளாஸ்பேக் சொல்லி, கதையை முடித்தபோதுதான் உண்மையாகவே சிரிப்பு வருகிறது..

ஆக இந்த மூன்று பேரையும் பாதுகாக்கிறேன் பேர்வழி என, தேவையில்லாமல் அவர்களை ஒரு கொலையை செய்ய வைத்து ஜெயிலுக்கு அனுப்புவதா உதவி..? அய்யா கதாசிரியரே கதை பண்ணுவது வேறு.. கதைவிடுவது வேறு..

மொத்தத்தில் “சேர்ந்து பொழைக்கலாம்னு சின்னாயாள கட்டி, கூடிப்பொழைக்கலாம்னு கொழுந்தியாள கட்டி..”ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்களே அது இந்தப்படத்திற்குத்தான் சரியாக பொருந்தும்.