மாப்ள சிங்கம் – விமர்சனம்


கிராமத்து திருவிழாவில் தேர் இழுப்பார்கள் என்பதும். அந்த தேரை இழுப்பதற்கு இரண்டு ஊர்க்காரர்கள் உரிமை கொண்டாடுவார்கள் என்பது பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் தானே..? அதனால் ரெண்டு ஊருக்கும் பகை, இந்த ஊர் பெரிய மனிதர் வீட்டுப்பெண்ணை, அந்த ஊர் பெரியமனிதர் வீட்டு பையன் காதலிப்பான் அல்லவா..? அப்படி காலங்காலமாக பார்த்து வந்த டிபிகல் சினிமா கிராமத்து கதைதான் இந்த மாப்ள சிங்கம் படமும்..

தன் தம்பி மகனான விமலை தனது வாரிசாகவே வளர்க்கிறார் கிராமத்து சேர்மன் ராதாரவி. இரண்டு ஊர்களுக்கும் இடையே பல வருடங்களாக தேர் இழுக்கும் உரிமை பிரச்சனை இருக்கும் நிலையில் ராதாரவியின் மகள் மதுபாலா, அடுத்த ஊர் ஜெயபிரகாஷின் மகன் விஷ்ணுவை காதலிக்கிறார். ஊரில் யார் காதலித்தாலும் பெரியப்பாவின் ஆலோசனைப்படி காதலை பிரித்துவைக்கும் விமலுக்கு இந்த காதல் விஷயம் தெரிய வருகிறது.

வழக்கம்போல தகராறு செய்யப்போன இடத்தில் விஷ்ணுவின் தங்கையான வக்கீல் அஞ்சலி மீது விமலுக்கு லவ் ஸ்டார்ட் ஆகிறது.. இதனால் தங்கையின் காதலுக்கு சப்பரத் பண்ணுகிறார் விமல். இந்தநிலையில் மகளுக்கு வேறு மாப்பிள்ளை நிச்சயம் பண்ணுகிறார் ராதாரவி.. பிறகென்ன வழக்கம்போல சில பல களேபரங்களுக்குப்பின் ஜோடிகள் ஒன்று சேர்கிறார்கள்.. இரன்று ஊர்க்காரர்களும் ஒன்றுகூடி தேரை இழுக்கிறார்கள் என்பதை சொல்லித்தான் தெரியவும் வேண்டுமோ..?

களவாணி வழக்கமாக அணியும் கிராமத்து சண்டியர் என்கிற சட்டையைத்தான் இதிலும் விமல் அணிந்திருக்கிறார். என்ன கொஞ்சம் அயர்ன் பண்ணி அணிந்திருக்கிறார் அவ்வளவுதான்.. எதிர் தரப்பு ஆட்களிடம் துள்ளுவதும், அஞ்சலியை பார்த்ததும் அப்படியே பம்முவதும், சில நேரங்கில் சிறுபிள்ளைத்தனமாகவும் பல நேரங்களில் பொறுப்பாக பேசுவதும் என பாஸ்மார்க் வாங்குகிறார். ஜாடிக்கேத்த மூடியாக சண்டிராணியாக அஞ்சலியும் பிட் ஆகிறார்..

கதையை கலகலப்புடன் நகர்த்துவதில் விமலில் நண்பர்களாக வரும் சூரி, காளி வெங்கட், வெள்ளைக்கார ட்ரைவராக வரும் பெல் என மூவர் கூட்டணி முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் நம்ம கிராமத்து மக்களின் கோமாளித்தனமான செயல்பாடுகளை அந்த வெள்ளைக்கார இளைஞர் குத்திக்காட்டுவதும் அதற்கு விமல், சூரி இருவரும் எரிச்சலாவதும் சரியான காமெடி. இன்னொரு பக்கம் எதிர் தரப்பில் அஞ்சலியின் முறைமாமனாக வரும் முனீஷ்காந்தும் தனது பங்குக்கு காமெடியில் கியர் மாற்றி எகிறுகிறார்.

அந்தஸ்து, கெளரவம் பார்க்கும் கேரக்டர் என்றால் ராதாரவிக்கு சொல்லியா தரவேண்டும். கலெக்டராக இரண்டு காட்சிகளில் வந்தாலும் பாண்டியராஜன் ‘நச்’. ஆபீஸ்’ புகழ் மதுபாலா துருதுருவென கவனம் கவனம் ஈர்க்கிறார். ரகுநந்தனின்‘ இசையில் ‘எதுக்கு மச்சான் காதலு’ பாடல் ஆட்டரகம். தருண் பாலாஜியின் ஒளிப்பதிவு கிராமத்து இயல்பை அப்படியே அள்ளி வந்திருக்கிறது…

படத்தில் கலகலப்பான விஷயங்கள் என பல இருந்தாலும், அவை எல்லாமே பார்த்து சலித்த கதையில், பார்த்து சலித்த காட்சிகளின் புது வடிவம் தான் என்பதால் புதுமை என எதையும் சொல்லமுடியவில்லை. கலகலப்பான படத்தை தர முயற்சித்து கதையில் கவனம் செலுத்தாமல், காமெடியில் கொஞ்சம் கவனிக்க வைத்து ஓரளவு சிரிக்கவைத்து அனுப்புகிறார் இயக்குனர் ராஜசேகர்..