மசாலா படம் – விமர்சனம்

மசாலா படங்களாக எடுத்து வெற்றிகரமாக நாற்பது வருடம் தயாரிப்பாளராக வலம்வரும் தயாரிப்பாளர் வெங்கட்ராமன். படம் பார்க்கும்போதே படுமொக்கை என ஸ்டேட்டஸ் போட்டு கலாய்க்கும் நான்கு இளைஞர்களால் இவர் எடுக்கும் மசாலா படங்களை ஜீரணிக்க முடியவில்லை.

ஒரு டிவி சேனல் நிகழ்ச்சியில் இந்த இரு தரப்பும் சினிமாவை பற்றி காரசாரமாக விவாதிக்க, முடிவில் நீங்கள் விரும்புகிற மாதிரி, அதேசமயம் நம்ம ஆடியன்ஸுக்கு பிடிக்கிற மாதிரி ஒரு கமர்ஷியல் கதையை ஆறு மாதத்திற்குள் தயார் செய்துகொண்டு வந்தால் அதை படமாக எடுக்க தயார் என சவால் விடுகிறார் வெங்கட்ராமன்..

ரியாலிட்டியாக சினிமா எடுக்கவேண்டும் என நினைக்கும் இந்த டீம் கதை லைவ் ஆக இருக்கவேண்டும் என்பதற்காக யதார்த்த வாழ்வில் மூன்றுவிதமான மனிதர்களை பாலோ செய்கிறது. அரசியல்வாதியின் கையாளாக ஊரையே மிரட்டும் ரவுடி பாபிசிம்ஹா, மார்க்கெட்டிங் வேலை, மாத சம்பளம் என வண்டியோட்டும் மிடில் கிளாஸ் சிவா, பெற்றோர் இல்லாமல் இஷ்டம்போல வாழத்துடிக்கும் பணக்கார இளைஞன் க்ரிஷ் இந்த மூவரை டார்கெட் பண்ணுகிறார்கள்.

இந்த மூவருக்கும் இணைப்பாக ஒரு நபர் இருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடுமே என, தங்களுக்கு தெரிந்த வீடியோ ஜர்னலிஸ்ட்டான சாந்தி தேவியை தங்களது திட்டத்திற்கு உடன்பட சொல்கிறார்கள்.. அவருடம் அந்த மூவருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்களுடன் பழகி அதில் கிடைக்கும் யதார்த்த விஷயங்களை இவர்களிடம் சொல்ல, அதன்மூலம் கதையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் அந்த மூவரும் சாந்தி தேவியிடம் காதல் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் பாபி சிம்ஹா போலீசாரால் சுட்டுக்கொல்லப்படுகிறார். மற்ற இருவரையும் இனியம் தன்னால் ஏமாற்ற முடியாது என வெளியூர் கிளம்புகிறார் சாந்திதேவி..

தங்களால் நினைத்தபடி கதையை உருவாக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு வெங்கட்ராமனிடம் சரணாகதி அடைகின்றனர் இந்த இளைஞர் டீம். ஆனால் அவர்களிடம் நடந்த விஷயங்களை கேட்டுக்கொண்ட வெங்கட் அதையே கருவாக வைத்து ஒரு மசாலா படம் எடுத்து ஜெயிக்கிறார். என்பதுதான் க்ளைமாக்ஸ்.

சோஷியல் மீடியாவில் படங்களை விமர்சிக்கும் நபர்கள் மீதுள்ள தனது கோபத்தை படத்தின் இயக்குனர் லக்ஸ்மண் குமார் ஒரு படமாகவே எடுத்திருக்கிறார். படத்தை விமர்சனம் செய்பவர்களால் படம் எடுப்பதற்காக கதைபண்ணவே முடியாது என அடித்து சொல்லியிருக்கிறார்.

படத்தில் ரவுடியாக வரும் பாபி சிம்ஹாவின் நடை உடை, பாவனை, டயலாக் டெலிவரி என அனைத்திலும் அவரை அறியாமலேயே ரஜினியின் சாயல் தெரிவது உண்மை.. மிடில் கிளாஸ் சிவா, மூன்று வரிகளுக்கு ஒரு காமெடி என போட்டு தாக்குகிறார். பட்டப்பகலில் கொலை சம்பவம் நடந்த இடத்தில் வீடியோவுக்கு வாண்டேடாக முகத்தை கண்பித்து, இது டிவியில் எப்ப சார் வரும் என கேட்கிறாரே, அது சிவாவால் மட்டும் தான் முடியும். காதல் கிறுக்கனாக வரும் க்ரிஷ் வசீகரிக்கிறார்.

மிகப்பெரிய அழகி என சொல்லமுடியாவிட்டாலும் சாந்தி தேவி கொடுத்த வேலையை அவரளவில் சரியாக செய்திருக்கிறார். தயாரிப்பாளராக வரும் வெங்கட்ராமனின் பேச்சு, பார்வை அனைத்திலும் தயாரிப்பாளர் மிடுக்கு கச்சிதமாக வெளிப்பட்டிருகிறது.

ஒரு கடைநிலை ரசிகன் திருப்தி அடையவேண்டும் என்றால் அவனுக்கு மசாலா படம் தான் செட்டாகும், அவன் ரசனை மாறாதவரை, மசாலா படங்களின் ஆதிக்கம் இருக்கும், படத்தை விமர்சிப்பவர்களால் நிச்சயம் ஒரு படத்தை எடுக்க முடியாது என இத்தனையையும் சொல்வதற்காகவே இந்த மசாலா படத்தை இல்லையில்லை.. இந்த பாடத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் லக்ஸ்மண் குமார். ஆனால் சி கிளாஸ் ஆடியன்சுக்கான படம் எப்படி இருக்கணும் என விளக்கும் இந்தப்படம் அந்த கடைநிலை ரசிகனுக்கு புரியுமா என்பது சந்தேகம் தான்..