ஓம் சாந்தி ஓம் – விமர்சனம்

கார் ஷோரூம் ஒன்றில் மேனேஜராக வேலைபார்ப்பவர் ஸ்ரீகாந்த்.. அவருக்கு அதே ஷோரூமில் வேலைபார்க்கும் நீலம் உபாத்யாயாவுடன் காதல். அதேசமயம் இதே நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைக்கு செல்ல முயற்சி செய்துவருகிறார் ஸ்ரீகாந்த். இந்தநிலையில் வயதான ஜூனியர் பாலாஜி, வினோதினி மற்றும் ஒரு சிறுவன், இளம்பெண், ஒரு அர்ச்சகர் உட்பட ஐந்து பேர் ஸ்ரீகாந்தை, அவர் போகும் இடங்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து செல்கிறார்கள்..

ஒருகட்டத்தில் இதை கவனித்த ஸ்ரீகாந்த் அவர்களிடம் விபரம் கேட்கிறார். அதில் ஜூனியர் பாலாஜியின் கோரிக்கையை ஏற்று, அவரது பத்து லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றிய நான் கடவுள் ராஜேந்திரனிடம் இருந்து புத்திசாலித்தனமாக மீட்டு, அவரது பேத்தியின் திருமணத்தை நடத்தி வைக்கிறார். வினோதினியின் மகன் இறந்துபோனது போலி மருந்தினால் தான் என்பதை அறிந்து அந்த கும்பலை போலீசிடம் ஒப்படைக்கிறார்.

அப்போதுதான் அவர்கள் ஐவரும் இறந்துபோய் நிராசையாக உலாவிக்கொண்டு இருக்கும் ஆத்மாக்கள் என்பதும் ஸ்ரீகாந்தின் கண்களுக்கு மட்டும் தான் அவர்கள் தெரிவார்கள் என்பதும் தெரியவருகிறது.. ஒரு விபத்தின்போது இறந்த இந்த ஐவரும் கடைசியாக பார்த்தது ஸ்ரீகாந்தை என்பதால், அவரை கடவுளாக நினைத்து அவரது உதவியை நாடியதாக சொல்கின்றனர்..

மீதி மூன்று பேருக்கு அவர்களின் கடைசி ஆசையை நிறைவேற்ற முயலும் ஸ்ரீகாந்துக்கு வெளியில் எதிரிகளால் ஏற்படும் சிக்கல்கள் ஒரு புறம் இருக்க, அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக சந்தேகிக்கும் காதலியால் இன்னொரு பக்கம் சிக்கல் ஏற்படுகிறது.. இவற்றை எல்ல்லாம் சமாளித்து மற்ற மூவருக்கும் உதவினாரா, காதலியை கைபிடித்தாரா என்பது க்ளைமாக்ஸ்,.

பேய், ஆவி இவைகள் வட்டமிட்டுக்கொண்டு இருக்கும் தமிழ்சினிமாவில் இவற்றில் எல்லாம் சேராமல், ஆசைகள் நிறைவேறாமல் இறந்துபோன ஆத்மாக்கள் என சாதுக்களான ஒரு புதிய பிரிவு ஒன்றை இந்தப்படத்தில் களம் இறக்கியிருக்கிறார்கள்.

ஒருபக்கம் இந்த கதையை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி இருந்தால் நன்றாக இருக்குமே என நினைக்கும் அதேவேளையில் இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்ட ஸ்ரீகாந்தின் தைரியத்தை பாராட்தித்தான் ஆகவேண்டும். ஸ்ரீகாந்த் ஆத்மாக்களுக்கு உதவி செய்வதெல்லாம் சரி.. ஆனால் ஒன்றாக வரும் ஐந்து பேரின் பிரச்சனையை ஒரே நாளில் கேட்டு முடிக்காமல், ஒவ்வொருத்தரின் பிரச்சனையாக முடித்துவிட்டு கேட்பது ஏன்..?

ஜூனியர் பாலையாவின் பேத்தி கல்யாணத்தை நடத்தும்போதே அவரை ஆத்மா என கண்டறியும் வாய்ப்புகள் ஸ்ரீகாந்துக்கு நிறைய இருந்தும் இயக்குனர் அதை வசதியாக மறைத்துவிடுவது எந்த விதத்தில் நியாயம்..?. கதாநாயகியாக வரும் நீலம் உபாத்யாயா (உபத்ரவம்யா என பெயர் வைக்காமல் விட்டார்களே) கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் தங்கச்சி மாதிரியே இருக்கிறார்.. டிபிகல் கதாநாயகின் வேலைதான் இவருக்கும். இதில் அவருக்கு அடிக்கடி குளோசப் வைத்திருப்பது… கஷ்டம்டா சாமி.

நான் கடவுள் ராஜேந்திரன் காமெடி, சீரியஸ் இரண்டு கலந்த வில்லன்.. ஸ்ரீகாந்தை தனது டாடி என சொல்லி அவர் பண்ணும் அலப்பரைகள் பரவாயில்லை. படத்தில் பொசுக்கு பொசுக்கு என பாடல்கள் வருவதை தடைபண்ணுவதற்கு ஏதாவது சட்டம் கொண்டுவந்தால் நல்லா இருக்கும்.. தேவையில்லாமல் திணிக்கப்பட்ட கல்யாண வீட்டு பாடல்காட்சியில் நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் இருக்க, வினோதினியின் மகன் இறந்துபோய் அவனது தந்தை கொல்லி வைக்கும் மயான காட்சியிலும், பேருந்து விபத்து காட்சியிலும் பேருக்கு கூட ஒரு எக்ஸ்ட்ரா ஆள் வைக்க முடியாமல் போனது என்ன கஷ்டத்தினாலோ தெரியவில்லை…?

காலாவதியான மருந்து விற்பனை, மெடிக்கல் சீட்டுக்கு பணம் வாங்கி கொண்டு நடத்தும் பிசினஸ் என சில நடப்பு மோசடிகளை தொட்டிருப்பதற்காகவும், க்ளைமாக்சில் இடம்பெறும் பேருந்து விபத்து காட்சியை ஓரளவு பிரமிக்க வைக்கும் வகையில் படமாக்கியதற்காகவும் இயக்குனர் சூர்யா பிரபாகர் மற்றும் ஒளிப்பதிவாளர் பாஸ்கரன் இருவரையும் பாராட்டலாம்.