ஓய் – விமர்சனம்


கிராமப்புறங்களில் முன்பின் அறிமுகமில்லாதவரை அழைப்பதற்கு ஓய்’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்கள்.. அதை டைட்டிலாக வைத்து ஒரு படத்தையே எடுத்தும் உள்ளார்கள் இப்போது.

கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து வேலை பார்ப்பவர் கீதன்.. இவருக்கும் மேலைநாட்டு மோக கொண்ட பாப்ரிகோஷுக்கும் காதல்.. திருமணம் செய்து இருவரும் வெளிநாட்டில் செட்டிலாகிவிட திட்டமிட்டிருந்த வேளையில் ஒரு பஸ் பயணத்தின்போது கீதனின் குடும்ப செயினை ஒருவன் பிக்பாக்கெட் அடிக்கிறான். கொலை செய்ததன் காரணமாக ஜெயிலுக்கு சென்று, அக்காவின் திருமணத்துக்காக, பரோலில் வெளிவந்து அதே பஸ்ஸில் ஏறும் ஈஷா, அதை கவனித்து திருடனிடமிருந்து நகையை காப்பற்றும் அதேசமயம் பஸ்ஸை கோட்டை விடுகிறார்.

பஸ்ஸில் கீதன் தனது ஊர் பற்றி சொன்ன விபரங்களை வைத்து கீதனின் கிராமத்துக்கு செல்கிறார் ஈஷா.. ஆனால் அங்கே உள்ள அனைவரும் இவரை பதில் பேசவிடாமல் கீதனின் காதலியாக தப்பர்த்தம் கொள்கின்றனர்.. ஈஷாவும் சூழ்நிலையால் உண்மையை சொல்லமுடியாமல் தவிக்கிறார். இந்த நிலையில் சென்னையில் இருக்கும் கீதனுக்கு தகவல் போக அவரும் ஊருக்கு வந்து, ஈஷா தன் காதலி இல்லை என சொல்லியும்கூட அதை யாரும் நம்ப மறுக்கின்றனர்.

ஆரம்பத்தில் உண்மையை சொல்ல நினைத்த ஈஷாவும், தனது அக்கா வீட்டுக்கு செல்ல முடியாத இக்கட்டான நிலையில் கீதனின் காதலி தான்தான் என அழுத்தமாக நாடகமாடுகிறார். கிராமத்தில் இரண்டு தரப்புக்கு திருவிழா நடத்துவதில் பிரச்சனை ஏற்பட, தன தந்தையின் மானத்தை காக்க எதிரியுடன் சிலம்பு சண்டையில் மோதவேண்டிய சூழல் கீதனுக்கு உண்டாகிறது.

அவரை உசுப்பேற்றி போட்டியில் கலந்துகொள்ளவைக்கும் ஈஷா, போட்டியில் கீதன் வென்றுவிட்டால், தான் ஊரைவிட்டு போய்விடுவதாக வாக்கு கொடுக்கிறார். இந்த சூழலில் கீதனின் காதலி பாப்ரிகோஷும் திடீரென கிராமத்துக்கு வந்து நிற்கிறார். இவர்கள் இருவரையும் எப்படி கீதன் சமாளிக்கிறார் என்பதையும், போட்டியில் ஜெயித்தாரா.? ஈஷா சொன்னபடி ஊரைவிட்டு கிளம்பினரா என்பது க்ளைமாக்ஸ்.

விக்ரமன் பாணியில் ஒரு கிராமத்து கதையை கொஞ்சம் லேட்டஸ்டாக படமாக்கினால் அதுதான் இந்த ‘ஒய்’.. நாயகன் கீதனை விட முழுப்படத்திலும் நம்மை கவன ஈர்ப்பு செய்பவர் நாயகி ஈஷா தான்.. காமெடி, சென்டிமென்ட், கொஞ்சம் ரொமான்ஸ் என புகுந்து விளையாடுகிறார்.. நாயகன் கீதன் ஓகேதான்.. இருந்தாலும் நடிப்பில் இன்னும் கொஞ்சம் யதார்த்தம் காட்ட மெனக்கெட்டிருக்கலாம்.

கீதனின் தந்தையாக வரும் நாகிநீடுவிடம் அளந்தெடுத்த பக்குவமான நடிப்பு.. சண்டியர் மீசையுடன் கிச்சுகிச்சு மூட்டும் அர்ஜுனன், தாத்தா சங்கிலி முருகன் என பலரது பங்களிப்பும் பரவாயில்லை.. படத்தின் இசை இளையராஜா என்பதை கிராமத்து கொட்டுமேளத்தை வைத்துதான் கண்டுபிடிக்க முடிகிறது. அந்த ‘பப்’பு பாடல் வேகவில்லை.

சுமாரான நாயகி பாப்ரி கோஷை கூட சில நேரங்களில் ‘அடடே’ என நம்மை கவனிக்க வைக்கிறது என்றால் அதற்கு வசனங்கள் முக்கிய காரணம்.. “வரும்போது மனசில்லாமல் வந்தேன்.. இப்ப போக மனசே இல்லாமல் போறேன்” என சின்னச்சின்ன, ஆனால் அழுத்தமான் வசனங்களால் கைதட்ட வைக்கிறார் வசனகர்த்தா பாஸ்கரன்.

பிரான்சிஸ் மார்க்ஸ் என்பவர் தான் படத்தை இயக்கியுள்ளார். ஒரு பெண் தங்களது மகன் எடுத்துக்கொண்டுபோன குடும்ப சங்கிலியுடன் வருகிறாள் என்றால் அவள்தான் மகனின் காதலி என தப்பாக முடிவெடுப்பதைக்கூட ஜீரணிக்கலாம். ஆனால் உண்மையை சொல்லவரும் நாயகியை ஒரு வார்த்தை கூட பேசவிடாமல், தாங்களாகவே பதில் சொல்லி வாயடைக்க வைப்பது என்ன லாஜிக்கோ..?

நாயகன் கீதனும் தனது பங்கிற்கு உண்மையை சொல்லவர, அதையும் அந்த குடும்பம் நம்ப மறுகிறது.. ஒகே.. அவர்கள் தான் எதையும் கண்மூடித்தனமாக நம்புவார்களே.. ஆனால் ஈஷா தன் காதலி இல்லை என நிரூபிக்க, உண்மையான காதலியுடன் எடுத்த ஒரு செல்போன் செல்பி, போட்டோ ஆதாரம் கூடவா நாயகனிடம் இல்லாமல் போய்விட்டது..?

படத்தில் உதவி இயக்குனர்களுடன் இயக்குனர் டிஸ்கஷன் என ஒன்றில் ஈடுபட்டாரா என்கிற சந்தேகம் படம் முழுதும் நம் மனதில் ஓடுகிறது. விடுங்கள்.. இந்த லாஜிக் எல்லாம் இல்லாமல் பார்த்தல் சமீபத்தில் வந்த சில படங்களில் இது கொஞ்சம் பெஸ்ட் என்றே சொல்லாம்.