பாயும் புலி – விமர்சனம்

பாண்டியநாடு படத்தின் வெற்றிக்குப்பின் ‘பாயும் புலி’ படத்தில் மீண்டும் இணைந்திருக்கும் சுசீந்திரன் – விஷால் கூட்டணி, அந்த வெற்றியை தக்கவைத்திருக்கிறார்களா..? பார்க்கலாம்.

பதினைந்து நாட்களில் மதுரை அசிஸ்டன்ட் கமிஷனராக பதவியேற்க இருக்கும் விஷால், லோக்கல் ரவுடிகளிடம் மாமூல் டீல் பேசுவதாக வரச்சொல்லி ஒவ்வொருத்தராக போட்டுத்தள்ளுகிறார். இவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள்.. இவர்களால் நடுரோட்டில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் மரணத்துக்காக இப்படி பழி தீர்க்கிறார் விஷால்.

இவர்களை அழித்தும் கூட, தொடர்ந்து தொழிலதிபர்கள் மிரட்டப்படுவதால் இதன் பின்னணியில் இன்னும் ஒரு கும்பல் மிச்சமிருப்பதாக அறியும் விஷால் அவர்களை வேட்டையாட கிளம்புகிறார். அந்த தொழிலதிபர்களில் ஒருவரும் விஷாலின் காதலியான காஜல் அகர்வாலின் தந்தையுமான ஜெயபிரகாஷுக்கு அந்த கும்பல் பற்றிய உண்மை தெரியவருகிறது. ஆனால் அதை விஷாலிடம் சொல்வதற்குள் விபத்தில் கொல்லப்படுகிறார்..

இருந்தாலும் ஒருவழியாக, அந்த கும்பலை ட்ரேஸ் பண்ணி கண்டுபிடிக்கும் விஷால், தனது அண்ணன் சமுத்திரக்கனியே இந்த கும்பலின் தலைவன் என்பதையும், இந்த உண்மையை அறிந்த தங்களது தந்தையையே சமுத்திரக்கனி கொல்ல துணிந்ததையும் அறிந்து ஷாக்காகிறார்.. இறுதியில் விஷால் என்ன முடிவெடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

விஷாலின் நடிப்பு கம்பீரம் என ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். ஆனால் அவரது கேரக்டருக்கான தீனி எதுவும் வலுவாக போடப்படவில்லை.. போலீஸ் கதை என்றாலே ஹீரோ அரசியல்வாதிகளையும், ரவுடிகளையும் தனது புத்திசாலித்தனமான வியூகங்களால் எப்படி சமாளிக்க போகிறார் என்பதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.

ஆனால் இங்கே போலீஸ் அதிகாரியின் கதையை கையில் எடுத்த சுசீந்திரன், அதில் அண்ணன் – தம்பி இருவரையும் எதிரிகளாக்க நேர்ந்தது திரைக்கதையின் மிகப்பெரிய பலவீனம்.. தம்பி நல்லவனாகவும், அண்ணன் நல்லவன் போல நடிக்கும் கெட்டவனாகவும் வெளியான படங்களை சிவாஜி-பாலாஜி காலத்தில் இருந்து பார்த்தாகிவிட்டது.. இன்றைய சூழலில் ரசிகர்களே அப்படி ஒரு கதையமைப்பை விரும்பமாட்டார்கள்.

நல்லவராக, நேர்மையானவராகவே பார்த்து பழகிய சமுத்திரக்கனியை மெயின் வில்லனாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.. முதல்நாள் வலதுகையில் குண்டுக்காயம்பட்டு கட்டுப்போட்ட சமுத்திரக்கனி, மறுநாள் நடக்கும் க்ளைமாக்ஸ் சண்டையின்போது விஷாலை ஓங்கி ஓங்கி அடிப்பாராம்.. ஆனால் பத்து எதிரிகளை பத்து நொடிகளில் அடித்து வீழ்த்தும் விஷால், அவரிடம் அடிவாங்கி திணறுவாராம்.. இதுதான் உண்மையிலேயே ஹைலைட்டான காமெடி..

இதைவிட கொடுமை என்னவென்றால் சமுத்திரக்கனியை அவரது தந்தையே கொல்லச்சொல்வதும், அதை காண சகிக்காமல் அம்மா, தங்கை, ஏன் சமுத்திரக்கனியின் மனைவி குழந்தைகள் எல்லோரும் வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக்கொள்வார்களாம். நேர்மையான தந்தையும் தம்பியும் வேண்டுமானால் அப்படி இருக்கலாம் என வைத்துக்கொண்டாலும் எந்த மனைவி, அதனது கணவன் எவ்வளவுதான் மோசமானவனாக இருந்தாலும் கூட, அவனை கொல்வதற்கு மனமுவந்து ஒப்புக்கொள்வாள்?

விஷால் போலீஸ் அதிகாரிகளையே ரவுடிகளாக செட் பண்ணி எதிரிகளை குழப்பும் வித்தையை வல்லரசு படத்திலேயே கேப்டன் நிகழ்த்திவிட்டார். கோடீஸ்வரனிடம் பணம் கொடுக்கும்படி வில்லனின் ஆள் மிரட்டும்போது அதை ட்ராப் பண்ணும் போலீஸார், அதன்பின் அவனுடைய நம்பரை ட்ராப் பண்ணினாலே அடுத்து யாருக்கு பேசுகிறான் என்பது ஈசியாக தெரிந்திருக்குமே.. போலீசாருக்கு இதுகூடவா தெரியாது.

200 ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளை விஷால் தனது உதவிக்காக கேட்டதும் ஏதோ பெரிதாக செய்யப்போகிறார் என பார்த்தால், சப்பென ஆக்கிவிடுகிறார்கள். சூரி அவர் மனைவியிடம் பல்பு வாங்கும் சில இடங்களில் மட்டும் சிரிக்க முடிகிறது.. ஸ்கூட்டியில் யூடர்ன் கூட போட்ட தெரியாத, ரோட்டை தனியாக க்ராஸ் பண்ண பயப்படுகிற ‘புதுமையான’ வேடத்தில் காஜல் அகர்வால் பின்னி பெடலெடுக்கிறார்.

கெட்டவரோ என நினைக்க தூண்டுகின்ற, ஆனால் கெடுதல் எதுவும் செய்யாத மீடியமான அரசியல்வாதி கேரக்டரில் ஆர்.கே ஒகே. பாண்டியநாடு படத்தின் விறுவிறுப்பை மனதில் வைத்து, புல் மீல்ஸை எதிர்பார்த்து தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு, அரைகுறையான அளவு சாப்பாட்டை போட்டு அனுப்பியிருக்கிறார் சுசீந்திரன் .