பாபநாசம் – விமர்சனம்

சினிமா நல்லதும் செய்யும்.. கெட்டதும் செய்யும்… சினிமா பார்ப்பவர்கள் அதனை எடுத்துக்கொள்ளும் விதம் தான் அதனை தீர்மானிக்கும். இங்கே அமைதியான தனது குடும்பத்தை அநியாயமாக சூழும் சூறாவளியிலிருந்து, ஒரு குடும்பத்தலைவன் தனது சினிமா பார்க்கும் அறிவை பயன்படுத்தி எப்படி காப்பாற்றிக்கொள்கிறான் என்பது தான் பாபநாசம் படத்தின் கதை.

கமல் தான் அந்த குடும்பத்தலைவன். சொந்தமாக கேபிள் டிவி நடத்திவரும் அவர் சினிமா வெறியர். ஒரு சந்தர்ப்பத்தில் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் கமலின் மகளை ஆபாச வீடியோ எடுத்து, அதன்மூலம் அவளை மிரட்டி அவள் வீட்டிற்கே சென்று அவளை அடைய முயசிக்கிறான். விட்டுவிட்டு என கெஞ்சும் சிறுமியின் தாயை, அவளுக்கு பதில் நீ வா என்கிறான்.

இந்த சச்சரவில் கமலின் மகள் தாக்கியதில் அவன் மரணமடைய, தனது கணவரை தொடர்புகொள்ள முடியாத சூழலில், அவனை வீட்டின் பின் பக்கம் தோட்டத்தில் புதைக்கிறார் அம்மா கௌதமி. காலையில் வரும் கமலுக்கு விஷயம் தெரியவர, எப்படியும் போலீஸ் தங்களை மோப்பம் பிடித்து தேடிவரும் என நம்புகிறார்.

தனக்கிருக்கும் சினிமா அறிவை பயன்படுத்தி, அவர்களை எதிர்கொள்ள தனது குடும்பத்தை தயார் செய்கிறார். காணாமல் போனது ஐ.ஜி.யான ஆஷா சரத்தின் மகன் என்பதால் விசாரணை தீவிரமாகிறது. கமலின் எதிரியான அந்த ஊர் கான்ஸ்டபிள் கலாபவன் மணி கொடுத்த க்ளூவின் மூலம் போலீஸ் கமலை சந்தேக வளையத்திற்குள் கொண்டு வருகிறது. போலீஸின் கிடுக்கிப்பிடி விசாரணை, கமலின் சினிமா அறிவு இவற்றில் எது ஜெயிக்கிறது என்பதை விட, யார் தரப்பு நியாயம் ஜெயிக்கிறது என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ஏற்கனவே மூன்று மொழிகளில் வெற்றிபெற்ற கதை இங்கே தமிழில் மட்டும் சோடை போய்விடுமா என்ன..? இல்லை கமல் தான் விட்டு விடுவாரா..? படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களது சிறப்பான நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார்கள். கமல், கௌதமி இவர்களது கெமிஸ்ட்ரி நாம் பார்க்காததா..? சந்தோஷம், திகில், பயம் என மொத்தக்கலவையாய் ஒரு நடுத்தர குடும்பத்தை நம் கண் முன் நிறுத்துகின்றனர்.

மிடுக்கும் மிரட்டலுமான ஐ.ஜி கதாபாத்திரம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி இருக்கும் ஆஷா சரத் நிச்சயம் ரசிகர்கள் அனைவரையும் யார் இவர் என நீண்ட நாட்கள் பேசவைப்பார். கமலை எப்படியாவது சிக்கவைத்துவிட வேண்டும் என துடிக்கும் கலாபவன் மணியின் வில்லத்தனமும் சபாஷ் பெறுகிறது.

தனது வீட்டிற்குள் தேவையில்லாமல் நுழைந்த விருந்தாளியால் ஏற்பட்ட சிக்கலை கமல் படிப்படியாக முடிவுக்கு கொண்டுவரும் விதம் அருமை. படம் முழுவதுமே போலீஸ் – கமல் இருவருக்குமான ஆடு-புலி ஆட்டம் போல படு டென்சன்.. இதற்கு மேலும் சொன்னால் படம் பார்க்கும்போது சுவராஸ்யம் குறைந்துவிடும்.

ஜிப்ரானின் பின்னணி இசை இறுதிவரை நம்மை திகிலிலேயே வைத்திருக்கிறது.. அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை பார்த்துவிட்டு, இயக்குனர் ஜீத்து ஜோசப்புக்கு கைதட்டல் மூலம் தங்களது பாராட்டுகளை தெரிவிக்காமல் ரசிகர்கள் தியேட்டரை விட்டு வரமாட்டார்கள்.

பாபநாசம் – குடும்பத்துடன் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.