பிச்சைக்காரன் விமர்சனம்

பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சசி ‘555’ படத்திற்கு பிறகு கொடுக்கும் படம், இந்திய – பாகிஸ்தான் படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து வெளிவரும் படம் ‘பிச்சைக்காரன்’.

பொதுவாகவே விஜய் ஆண்டனி வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றியும் பெறுகிறார். பிச்சைக்காரன் எனும் பெயரே படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது எனலாம். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியான பிச்சைக்காரன் ப்ரோமோ டீசர் அதை இன்னும் அதிகப்படுத்தியது.

சென்னை உதயம் தியேட்டர், காலை 11:15 ஷோ, படம் தொடங்கிய போதே கிட்டத்தட்ட 80% தியேட்டரை பார்வையாளர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். பின்னர் 30 நிமிடத்தில் 90% தியேட்டர் நிரம்பியது.

தமிழகத்தின் தெற்கே பல கோடி ரூபாய்க்கு அதிபரான விஜய் ஆண்டனியின் அம்மாவிற்கு அவரது மில்லிலேயே எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. அதனால் அவர் கோமா நிலைக்கு செல்கிறார். 8 மாதங்கள் வரை சிகிச்சை எடுத்தும் குணமாகாத தன் அம்மாவை நினைத்து ஒரு மரத்தடியில் சோகமாக அமர்ந்திருக்கிறார் .

அந்த சமயம் அங்கே வரும் ஒரு முனிவர் அவரை மரத்தடியில் இருந்து எழுந்து வரும் படி அழைக்க, அடுத்த சில வினாடிகளில் அந்த மரத்தின் ஒரு கிளை கீழே ஒடிந்து விழுகிறது. அவரிடம் ஏதோ சக்தி உள்ளது என உணரும் விஜய் ஆண்டனி தன் அம்மாவை காப்பாற்றும்படி கேட்கிறார். அவரும் தற்போது உன்னிடம் உள்ள எந்த பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் 48 நாட்கள் தினமும் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தால் உன் அம்மா குணமடைவார் என கூறுகிறார்.

இதனால் 48 நாட்கள் பிச்சை எடுக்க சென்னை வந்து சேர்கிறார் விஜய் ஆண்டனி . அதே சமயம் விஜய் ஆண்டனியின் பெரியப்பா இவரின் சொத்தை அடைய ஆசை படுகிறார். சென்னையிலும் சில ரௌடிகளால் இவருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

வெற்றிகரமாக 48 நாட்கள் பிச்சை எடுத்தாரா? இதனால் அவரின் அம்மா பிழைத்தாரா? மற்ற பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்ததா? என்பது தான் கதை.

படத்தில் திரைக்கதையும் வசனங்களும் பளிச்சிடுகின்றன. உதாரணமாக விஜய் ஆண்டனிக்கு பிச்சை எடுக்க சொல்லி தரும் காட்சி, ஆடி காரில் வந்து பிரச்சனை செய்பவனை கலாய்க்கும் காட்சி போன்றவற்றை சொல்லலாம்.

விஜய் ஆண்டனி நடிப்பிலும் சண்டை காட்சியிலும் முன்னேற்றம் தெரிகிறது. இரண்டு பாடல்களும் படத்திற்கு பலமே. படம் எங்கும் தொய்வில்லாமல் செல்கிறது. ஹீரோயின் சட்னாவும் அவரது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் பிச்சைகார நண்பனாக வருபவர் கவனம் ஈர்கிறார்.

படம் சீரியஸாக மட்டும் செல்லாமல் காமெடியாகவும் செல்கிறது. சசியும் விஜய் ஆண்டனியும் இணைந்து ஒரு நல்ல கமர்சியல் படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் எந்த வித ஆபாசமும் இல்லாத குடும்பத்துடம் பார்க்க கூடிய நல்ல படமே இந்த ‘பிச்சைக்காரன்’.

Rating : 4/5