போக்கிரி ராஜா – விமர்சனம்


படத்தின் ஹீரோவான ஜீவாவுக்கு அடிக்கடி ‘கொட்டாவி’ விடுவது தான் பிரச்சனை. சாதாரணமாக கொட்டாவி விடும்போது அது பக்கத்தில் இருப்பவர்களை தூங்க வைக்க ஆரம்பிக்கிறது.. நாளாக நாளாக வீரியம் அதிகமாகி, கொட்டாவி விட்டால் எதிராளியை தூக்கி தூர எரியும் அளவுக்கு சீரியசான பிரச்சனையாக மாறுகிறது.

இந்த கொட்டாவி தான் கொலைகார பாவி கூலிங்கிளாஸ் குணாவான சிபிராஜின் கண்ணையும் பதம்பார்த்து குருடனாக மாற்றுகிறது.. ஏற்கனவே ‘ஒண்ணுக்கு’ப்போகும் தகராறில் ஜீவாவின் மேல் கோபமாக இருந்த சிபிராஜ் இப்போது அவரை கொலை வெறியுடன் துரத்துகிறார்.. கிளைமாக்ஸில் என்ன ஆச்சுன்னா.. ஆஆஆவவ்வ்வ்வ்…

டைட்டிலை பார்த்து ஆக்சன் படமோ என்கிற எதிரபார்ப்பில் படத்துக்கு செல்பவர்களை உண்மையிலேயே ‘கொட்டாவி’ விடவைக்கும் கதை இது.. கண் தெரியாமல் கொஞ்ச நேரம் நடித்திருக்கும் சிபிராஜை விட, அடிக்கடி கொட்டாவி விடுகிறேன் என அஷ்டகோணலாக வாயை திறக்கும் ஜீவாவுக்கு இந்த கேரக்டர் நிச்சயமாக புதுசு தான். கூடவே காற்று பிரியும் (கேஸ் லீக்) காட்சிகளில் எல்லாம் கூச்சமில்லாமல் இறங்கி அடித்திருக்கிறார். கூலிங்கிளாஸ் குணாவாக, ஒருபக்கம் கொலைகாரன், இன்னொரு பக்கம் காமெடி பீசு என சிபிராஜும் தன பங்குக்கு படுத்துகிறார்..

வழக்கமாக உதயநிதி படங்களில் பார்த்து பழகிய அதே ஹன்ஷிகா தான்… காட்சிகள் வேறு.. குறும்புகள் வேறு.. அவ்வளவுதான். ‘பிஸ்’ அடிப்பவர்களை தண்ணீர் பீய்ச்சி விரட்டுவது செம கலாட்டா.. படம் முழுவதும் சோலோ காமெடியனாக வரும் அளவுக்கு இதில் புரமோஷன் ஆகியிருக்கும் யோகிபாபு பல இடங்களில் நம்மை சிரிக்கவைக்கிறார்.. நல்ல காமெடி காட்சிகள் அமைந்தால் மிகப்பெரிய இடத்திற்கு வருவார் என்பது உறுதி.. மனோபாலா.. ஏதாவது ஒரு கேரக்டர் என்றாலும் அவரை தவிர்க்கமுடியாதது தான் அவரது பலம். சித்ரா லட்சுமணனும் ஒகே.

இசை டி.இமான்.. அத்துவுட்ட காளை மாதிரி ‘அத்துவுட்டா’ பாடலில் ஆட்டம்போட வைக்கிறார்.. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படம் மூலம் டெக்னிக்கலான கதையை கையாண்டு ரசிகர்களின் கண்களை விரியவைத்த இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இதில் ரசிகர்களின் வாயை (அடிக்கடி) விரிய வைத்திருக்கிறார். கொட்டாவி விடுவதில் இப்படிக்கூட ஒரு பிரச்சனை இருக்கிறது என மீண்டும் சயின்ஸை கையில் எடுத்து, அதில் காமெடி கலந்து தர முயற்சி செய்து எதற்கு இந்த விஷப்பரீட்சை என நம்மையும் சேர்த்து,

ஆஆஆவவ்வ்வ்வ்…… என கொட்டாவி விட வைத்ப்பதில் வெற்றிகண்டுள்ளார்.