புகழ் – விமர்சனம்


தப்பு எங்கே நடந்தாலும் தட்டிக்கேட்கும் இளைஞன் தான் ஜெய்.. விடியற்காலையில் அண்ணன் கருணாசுடன் பூமார்க்கெட் வேலைக்கு செல்லும் ஜெய், பகலில் தனது ஊரின் மையப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் பொழுதை கழிக்கிறார்.. பாரம்பரியம் மிக்க அந்த மைதானத்தை அமைச்சரின் கட்டளைப்படி அபகரிக்க நினைக்கிறார் உள்ளூர் அரசியல்வாதியான மாரிமுத்து..

அவரின் ஒவ்வொரு முயற்சிக்கும் தடைபோடுகிறார் ஜெய். இதனால் ஜெய்யின் நண்பனை ஜெய் உதவியுடனேயே கவுன்சிலராக்கி, தானும் சேர்மனாகி பதவியில் அமர்கிறார் மாரிமுத்து. அடுத்து அந்த நண்பனையே ஜெய்க்கு எதிராக திருப்பி அந்த மைதானத்தை கைப்பற்ற நினைக்க, அந்த முயற்சியும் தோல்வியில் முடிகிறது. இறுதியில் ஜெய்யை கொன்றுவிட்டாவது அந்த மைதானத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார் மாரிமுத்து.. முடிவு என்ன ஆனது..?

இளைஞர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்துள்ள ஒரு விளையாட்டு மைதானம், அதைச்சுற்றி நடக்கும் அரசியல் என படம் முழுவதும் ஒரே உள்ளூர் அரசியல் தான்.. கோபக்கார இளைஞனாக வரும் ஜெய் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். கடன் தொல்லையால் ஓடிப்போன நண்பனை தேடி அழைத்து வருவது, சேர்மன் மாரிமுத்துவிடம் அடிக்கடி மோதுவது, நண்பனே எதிரான பின், அவனையும் எதிர்ப்பது என புரட்சிகரமான வேடம் என்பதால் சில சமயம் குருவி தலையில் பனங்காயை வைத்து விட்டார்களோ என்றும் நினைக்க வைக்கிறார்.

கதாநாயகியாக, பக்கத்து வீட்டு பெண்ணாக வரும் சுரபி. அடிதடி இளைஞனை காதலிக்கும் வழக்கமான டிபிக்கல் கதாபாத்திரத்தில் அழகாக பொருந்துகிறார்..ஜெய்யின் அண்ணனாக கருணாஸ், குணச்சித்திர நடிகாராக பட்டையை கிளப்புகிறார்.. தம்பியை காப்பாற்றவும், அவரை அடிதடி வழியில் செல்லாமல் திருப்பவும் அவர் முயற்சிக்கும்போது சராசரி அண்ணனாக பளிச்சிடுகிறார்.. தம்பியை மாரிமுத்து முன் நிறுத்தி, “எங்க வெட்டு பார்க்கலாம்” என சொல்வது செம தில்..

வன்மம் கொண்ட உள்ளூர் அரசியல்வாதி கேரக்டரில் மாரிமுத்து படு பாந்தம். எதிர்ப்பவர்களிடம் சீறுவதும், பின் அரசியல் சூழல் காரணமாக அவர்கள் தோள் மீதே கைபோட்டு நட்பு பாராட்டுவதும் என ஒரிஜினல் அரசியல்வாதியாகவே மாறிவிட்டார். ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஜெய்யின் நண்பனாக வந்து வில்லனாக மறுப்பவர் என இருவருக்குமே நல்ல வாய்ப்பு.

அரசியல் கதை என்பதாலோ என்னவோ, படத்துடன் ஒன்றி கவனிக்கும்போது நடப்பு அரசியல் நிலைமையும் நம் கவனத்தில் அவ்வபோது சேர்ந்து பயணிக்கிறது.. அதனால் அரசியல்வாதியை எதிர்க்கும் சாதாரண இளைஞன் என்கிற கதையோட்டத்தில் நிறைய லாஜிக்குகள் மிஸ்ஸாவதையும் பார்க்க முடிகிறது. மைதானத்தை கைப்பற்ற விடாமல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சில நூதமானமான வழிகளை ஜெய் பின்பற்றுவதாக காட்டியிருந்தால் நம்பகத்தன்மை அதிகரித்திருக்கும். அதைவிட்டு கிளைமாக்ஸில் அறிவால் வெல்ல முயற்சிக்காமல் அவரும் அரிவாளை தூக்குவது ரொம்ப சாதாரணமான ஒன்றாக அமைந்துவிடுகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் படம் பார்க்க வருபவர்களுக்கு ஒரு நார்மலான பொழுதுபோக்கு படம் தான் இந்த புகழ்.