உயரப்பறக்க விடாமல் விஜய்சேதுபதியின் ‘றெக்க’யை முடக்குகிறார்களா..?


வரும் ஆயுத பூஜை கொண்டாட்டமாக ரெமோ, றெக்க, தேவி என மூன்று படங்கள் வெளியாக உள்ளன.. சீட்டுக்குலுக்கி எல்லாம் போடாமலேயே நமக்கே நன்றாக தெரியும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’வுக்குத்தான் இதில் அதிக வரவேற்பு இருக்கிறதென்று.. அடுத்த இடத்தில் ‘றெக்க’யும் , அதற்கடுத்து ‘தேவி’யும் இருக்கின்றன..

முதலிடத்தில் நிற்கிறோம் என தெரிந்தாலும் கூட அசட்டையாக இருந்துவிடாமல் படத்தின் பப்ளிசிட்டியில் தெறிக்க விடுகின்றனர் ‘ரெமோ’ யூனிட்டார்.. பத்திரிக்கை, டிவி, சோஷியல் மீடியா, ஆன்லைன் வெப்சைட்டுகள் என எங்கே திரும்பினாலும் ஒரே ‘ரெமோ’ மயம் தான்.. இது கொஞ்சம் அதிகமோ என நமக்கு தோன்றினாலும் கூட, எந்த ஒரு இடத்திலும் கோட்டைவிட ‘ரெமோ’ குழுவினர் தயாராக இல்லை.

ஆனால் விஜய்சேதுபதியின் ‘றெக்க’ படத்தின் பப்ளிசிட்டி நிலவரமோ படுபாதாளத்தில் இருக்கிறது… தனது நண்பன் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் இந்தப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பை ‘காமன்மேன்’ கணேஷுக்கு கொடுத்தார் விஜய்சேதுபதி.. ஆனால் நண்பனும் நண்பனின் மனைவியும் அப்படி நினைக்கவிலையே என்பதை பார்க்கும்போது சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது..

ஏற்கனவே தயாரிப்பளாரின் மனைவி ரெமோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட், எடிட்டிங் என எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து, அதை தூக்கு, இதை வெட்டு என இயக்குனரை பாடாய் படுத்தியதை கதைகதையாய் சொல்கிறார்கள் படக்குழுவினர்..

சமீபத்தில் நடந்த இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா மேடையில் அந்த அம்மணியின் பந்தாவும் அலப்பறையும் ஓவராக இருந்ததையும், தானே எடிட்டிங், ட்ரெய்லர் கட் எல்லாவற்றிலும் கடைசிவரை கூடவே இருந்ததாக சொன்னதையும் கவனித்தாலே இது எளிதில் புரியும்.. அதனால் தான் உதவி இயக்குனர்கள் உட்பட அனைவைரையும் மேடைக்கு அழைத்து மரியாதை செய்து விஷயம் வெளியே போய்விடாமல் அவர்களது வாயை அடைத்தார் அந்த பெண்மணி..

இது ஒரு பக்கம் இருக்க, இந்தப்படத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டார் தயாரிப்பாளர் கணேஷ்.. ஆனால் படத்தை வாங்கிய சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனமோ, போட்ட காசைவிட லாபம் பார்க்க முயற்சிக்காவிட்டாலும் போட்ட காசை எடுப்பதற்கு கூட முயற்சிக்கவில்லை, இதனால் பாதிக்கப்படப்போவது இயக்குனர் இரத்தின சிவாவும் விஜய்சேதுபதியும் தான் என்றே ‘றெக்க’ படத்திற்கு தங்களது உழைப்பை கொட்டிய கலைஞர்கள் குமுறுகிறார்கள்.

‘ரெமோ’ படத்தின் பப்ளிசிட்டியை விட ஒரு மடங்காவது ‘றெக்க’ படத்தின் பப்ளிசிட்டி தூக்கலாக இருக்கவேண்டாமா..? ஆனால் நடப்பது என்ன..? ‘ரெமோ’விற்கான பப்ளிசிட்டியில் பத்தில் இரண்டு பங்கு கூட சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனம் செய்யவில்லை என்பதே உண்மை..

படத்தை தயாரித்த ‘காமன்மேன்’ கணேஷ் படத்தை விற்றதுடன் தனது கடமை முடிந்துவிட்டது என ஒதுங்கிக்கொண்டு விட்டார்.. சரி, நமது நண்பனின் படமாயிற்றே.. படத்தை வாங்கிய நிறுவனத்தை அதிகம் பப்ளிசிட்டி செய்ய தூண்டுவோம், நமது நண்பன் படம் நன்றாக ஓடவேண்டாமா, நன் தானே இதை தயாரித்தோம் என்கிற எண்ணம் எல்லாம் அவருக்கு இருப்பதாக தெரியவில்லை..

ஏற்கனவே தயாரிப்பாளரின் மனைவியின் தலையீட்டால் படம் சொதப்பலாகவே உருவாகியுள்ளதாக சொல்லப்பட்டுவரும் நிலையில் பப்ளிசிட்டியிலும் அலட்சியம் காட்டுவது திட்டம்போட்டு விஜய்சேதுபதியின் மார்க்கெட்டையும், அவரது படங்களுக்கான பிசினசையும் குறைக்க நடக்கும் சதியோ என்கிற சந்தேகத்தையே எழுப்புகிறது..

விஜய்சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’யும் தனுஷின் ‘தொடரி’யும் சமீபத்தில் வெளியானதல்லவா..? இரண்டு படங்களுக்குமே ஆரம்பத்தில் போதுமான பப்ளிசிட்டி கொடுக்கப்படவில்லை.. ஆனால் ‘ஆண்டவன் கட்டளை’ ஓரளவுக்கு பரவாயில்லை என தகவல் வர ஆரம்பித்ததுமே விழித்துக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் பணத்தை தண்ணீராக இறைத்து பப்ளிசிட்டியை அதிகப்படுத்தியது.

ஆனால் ‘தொடரி’ நிறுவனம் பப்ளிசிட்டியை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.. அதனால் தான் ‘தொடரி’யை தள்ளிவிட்டு ஆண்டவன் கட்டளை முன்னுக்கு வந்தது.. இப்போதாவது விஜய்சேதுபதி விழித்துக்கொண்டு தயாரிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் இருவரையும் முடுக்கிவிட்டால் தான் ‘ரெமோ’வுக்கான போட்டியில் ஈடுகொடுக்க முடியும் என்பதே உண்மை.