என்ன…? சிம்புவின் படம் வெளியாகததற்கு இதுதான் காரணமா..?

சிம்புவும் அவரது தந்தை டி.ராஜேந்தரும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் கூட் சிம்புவின் ‘வாலு’ படம் ரிலீஸாவதாக தெரியவில்லை. நீண்ட நாளாக திருப்பிக்கொடுக்காத கடனை கேட்டால் கூட “மச்சான் ‘வாலு’ ரிலீஸான உடனே தந்துடுறேண்டா” என கிண்டலாக சொல்லும் அளவுக்கு சிம்புவின் நிலைமை மாறிவிட்டது.

சிம்பு நடித்த ‘போடா போடி’ படமும் தயாராகி இரண்டு வருட காலம் இழுபறிக்கு பின்னர்தான் வெளியானது.. இத்தனைக்கும் அந்தப்படத்தை தயாரித்தும் பெரிய நிறுவனம் தான். அதேபோல ‘வாலு’ படமும் மூன்று நான்கு வருடங்களாக இழுபறியில் தான் இருக்கிறது. இதை தயாரித்தும் ஓரளவு பெரிய நிறுவனம் தான். இரண்டு நிறுவனங்களின் முந்தைய படங்களினால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் தான் இந்த இழுபறிக்கு காரணமாக அமைந்தன.

ஆனால் இதே சிம்பு, கெஸ்ட் ரோலில் நடித்த படங்கள் எந்தவித பிரச்சனையுமின்றி ரிலீசாகின்றன… கடந்த மூன்று வருடங்களில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்த நான்கு படங்கள் ரிலீஸாகி விட்டன. ஒவ்வொருவரும் ‘வாலு’ ரிலீஸ் சிக்கலில் சிக்கியதற்கு ஒவ்வொரு விதமான காரணங்களை கூறுகையில், சினிமா துறையில் உள்ள நியூமராலாஜி தெரிந்த சீனியர் நடிகர் ஒருவர் வித்தியாசமான கோணத்தில் காரணம் கூறுகிறார்.

அதாவது 2010 ஜூலை மாதம் சிம்பு என்கிற சிலம்பரசன் தனது பெயரை எஸ்.டி.ஆர் என மாற்றிவிட்டதாக அறிவித்தார். ஆனால் இப்போது ட்விட்டர் கணக்கில் மட்டும் தான் அந்தப்பெயர் இருக்கிறதே தவிர ஊடகங்கள் வழக்கம்போல் இவரது பழைய பெயரைத்தான் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்தப்பெயரை மாற்றியபின்புதான் சிம்புவுக்கு சிக்கலே வர ஆரம்பித்தது என்கிறார் அவர்.

அவர் கூற்றுப்படி 2010க்கு முன் வெளியான சிம்புவின் படங்கள் வெற்றியோ, தோல்வியோ பெரிதாக பிரச்சனை இன்றி ரிலீசாகின. ஆனால் பெயர் மாற்றம் நடந்தபின் அவர் நடித்துவந்த ‘வேட்டை மன்னன்’ படம் கால்வாசி ஷூட்டிங் நடந்த நிலையிலேயே கைவிடப்பட்டது. ‘போடாபோடி’ படம் மிகுந்த சிரமத்துக்கு இடையே வெளியானது. கௌதம் மேனன் சிம்புவின் படத்தை பாதியில் நிறுத்திவிட்டு அஜித் படத்தை இயக்கபோனார், சிம்புவின் சொந்த தயாரிப்பான இது நம்ம ஆளு படம் கூட முக்கால் வாசியோடு நிற்க, அதன் இயக்குனர் பாண்டிராஜும், இன்னொரு படத்தை இயக்க போய்விட்டார். இதோ இப்போது ‘வாலு’ நீண்ட நாட்களாக ரிலீசில் இழுபறியை சந்தித்து வருகிறது.

இப்படி நடக்கின்ற குழப்படிகள் அத்தனையும் சிம்பு தனது பெயரை எஸ்.டி.ஆர் என மாற்றியதால் தான் என்கிற அந்த நியூமராலாஜி நடிகர், அவரது தந்தையும் தன பெயரை விஜய டி.ராஜேந்தர் என மாற்றியபினர் பீல்டு அவுட் ஆனதையும், அரசியலில் காமெடி பீசாகிப்போனதையும் சுட்டிக்காட்டுகிறார்.

இப்போதும் ஒன்றும் பிரச்சனையில்லை.. சிம்பு தனது பெயரை பழையபடி மாற்றிக்கொள்வதாக அறிவித்தால் அவரது கேரியரிலும் மாற்றம் வரும் என்றும் ஆலோசனை தருகிறார்.. கவனிப்பாரா சிம்பு..?