தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் – விமர்சனம்


வலியவனை எளியவன் வீழ்த்தும் உலக சினிமாவுக்கே பழகிப்போன ஒன்லைன் தான் இந்தப்படத்திற்கும்.. அதில் ஸ்டெம் செல்லையும் கூரியரையும் இணைத்து ஆக்சன் ப்ளேவரில் கதை சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரேம்சாய்.

எந்த வேலையும் பிடிக்காமல் சென்னையில் அக்கா வீட்டில் தங்கியிருக்கும் ஜெய்க்கு தனது கூரியர் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுக்கிறார் நண்பன் சந்தானம். ஒருநாள் ஏதேச்சையாக கடை ஒன்றில் வேலைபார்க்கும் யாமி கௌதமை பார்க்கும் ஜெய், அவரை தினசரி பார்க்கவேண்டும் என்பதற்காகவே அந்த கூரியர் வேலையில் கப்பென ஒட்டிக்கொள்கிறார்.

இந்தநிலையில் சேலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைபார்க்கும் தம்பி ராமையாவுக்கு, தனது மருத்துவமனையில் உள்ள டாக்டர் பிரேம் தலைமையில் தமிழ்நாடு முழுதும் நடக்கும் மருத்துவ மோசடி பற்றி தெரியவர, அதுபற்றிய விபரங்களை ஒரு கவரில் வைத்து சென்னையில் உள்ள சமூக போராளி நாசரின் விலாசத்துக்கு அனுப்பி வைக்கிறார்.

லேட்டாக தகவல் தெரிந்த டாக்டரின் ஆட்கள் தம்பிராமையாவை போட்டுத்தள்ளிவிட்டு, கூரியரை கைப்பற்ற சென்னைக்கு வருகிறார்கள். சம்பந்தப்பட்ட கவரை எடுத்துக்கொண்டு நாசர் வீட்டுக்கு டெலிவரி கொடுக்க கிளம்புகிறார் ஜெய்.. அடியாட்கள் துரத்துகிறார்கள் இனி என்ன நடந்திருக்கும் என்பது புரிந்திருக்குமே..? யெஸ்..அடிதடி..சுபமான க்ளைமாக்ஸ்

வேலை கிடைக்காமல் விரக்தியாக சுற்றுவதில் ஒரு காலத்தில் நடிகர் முரளியை மிஞ்ச முடியாது.. அதேபோல கிடைத்த எந்த வேலைக்கும் போகாமல் விட்டேத்தியாக சுற்றும் கேரக்டர் என்றால் இனி ஜெய்யை அடித்துக்கொள்ள ஆள் இல்லை போங்கள்.. கண்டதும் காதல், காதலி பற்றி நண்பன் சந்தானத்திடம் பினாத்தால் என ரெகுலர் பார்மேட்டில் ட்ராவல் பண்ணும் ஜெய், ஆக்சன் மோடுக்கு வந்ததும் சீரியஸ் காட்டியுள்ளார். யாமியை கவர் பண்ண அவர் அடிக்கும் கூத்து எல்லாம் கொஞ்சம் ஓவர் ரகம் தான்.

கதாநாயகியாக யாமி கௌதம் நடித்திருக்கிறார் என்று ஒற்றைவரியில் சொல்லிவிட்டு போகுமளவுக்குத்தான் அவரது நடிப்பு இருக்கிறது. பழைய சந்தானத்தை பார்க்க முடிவதும், கூடவே விடிவியின் லூட்டியும் நம்மை அவ்வப்போது ரிலாக்ஸ் பண்ணுகின்றன. அநியாயமாக உயிரை விடும் தம்பி ராமையாவும், அநியாயத்திற்கு எதிராக போராடும் நாசரும் கவனம் ஈர்க்கிறார்கள்.

வெளிநாட்டு வில்லன், தமிழ்நாட்டு டாக்டர் வில்லனுடன் கைகோர்த்து ‘ஸ்டெம் செல்’ மோசடி பண்ணுவதெல்லாம் ஓகேதான். அதை கூரியருடன் இணைத்ததில் தான் திரைக்கதை நொண்டியடிக்க ஆரம்பித்து விடுகிறது.. ஜெய்யை ஒலிம்பிக்கில் ஓடவிட்டால் நிச்சயம் தங்கம் நமக்குத்தான்.. அந்தளவுக்கு வில்லன்கள் துரத்த ஓடுகிறார்.. ஓடுகிறார்.. ஓடிக்கொண்டே இருக்கிறார்.

துரத்தும் அடியாட்களும் நினைத்த நேரத்தில் ஜெய்யை கோட்டைவிட்டு, திடீரென நினைத்த நேரத்தில் பிடித்துக்கொள்கிறார்கள்.. ஒரே அடியில் அடியாட்களை சாய்க்கிறார் ஜெய். ஆனால் இவர்மட்டும் பலமுறை கொத்துக்கறியாக அடிபட்டும், அடுத்த காட்சியில் விறைப்பாக எழுந்து நிற்கிறார். இந்த பூ சுத்தல்களை எல்லாம் கொஞ்சம் தவிர்த்துவிட்டு, லாஜிக்கை நிறைய பயன்படுத்தி இருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *