தனி ஒருவன் – விமர்சனம்

ரீமேக் கதைகளின் பிடியில் இருந்து விடுபட்டு மோகன்ராஜாவாக மாறியிருக்கும் ஜெயம் ராஜா சொந்தமாக கதை எழுதி இயக்கியுள்ள படம் தான் தனி ஒருவன்

போலீஸ் அதிகாரியாவதற்கு முன், பயிற்சி எடுக்கும் நாட்களிலேயே தனது சகாக்களுடன் சேர்ந்து, அட்டகாசம் பண்ணும் ரவுடிக்கும்பலை தனது முகம் காட்டாமல் போலீஸில் சிக்கவைக்கிறார் ஜெயம் ரவி.. நாட்டில் இருக்கும் மோசமானவர்களிலேயே முக்கியமானவரான மருந்து உலகின் மாபியா மன்னனான விஞ்ஞானி அரவிந்த்சாமியின் ஆட்டத்தை அடக்குவதுதான் தனது டார்கெட் என் பிக்ஸ் பண்ணுகிறார்..

அதேபோல ஜெயம் ரவி, போலீஸ் அதிகாரி ஆனபின் அரவிந்த்சாமியின் மோசடிகளுக்கு செக் வைக்கிறார். தனி ஒருவனான ஜெயம் ரவி தன்னை எதிர்ப்பதை அறிந்த அரவிந்த் சாமி, தனது அடியாள் வம்சி மூலமாக தினது திட்டத்தை நிறைவேற்றுகிறார்.

மேலும் ஜெயம்ரவி தனது திட்டங்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அறிந்துகொள்ள, துப்பாக்கி குண்டால் காயம்பட்ட ஜெயம் ரவிக்கு சிகிச்சை அளிக்கும்போதே டிடெக்டிவ் சிப் ஒன்றை பொருத்தவைக்கிறார். இதன்மூலமாக தனக்கு எதிரான வீடியோ ஆதாரம் ஒன்று ஜெயம் ரவிக்கு கிடைக்கப்போவதை அறிந்து, அதை தடுக்கும் முயற்சியில் ஜெயம் ரவியின் நண்பரான போலீஸ் அதிகாரியை கொலை செய்கிறார்.

தனது நுட்பமான அறிவால், அரவிந்த்சாமி தன்னை வேவு பார்ப்பதை கண்டறியும் ஜெயம் ரவி, அந்த சாதனத்தை தன் உடலில் இருந்து அகற்றிவிட்டு, அது தனக்கு இன்னும் தெரியாதது போலவே நடந்துகொண்டு அரவிந்தசாமியை படிப்படியாக முட்டாளாக்குகிறார். ஒரு கட்டத்தில் ஆதாரங்களுடன் அரவிந்தசாமியை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் ஜெயம்ரவி, அரவிந்த்சாமியின் பின்னால் இருக்கும் இன்டர் நேஷனால் மாபியா பற்றிய விபரங்களை பெற அவருடன் டீல் பேசுகிறார். டீலுக்கு அரவிந்த்சாமி பணிந்தாரா..? அவரது முடிவு என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்.

அப்பாடக்கர் போன்ற அட்டு கதைகளில் நடிப்பதை விட்டுவிட்டு, இதுபோன்ற கமர்ஷியல் வேல்யூ நிறைந்த, சவால் நிறைந்த திரைக்கதையில் ஜெயம் ரவி நடிக்கும்போதுதான் அவருக்குள் இருக்கும் உண்மையான திறமை பளிச்சிடுகிறது. இதில் அவரது வேகத்திற்கும், கோபத்திற்கும் ஏற்ற கேரக்டர். அரவிந்தசாமியை மாட்டவைக்க வியூகம் வகுப்பதும், அவர் அறியாமலேயே அதில் சிக்கிக்கொள்வதும், பின் அதனை உடைத்துக்கொண்டு வெளியே வருவதும் என மித்ரன் கதாபாத்திரத்திற்கு ஹெவியான வெயிட் ஏற்றியிருக்கிறார் ஜெயம் ரவி.

கொடூரமான வில்லன் அழகாக இருந்தால் அதுவே அந்த கதாபாத்திரத்திற்கு பாதி வெற்றி தான்.. மென்மையான புன்னகையும் பின்னணியில் வன்மையான கொடூரமும் கலந்த அரவிந்த்சாமியின் அலட்டல் இல்லாத வில்லத்தனம் படத்தின் சவாலான திரைக்கதைக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது. போலீசில் சிக்கி விசாரணையின்போது கூட கால்மேல் கால்போட்டு அமர்ந்து கெத்து காட்டுவது சூப்பர்.

ஜெயம் ரவியின் திட்டங்களுக்கு அவ்வப்போது உதவிக்கரம் நீட்டும் நயன்தாராவும் வழக்கமான டூயட் நாயகி வேடத்தை தாண்டி கொஞ்சம் புதிதாக மாற முயற்சித்திருக்கிறார். அரவிந்த்சாமியின் தந்தையாக வரும் தம்பி ராமையாவின் ‘கிளிப்பிள்ளை’த்தனமான காமெடி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது.

அரவிந்த்சாமியின் அடியாளான வம்சி, ஜெயம் ரவியின் நண்பர்களாக வரும் கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் உத்தமன் மற்றும் இருவர் என அனைவரும் தங்களது துணை கதாபாத்திரங்களுக்கான தேர்வை நியாயப்படுத்தி இருக்கிறார்கள்.

இயக்குனர் மோகன்ராஜாவின் வேகத்திற்கு ஹிப் ஹாப் தமிழாவின் பின்னணி இசையும் ராம்ஜியின் ஒளிப்பதிவும் ஓரளவு ஈடுகொடுத்திருக்கின்றன. மெடிசன் மாபியாக்களின் கதை ஏற்கனவே சில படங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் இதில் ஹீரோவும் வில்லனும் பரஸ்பரம் தங்களை அறிந்துகொண்டு, அதன்பின் மோதுவதில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். சில இடங்களில் இது எப்படி சாத்தியம் என எழும் கேள்விகளைக்க்கூட போரடிக்காத திரைக்கதையால் அப்படியே பொசுக்கிவிட்டிருக்கிறார் மோகன்ராஜா.

தனி ஒருவன் – ரொம்பவே சுவாரஸ்யமானவன்