தற்காப்பு – விமர்சனம்


என்கவுண்டர்களையும் போலி என்கவுண்டர்களையும் இவற்றின் பின்னால் ஒளிந்துள்ள சுயநல அரசியலையும் தோலுரித்து காட்டும் படம் தான் தற்காப்பு..

சக்திவேல் வாசு உள்ளிட்ட மூன்று நண்பர்கள் போலீசில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள்.. மேலதிகாரியின் உத்தரவு கிடைத்ததும் என்ன ஏதென்று விசாரிக்காமல் குற்றவாளிகளை என்கவுண்டர் பண்ணுகிறார்கள்.. ஆனால் ரவுடி ரியாஸ்கானை இந்த டீம் என் கவுண்டர் பண்ணியது, போலி என்கவுண்டர் என்பதை மனித உரிமை கழக அதிகாரி சமுத்திரக்கனி கண்டுபிடிக்கிறார்.

ஆதாரங்களுடன் அவற்றை புட்டுப்புட்டு வைக்கும் அவர், அதன்பின்னால் ஒளிந்துள்ள அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர்களின் சூழ்ச்சிகளையும் விவரித்து அவர்களை கோர்ட்டில் உண்மையை சொல்ல சொல்கிறார். இதை அறிந்த உயர் அதிகாரிகளும் அரசியல்வாதியும் சேர்ந்து சக்தி அன் கோவையே குற்றவாளிகளாக சித்தரித்து என்கவுண்டரில் தீர்த்து கட்ட முடிவு செய்கின்றனர்.. நீதி வென்றதா..? விதி வென்றதா என்பது க்ளைமாக்ஸ்.

இயக்குனர் ஆர்.பி.ரவி போலி என்கவுண்டர் விவகாரத்தை கையில் எடுத்து நுணுக்கமான பல ஆய்வுகளை மேற்கொண்டிருப்பது தெரிகிறது.. ஆரம்பத்தில் சாதாரண ஒரு ஆளாக நினைக்க வைக்கும் சக்திவேல் வாசு, சமுத்திரக்கனியின் வருகை மற்றும் அவரது விசாரணையில் இருந்து நடிப்பில் புது பரிமாணம் காட்டுகிறார்.. மனித உரிமை கழக அதிகாரியாக சமுத்திரக்கனியும் அவரது விசாரணையும் ‘நச்’

இந்த களேபரங்களுக்கு இடையே இரண்டு காதல் ஜோடிகளையும் அவர்களது காதல் சந்திக்கும் பிரச்சனைகளையும், இறுதியில் போலி என்கவுண்டரில் அவர்களும் சிக்கவைக்கப்படும் அவலத்தையும் இயக்குனர் அவ்வப்போது டைம் மிஷின் கொண்டு இணைத்திருக்கிறார்.. இரண்டு ஜோடிகளும் கிளைமாக்ஸில் பரிதாபம் அள்ளுகின்றனர்.. ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவும், பைசலின் பின்னணி இசையும் படம் முழுதும் நம்மை என்கவுண்டர் மூடிலேயே வைத்திருக்கின்றன..

சாதாரண குற்றவாளிகளை என்கவுண்டர் பண்ணி அதை மூடிமறைக்கும் போலீசாரால், போலீஸ் அதிகாரிகளையே, அதிலும் என்கவுண்டர் போலீசாராக இருந்தவர்களையே என்கவுண்டர் பண்ணமுடியுமா..? அது சாத்தியம் தானா என்கிற சந்தேகம் .கிளைமாக்ஸில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.. அதேசமயம் என்கவுண்டர் நடக்கும் நேரத்தில் சம்பந்தமே இல்லாத அப்பாவிகள் பலியாகிறார்கள் என்பதற்காக இரண்டு காதல் ஜோடிகளை படத்தில் முழு நேரம் இணைத்திருக்கத்தான் வேண்டுமா என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

மற்றபடி தற்காப்பு சமூகத்திற்கு தெரியவேண்டிய உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதால் பாராட்டப்படவேண்டிய படம் தான்.