வில் அம்பு – விமர்சனம்


இரண்டு இளைஞர்கள். அவர்கள் வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே, ஒருவர் செய்யும் செயலால் மற்றவரை சிக்கலில் மாட்டிவிடுகிறார்கள். இது அவர்களை எங்கு கொண்டுபோய் நிறுத்துகிறது என்பதுதான் மொத்தப்படமும்.

ஹரிஷ், தனது அப்பா சொல்படி படித்து டிகிரி வாங்கினாலும் வேலை என்று வரும்போது தந்தையின் விருப்பத்துக்கு மாறாக தனது விருப்பமான கேமராவை தூக்க நினைக்கிறார். அப்படி தன் விருப்பப்படி செல்லும்போது சில இடைஞ்சல்களும் சில பிரச்சனைகளும் அவரை குற்றவாளியாக்கி காவல்துறையின் கோரமுகத்தை காண வைக்கின்றன. தன்னை குற்றவாளியாக சிக்கவைத்த ஹரீஷ் உத்தமனை (பெயரை பாருங்கள்) தேடுகிறார் ஹரிஷ்

அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ, சிறுவயதிலேயே தண்ணி தெளித்துவிட்ட மாதிரி சுற்றுபவர், அரசியல்வாதியின் வலது கையாக இருக்கும் நந்தகுமாரின் மகள் சம்ஸ்க்ருதியை காதலிக்கிறார். இதனால் அவரை கொலைசெய்யும் அளவுக்கு துணிகிறார் நந்தகுமார். இதனால் காதலியை அழைத்துக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்கிறார் ஸ்ரீ. இந்த இரண்டுபேருக்குமான தீர்வு அவர்கள் எதிர்பாராதவிதமாக கிடைக்கிறது.. அது எப்படி என்பது தான் க்ளைமாக்ஸ்.

சீறிப்பாய துடிக்கும் தோட்டா போல வீராப்பும் விறைப்புமாக ஹரீஷ் கல்யாண், ஸ்ரீ என இரண்டு பேருக்குமே சம வாய்ப்பு.. சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.. சிருஷ்டி டாங்கே, சம்ஸ்க்ருதி ஷெனாய், சாந்தினி என மூன்று கதாநாயகிகளில் நடிப்பால் சாந்தினியும், துறுதுறு அழகால் சம்ஸ்க்ருதியும் நம்மை ஈர்க்கிறார்கள்.. சாந்தினியின் சிறுவயது காதல் அவர் எதிர்பார்த்தது போலவே முடிவது சூப்பர்.

வில்லன்களாக போஸ்டர் நந்தகுமார், ஹரீஷ் உத்தமன் சரியான தேர்வு.. யோகிபாபுவின் காமெடி சீரியசான படத்தை அவ்வப்போது கலகலப்பாக்குகிறது. அரசியல்வாதியாக வரும் மனிதர் மனதை தொடுகிறார்.. ஹரிஷ் கல்யாணின் தந்தையாக அவரது சொந்த தந்தையே நடித்திருக்கிறார்.. அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

விரட்டல்களையும் துரத்தல்களையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவு.. நவீனின் இசை பெரிதாக ஈர்க்கவில்லை. அதேசமயம் மோசமும் இல்லை. இரண்டு ஹீரோக்களும் கடைசிவரை ஒருவர் ஒருவர் சந்தித்துக்கொள்ளாமலேயே ஒருவரின் பிரச்சனைக்கு இன்னொருவர் தான் காரணமாகிறார்கள் என ஏற்கனவே ஏகப்பட்ட பில்டப்புகளை கொடுத்திருந்தார் இயக்குனர் ரமேஷ் சுப்ரமண்யம். ஆனால் பக்கத்து பக்கத்து ஏரியாவில் இருந்துகொண்டே அருகருகே வந்துபோனாலும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் போகிறார்கள் என சிம்பிளாக சொல்லி ஏமாற்றம் தந்திருக்கிறார். வழக்கமான கமர்ஷியல் வட்டத்திற்குள் தான் இந்தப்படமும் அடங்குகிறது.