ஜீரோ – விமர்சனம்


வழக்கமான பேய், பிசாசு படங்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு ஆதாம், ஏவாள் காலம் ஆரம்பித்து இன்றும் தொடரும் சாத்தானின் ஆதிக்கத்தையும் பேண்டஸி கலந்து காட்டியிருக்கும் படம் தான் இந்த ஜீரோ’.

தனது தந்தைக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கூட ஆதரவற்ற பெண்ணான ஷிவதாவை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார் சமூக சேவகரான அஸ்வின். தனிக்குடித்தனமும் செய்துகொள்கிறார்கள். ஆனால் அதை தொடர்ந்து ஷிவதாவுக்கு பலவித குழப்பமான நினைவுகள் அடிக்கடி வந்து அவரை டார்ச்சர் செய்கின்றன.

இதனால் பாதிக்கப்படும் ஷிவதாவின் நடவடிக்கைகள் அவரை மனநோயாளி போலவே ஆக்கிவிடுகின்றன. அதை தொடர்ந்து நிகழும் சம்பவங்கள் அஸ்வினை கலவரமூட்டவே, மருத்துவரான ஷார்மிளா மற்றும் ஆத்மாக்களுடன் பேசும் ஜே.டி.சக்கரவர்த்தி ஆகியோரின் மூலமாக சாத்தானின் ஏவலால் ஷிவதா பாதிக்கப்பட்டதாக தெரியா வருகிறது.

சாத்தானின் நோக்கம் என்ன..? எதற்காக அது ஷிவதாவை தேர்ந்தெடுத்தது..? ஷிவதாவை சாத்தானின் பிடியில் இருந்து அஸ்வினால் காப்பாற்ற முடிந்ததா..? என்பதற்கு கிளைமாக்ஸில் தித்திக் விடை சொல்லியிருக்கிறார்கள்.

இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு அமானுஷ்ய பின்னணியில் அதேபோன்ற வேறொரு உலகத்தை இந்த ‘ஜீரோ’வுக்காக சிருஷ்டித்துள்ளார்கள்.. இந்த புதிய முயற்சி பாராட்டப்பட வேண்டியதே. அஸ்வின், ஷிவதா இவர்களில் யார் நடிப்பு சூப்பர் என பட்டிமன்றமே வைக்கலாம். மனைவியை எந்த ஒரு நிலையிலும் விட்டுக்கொடுக்காத கணவனாக அஸ்வின் செம பிட் என்றாலும் ஷிவதாவின் உழைப்பு அவரைவிட கொஞ்சம் அதிகமே..

பாசமான பரிதவிக்கும் அப்பாவாக ரவி ராகவேந்தர், பக்கத்து வீட்டு அம்மாவாக வரும் துளசி, மர்ம மனிதன் போல வந்து சாத்தானுடன் போராட்டம் நடத்தும் ஜே.டி.சக்கரவர்த்தி, ஷைவதாவின் அம்மாவாக வருபவர் என துணை கேரக்டர்களும் பக்கபலம்.. பாடல்களை குறைத்து பின்னணி இசையால் படத்திற்கு த்ரில் கூட்டியிருக்கிறார் நிவாஸ் பிரசன்னா.. ஒளிப்பதிவில் இரண்டு உலகங்களை படைத்து தன் பங்கிற்கு தெறிக்க விட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாபுகுமார்.

ஆதாம், ஏவாள், சைத்தான் இவற்றை வைத்து, அதில் பூர்வ ஜென்ம கதையையும் இணைத்து புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் ஷிவ் மோஹா. ஆனால் சராசரி பார்வையாளனை இந்தப்படம் எப்படி சென்றடைய போகிறது என்பதில் தான் இந்தப்படத்திற்கு வெற்றியும் வரவேற்பும் இருக்கிறது..