​’சிலாக்கி டும்மா’ டான்ஸ் விஜய்-க்கு மிகவும் பிடிக்குமாம் – நடன இயக்குநர் சிவ ராக் சங்கர்!

‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தின் மூலம் நடன இயக்குநராக தன்னுடைய கலை பயணத்தை துவங்கியவர் மாஸ்டர் சிவ ராக் சங்கர். அப்படத்தில் இடம் பெற்ற ‘சிலாக்கி டும்மா’ என்ற பாடலுக்கு ‘டெத் குத்து’ என்ற புதிய ஸ்டைலில் நடனம் அமைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அந்த நடன அசைவுகள் மிகவும் பிடிக்கும். ஹலோ நான் பேய் பேசுறேன் படத்தின் அனைத்து பாடலுக்கும் இவர் தான் நடன இயக்குநர். அதே போல் அந்த படத்தில் இடம்பெற்ற ‘மஜ்ஜா மல்சா’ பாடலில் வரும் நகைச்சுவையான நடன அசைவுகளும் மிகவும் பிரபலம். அதன்பின்னர் முத்தின கத்திரிக்காய் படத்தில் அனைத்து பாடலுக்கும் இவர் தான் நடன இயக்குநர்.

முத்தின கத்திரிக்காய் படத்தில் சுந்தர்.C யை நடனமாட வைத்த அனுபவத்தை பற்றி நாம் கேட்ட போது “சினிமாவில் முதன் முதலில் எனக்கு நடன இயக்குநராக வாய்ப்பு தந்தவர் இயக்குநர் சுந்தர் C அவர்கள் தான். முத்தின கத்திரிக்காய் படத்தில் அவரை நடனமாட வைத்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதை தொடர்ந்து எனக்கு மீசைய முறுக்கு படத்தில் அனைத்து பாடலுக்கும் நடனம் அமைக்க எனக்கு வாய்ப்பு தந்தவர் சுந்தர்.C சாரும் , அன்பு சாரும் தான். அவர்களுக்கு இந்நேரத்தில் என்னுடைய நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.

மீசைய முறுக்கு சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் அனைத்து பாடல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக ‘அடியே சக்கரக்கட்டி’,’மாட்டிக்கிச்சு’, ‘கிரேட் ஜி’ போன்ற பாடல்கள் எனக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை ரசிக்கிறார்கள் என்று அறியும்போது எனக்கு அது மேலும் ஊக்கத்தை தருகிறது.

முதலில் மீசைய முறுக்கு படத்தில் வரும் ‘அடியே சக்கரக்கட்டி’ பாடலுக்கு மட்டும் தான் நடனம் அமைக்க சென்றேன். என்னுடைய கோரியோ பிடித்து போய் ஹிப்ஹாப் தமிழா ஆதி அவர்கள் என்னை அனைத்து பாடலுக்கும் நடனம் அமைக்கும் படி கூறினார். இதைத்தொடர்ந்து ரம்மி இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கும், இன்னும் சில படத்துக்கும் நடனம் அமைத்து வருகிறேன்.

‘சிலாக்கி டும்மா’ பாடலில் இடம்பெற்றுள்ள நடனம் விஜய் சாருக்கும் அவருடைய மகனுக்கும் மிகவும் பிடிக்கும் என்று அவரே என்னுடைய உதவி நடன இயக்குநரை ஒரு படப்பிடிப்பில் சந்தித்த போது கூறியுள்ளார். அது தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு.

எனக்கு விஜய் சார், விஷால் சார், தனுஷ் சார் என்று நிறைய பேரின் பாடல்களுக்கு நடனம் அமைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. ராக், ஜாஸ், கிளாசிக்கல் என்று அனைத்தையும் கலந்து புதிய நடன அசைவுகளை கொண்டு ஒரு நடனம் அமைக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என்றார் மாஸ்டர் சிவ ராக் சங்கர்.​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *