ஏதோ ஏதோ ஒரு கருமத்தை படித்துவிட்டுத்தான் கண்டபடி பேசுகிறாரா ராதாரவி


கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ராதாரவி நடிகை நயன்தாரா பற்றி சற்றே தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார். அதற்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவற்றில் இருந்து எதிர்ப்பு கிளம்ப, இன்னொரு பக்கம் அவர் சார்ந்துள்ள திமுகவில் இருந்தும் அவரை நீக்கினார்கள்.

நான் ஒன்றும் அப்படி தப்பாக பேசவில்லையே என்று குழம்பிக்கொண்டிருந்த ராதாரவி சமீபத்தில் நடைபெற்ற ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்கிற குறும்பட விழாவில் மீண்டும், “நான் என்ன தவறு செய்தேன்.. என்ன தப்பாக பேசினேன்” என்கிற பல்லவியையே பாடினார். நடிகர் சங்கத்தில் இருந்து எனக்கு ரெட் கார்டு போடப்போவதாக சொல்கிறார்கள். நான் நடிப்பதை யாராலும் நிறுத்த முடியாது.. நான் நாடகத்தில் நடித்தால் எப்படி வந்து நிறுத்துவீர்கள் என கேட்டார்.

அதுமட்டுமல்ல நான் இப்படி நிறைய பேசுவதற்கு காரணம் நான் நிறைய படிக்கிறேன்.. தினசரி வீட்டில் ஏதாவது ஒரு கருமத்தையாவது கொஞ்ச நேரம் படித்து விடுகிறேன் என்று கூறினார் ராதாரவி. தான் படிக்கும் புத்தகங்களையும் நாளிதழ்களையும் கூட புத்தகங்கள் பேப்பர்கள் என்று கௌரவமாக அழைக்க முடியாமல் கருமம் என்று அழைக்கும் ராதாரவியிடம் மனிதர்களை மட்டும் எப்படி நாகரிகமாக அழைப்பார் என எதிர்பார்க்க முடியும்..?