க/பெ ரணசிங்கம் ; விமர்சனம்

அரசு எந்திரம் என்பது மனங்களை தொலைத்துவிட்ட எந்திர மனிதர்களை வைத்துக்கொண்டு, அப்பாவி மக்களை எப்படி எல்லாம் சித்திரவதை செய்கிறது என்பதையும் ஒரு பெண் தனக்கான நியாயம் கேட்டு அரசு அந்த எந்திரத்தை தனக்கு எப்படி அடிபணிய வைக்கிறார் என்பதையும் மூன்று மணி நேர படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ஊருக்கு உழைக்கும் போராட்ட குணம் கொண்ட மனிதர் விஜய்சேதுபதி. அவரது நல்ல குணங்களால் ஈர்க்கப்பட்டு அவரைத் திருமணம் செய்து கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இருந்தாலும் குடும்பம் நிம்மதியாக வாழ, வழி செய்துவிட்டு அதன்பிறகு போராட செல் என கூறுகிறார்.. மனைவியின் சொல் கேட்டு வெளிநாட்டுக்கு செல்லும் விஜய்சேதுபதி சில நாட்கள் கழித்து இறந்து விட்டார் என செய்தி வருகிறது.

வெளிநாட்டுக்குச் வேலைக்கு சென்ற சாதாரண மனிதன் மட்டுமல்ல, அவனது இறந்த உடல் கூட சொந்த ஊருக்குத் திரும்புவது எவ்வளவு கடினம் என்பதும், அதில் எவ்வளவு அரசியல் இருக்கிறது என்பதையும் அப்பாவியான ஐஸ்வர்யா ராஜேஷ் போகப்போக புரிந்து கொள்கிறார். தன் கணவனின் உடலை மீட்க நவீன சாவித்திரியாக களத்தில் இறங்குகிறார். அவரால் சாதிக்க முடிந்ததா என்பது மீதிக்கதை.

ஒரு படத்தில் ஹீரோ பாதி வரை தான் வருவார், அதிலும் பாதியிலேயே இறந்துவிடுவார் என்றெல்லாம் சொல்லி நடிக்க அழைத்தால் தெறித்து ஓடும் நடிகர்கள் மத்தியில், விஜய்சேதுபதி அதற்காகத்தானே நான் இருக்கிறேன் என தோள் தட்டிக்கொண்டு இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவர் இறந்து விடுவதாக காட்சி இருந்தாலும் கதை சொல்லும் பாணியில் படம் முழுக்க பயணிக்கிறார். வழக்கமான அவரது ட்ரேட்மார்க் நடிப்பு மற்ற அம்சங்கள் இதிலும் குறையாமல் இருக்கின்றன.

கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ்.. சொல்லப்போனால் இது கதாநாயகிக்கான் படம் என்று தாராளமாக சொல்லலாம். ஆரம்பத்தில் துறுதுறு பெண்ணாக விஜய்சேதுபதியை விரட்டி விரட்டி காதலிக்கும் ஐஸ்வர்யா, தனது கணவரின் மரணத்திற்கு பிறகு அவரது உடலை மீட்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் ஒரு சாதாரண கிராமத்துப் பெண்ணை கண் முன் நிறுத்துகிறார். இடைவேளைக்கு பிறகு சற்றே யதார்த்தம் மீறிய, அதேசமயம் இப்படியெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என எண்ணத்தோன்றும் விதமாக அவரது காட்சிகள் சித்தரிக்கப்பட்டாலும் அதை அவர் வெளிப்படுத்திய விதம் அருமை.

இவர்கள் தவிர கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே, மக்களுக்கு உதவ நினைத்து, அதேசமயம் அரசின் நடவடிக்கைகளால் கைகள் கட்டிப்போட்ட தனது நிலையை ஒவ்வொரு காட்சியிலும் அழகாக உணர்த்தி இருக்கிறார். இனிவரும் நாட்களில் ரங்கராஜ் பாண்டே, ஒரு மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக மாறி விடுவார் என்பது உறுதி. விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்திருக்கும் பவானி துறுதுறுவென கவனிக்க வைக்கிறார்.. ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையாக வேலராமமூர்த்தி, பூ ராமு ஐஸ்வர்யாவின் நண்பராக அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட இன்னும் சக கலைஞர்கள் அனைவருமே தங்கள் கதாபாத்திரத்தில் எதார்த்தம் மீறாமல் நடித்து இருக்கிறார்கள்.

ராமநாதபுரம் மண்ணின் வறட்சியைக் கூட இவ்வளவு அழகாக காட்ட முடியுமா என வியக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் அதேபோல இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசையும் கதைக்கு காட்சிகளுக்கும் கணம் கூட்டுகிறது.

இந்த படம் உண்மை கதையாக இருக்கலாம் ஆனால் அதற்காக கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வரை ஓடும் அளவிற்கு இயக்குனர் விருமாண்டி கையைக் கட்டிக்கொண்டு நின்று இருக்காமல், அங்கங்கே கத்தரிக்கும் வேலை கொடுத்து இருக்கலாம். குறிப்பாக அதிகமுறை ஃப்ளாஷ்பேக் காட்சிகளாகவே விரிவதை குறைத்திருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும்.. எடுத்துக்கொண்ட கதையிலும் சொல்ல வந்த விஷயத்திலும் எந்த குறையும் இந்த ரணசிங்கத்திடம் காண முடியாது. படத்தின் நீளத்தை தவிர.. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசு எந்திரத்தின், அரசு அதிகாரிகளின் லட்சணத்தை சாமானிய மக்களுக்கு தோலுரித்துக் காட்டும் விதமாக வந்திருக்கும் இந்த படம், பார்க்கும் நபர்களை கொஞ்சமாவது யோசிக்க வைத்தால், அதுதான் இந்த படத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *