பாரிஸ் துயரத்துக்கும் பெருமாள் முருகன் பிரச்னைக்கும் வித்தியாசம் இல்லை! – செந்தமிழன் சீமான் ஆவேசம்

எழுத்தாளர் பெருமாள் முருகன் பிரச்னை குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ மற்றும் ‘ஆளண்டாப் பட்சி’ நூல்களுக்கு எதிராக சிலர் பிரச்னை கிளப்பியதையும், அதையடுத்து நடந்த மிக மோசமான நிகழ்வுகளையும் பார்க்கிறபோது நாம் சுதந்திரம் பெற்ற மண்ணில்தான் வாழ்கிறோமா எனச் சந்தேகம் வருகிறது. தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான பெருமாள் முருகன் சர்ச்சைகளுக்காகவோ வெற்று பரபரப்புகளுக்காகவோ எழுதக்கூடியவர் கிடையாது.

அப்படியே அவருடைய புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இருந்தால் அதனை நீதிமன்றத்தின் மூலமாக ஜனநாயக முறையில் தட்டிக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவதூறாகப் பேசியும் குடும்பத்தையே விரட்டிவிடுவோம் என மிரட்டியும் கடையடைப்பு நடத்தியும் ஓர் எழுத்தாளரை மனம் நோகடித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

புத்தகத்தில், தான் குறிப்பிட்டிருக்கும் செய்திகள் யாவும் முன்பொரு காலத்தில் நடந்தவையாகவே சொல்லப்பட்டிருப்பதாக பெருமாள் முருகன் விளக்கிய பிறகும் அவரைப் பேச்சுவார்த்தை என்கிற பெயரில் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்திருப்பது எழுத்து உரிமைக்கு விடப்பட்டிருக்கும் அப்பட்டமான சவால்.

சமூகத்தின் பிரதிபலிப்பே எழுத்து. அதில், யாருக்கேனும் மன வருத்தமோ மாற்றுக்கருத்தோ இருந்தால், அதனை நியாயமான முறையிலேயே அணுகி இருக்க வேண்டும். ஆனால், மதவாதத்துடனும் சாதிய அணுகுமுறையோடும் ஓர் எழுத்தாளரை நிர்பந்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

இத்தகைய தொடர் நெருக்கடியால் எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது படைப்புகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் இனிமேல் எழுதப்போவது கிடையாது எனவும் அறிவித்திருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

பாரிஸில் பத்திரிகையாளர்கள் ஏழு பேர் மீது நடத்தப்பட்ட கொலைத்தாக்குதலுக்கும், பெருமாள் முருகன் மீது நடத்தப்படும் அடாவடிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஓர் எழுத்தாளனின் உணர்வையும் படைப்பையும் சிதைப்பது படுகொலைக்குச் சமமானதுதான்.

மதவாதமும் சாதியமும் இந்தப் பிரச்னையின் பின்னணியாக இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இத்தகைய கொடூரத்தை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. எத்தகைய மிரட்டல்கள் சூழ்ந்தாலும் பெருமாள் முருகனுக்கு பாதுகாப்பு அரணாகவும் உறுதுணையாகவும் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் திரள்வார்கள்.

அதேநேரம் தனது முடிவிலிருந்து பெருமாள் முருகனை மறுபரிசீலனை செய்யக் கோரியும் நாம் தமிழர் கட்சி வேண்டுகிறது. எத்தகைய அடக்குமுறைகளையும் எதிர்க்கிற நெஞ்சுரம் எழுத்தாளர்களுக்கு உண்டு என்பதை பெருமாள் முருகன் நிரூபிக்க வேண்டும். எந்நாளும் மாறாத தீரத்துடன் அவர் தொடர்ந்து எழுத்துலகில் பயணிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *