போதிய நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும்! – செந்தமிழன் சீமான் கோரிக்கை

விவசாயிகள் பாதிக்கப்படாமல் நெல் விற்பனையை மேற்கொள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அதிகமாகத் திறக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தற்போது தீவிர நெல் அறுவடை நடந்து வருகிறது. வடகிழக்கு மழையின் துணையால் கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் ஓரளவுக்கு நல்ல விளைச்சல் கிட்டியிருக்கிறது. ஆனால், அவற்றை உரிய விலைக்கு விற்க, போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் மிகுந்த கவலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

ஒரு சில கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதமாக இருப்பதாகக் கூறி நெல்லைத் திருப்பி அனுப்புவதாகவும், இதனால் வெளி வியாபாரிகளிடம் மிகக்குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாகவும் விவசாயிகள் புலம்பி வருகிறார்கள். எனவே, இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு விவசாயிகளின் விடிவுக்கு வழிசெய்ய வேண்டும்.

போதுமான நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்தும், கொள்முதல் கெடுபிடிகளைத் தளர்த்தியும், அதிகாரிகள் விவசாயிகளை உரிய மரியாதையுடன் நடத்த அறிவுறுத்தியும் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல இக்கட்டுகளைக் கடந்து அறுவடையை முடித்திருக்கும் விவசாயிகள் உரிய பலனை அடைய அரசு உடனடியாக வழிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.