சேது பூமி – விமர்சனம்


ராமநாதபுரம் மண்மனம் கமழ வந்திருக்கும் படம் தான் இந்த சேதுபூமி.. கதையின் நாயகன் தமன் வேலை விஷயமாக வெளிநாடு செல்வதற்கு முன் சொந்த ஊருக்கு வந்து சில நாட்கள் தங்குகிறார். ஊரில் தாயில்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளரும் சம்ஸ்க்ருதியை பார்த்ததும் காதல் கொள்கிறார்..

ஆனால் சம்ஸ்க்ருதியோ தன்னைவிட்டால் தந்தைக்கு ஆதரவு இல்லை என இந்த காதலை ஏற்க மறுக்கிறார். ஒருகட்டத்தில் ஏமாற்றத்துடன் வெளிநாடு கிளம்பும் தமனை ஒரு கும்பல் கொல்ல முயற்சிக்கிறது… அதனால் பயணத்தை கைவிட்டுவிட்டு ஊரிலேயே இருக்க முடிவு செய்கிறார் தமன்..

கிராமத்தில் செல்வாக்க இருக்கும் தனது தந்தைக்கும் எதிராளி செரன்றாசுக்கும் இருக்கும் பகை, காதல் புறக்கணிப்பு, சம்ஸ்க்ருதியின் தாய்மாமன் கேந்திரன் முனியசாமியின் கோபம் இவற்றையெல்லாம் தமன் சமாளித்தாரா என்பதை அதிரவைக்கும் க்ளைமாக்ஸுடன் சொல்லியிருக்கிறார் கேந்திரன் முனியசாமி.

ஏற்கனவே இரண்டு படங்களில் நமக்கு அறிமுகமான நபர் என்பதால் தமன் நம் மனதில் தனது நடிப்பால் எளிதாக பதிகிறார். கதாநாயகி சம்ஸ்க்ருதி ஆரம்ப காட்சி முதலே நம்மை வசீகரிக்க ஆரம்பித்து விடுகிறார். அவரது அழகும் பக்குவமான நடிப்பும் அந்த கேரக்டரை தாங்கி பிடிக்கின்றது.

படத்தின் மைய கதாபாத்திரமாக வரும் இயக்குனர் கேந்திரன் முனியசாமியின் அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பலம்.. தமன் தனது அக்காள் மகளை காதலிப்பதை அறிந்து சந்தோஷப்படுகிறார். அவர்களை சேர்த்து வைக்க முற்படும்போது மனதில் நிற்கிறார். மற்ற துணை பாத்திரங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வி.டிபாரதி – வி.டிமோனிஷ் என்கிற அறிமுக இரட்டை இசையமைப்பாளர்களின் இசை ஓரளவு ரசிக்கவே வைக்கிறது. வழக்கமான கிராமத்து பாணியிலான கதைதான் என்றாலும் உறவுகளையும் உள்ளூர் மனிதர்களின் வன்மத்தையும் அழக்காக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கேந்திரன் முனியசாமி. படத்தின் க்ளைமாக்ஸ் அதிரவைத்தாலும் அது உண்மையில் நடந்த சம்பவத்தின் பிரதிபலிப்புதான் எனும்போது நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

மொத்தத்தில் மண்மனம் கமழ ஒரு கிராமத்து விருந்து தந்திருக்கிறார் இயக்குனர் கேந்திரன் முனியசாமி.