ஐந்து சகாப்தங்களை நிறைவு செய்த பாடகர்!!!!

 

தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே…. என்று நம்மை எல்லாம் தாலாட்டியவர், தாலாட்டிக் கொண்டிருப்பவர் இசை மாமேதை ’பத்மபூஷண்’ டாக்டர். கே.ஜே.யேசுதாஸ்.

திரை இசை, கர்நாடக இசை, பன்மொழிப் பாடல்கள் மட்டுமின்றி தெய்வீகப் பாடல்களாலும் நம்மை எல்லாம் வசீகரித்து ஆட்கொண்ட இவர், 17 மொழிகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி மாபெரும் இசை வேள்வியையே நடத்திக் காட்டியிருக்கிறார்.

சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளை 43 முறையும் வென்றவர். போகாத நாடில்லை, பாடாத மொழியில்லை, பெறாத விருதில்லை எனும் வகையில் இவரது சாதனை சரித்திரம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு அள்ள அள்ளக் குறையாத இசைப் புதையலாய் விளங்குகிறது.

இத்தகைய ஈடு இணையற்ற மகத்தான பாடகர் ஐந்து சகாப்தங்களை நிறைவு செய்து தனது இசைப்பயணத்தை இன்றளவும் இனிதே தொடர்ந்து கொண்டிருப்பதை கவுரவிக்கும் வகையிலும், ஒரு இசைத்திருவிழாவாகவே போற்றிக் கொண்டாடவும் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை தரங்கிணி, வி ரெக்கார்ட்ஸ், ராஜ் ஈவண்ட்ஸ் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனவரி 25ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ள இந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மேலும் முன்னணி திரை நட்சத்திரங்கள் அனைவரும்  திரண்டு வந்து தங்களின் அபிமான பாடகரைப் போற்றி கவுரவிக்க உள்ளனர்.