விஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்

இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் நடிக்கவுள்ள விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் கடந்த ஒரு வருடமாக நடிப்புக்கு ஓய்வு கொடுத்திருந்தார்.

இதற்கிடையில் சுந்தர்.சி இயக்கத்தில் சங்கமித்ரா படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. படக்குழுவுடன் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்திலிருந்து விலகினார். அதன்பிறகு புதிய படங்கள் எதுவும் ஏற்காமல் இருந்தார். இந்நிலையில் தந்தை கமலுடன் ‘சபாஷ் நாயுடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதுடன் இந்தி படமொன்றிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் 2 படங்களும் படப்பிடிப்பு நடக்காமல் முடங்கி உள்ளது. தற்போது இங்கிலாந்து சென்று லண்டன் நகர மேடைகளில் ஆங்கில பாப் இசை பாடகியாக அவ்வப்போது பாடல்கள் பாடி வருகிறார்.

ஒரு வருட இடைவெளிக்கு பிறகு ஸ்ருதி ஹாசன் தமிழில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தை ஜனநாதன் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். இதுவரை கிளாமர் கமர்ஷியல் ஹீரோயினாக நடித்து வந்த ஸ்ருதியிடமும் மாறுபட்ட நடிப்பை வரவழைக்கும் வகையில் அவரது கதாபாத்திரத்தை ஜனநாதன் அமைப்பார் என்றும் தெரிகிறது.