நட்சத்திர கிரிக்கெட் விவகாரம் ; அஜித்துக்கு பதிலடி


நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட நிதி திரட்டத்தான் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துகின்றனர்.. இதன் மூலம் சேனல் ஒன்றிலிருந்து 9 கோடி ரூபாய் தர ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் எந்த ஒரு சினிமா நிகழ்விலும் கலந்துகொள்ளத அஜித், இந்த விழாவை நடத்தி மக்களிடம் ஏன் காசு பறிக்கணும்.. நடிகர்களே ஆளுக்கு கொஞ்சம் போட்டால் கட்டடம் கட்டிவிடலாமே என சொன்னதாக கூறப்படுகிறது..

என்றைக்கு அவர் வாயை திறந்து பேசியிருக்கிறார்..? அதனால் இதுவும் அவர் தரப்பில் இருந்து வந்த அதிகாரப்பூர்வமற்ற தகவலாக இருந்தாலும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நடிகர்சங்கத்திற்கு ஆதரவாக சோஷியல் மீடியாவில் அறிக்கை ஒன்று உலா வந்துகொண்டு இருக்கிறது. அதன் சாராம்சம் இதுதான்..

“நடிகர் சங்க கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைகோ, உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ஒன்று. இந்த நட்சத்திர கிரிகெட்டில் பங்குபெறும், ஆதரிக்கும் நடிகர்கள் தங்களது சொந்த செலவிலே கட்ட முடியும், ஆனால் நலிந்த நடிகர்களின் பங்கு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதன் மூலம் நடிகர்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க உள்ளனர்.

ஒரு சில நடிகர்கள் தங்களது பண வசதியை காட்டவும், பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமலும், தனது ரசிகர்களை கொண்டு தனது திரை குடும்பத்தையே விட்டுகொடுத்து சுய விளம்பரம் செய்கிறார்கள். கலைத்துறை சார்ந்த விழாக்களை ஆரம்பம் முதல் புறக்கணித்து வருபவர்களும் அவர்களே

மக்களை சுரண்ட கூடாது என்கின்றார்களே. ஆனால் அவர்கள் நடித்த படம் பார்க்க ரசிகர்கள் பணம் கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்கிய பிறகுதானே திரையரங்கம் உள்ளே விடுகிறார்கள். அந்நேரம் அந்த நடிகர்கள் என் ரசிகர்களிடம், மக்களிடம் காசு வாங்காதீர் என்று அறிக்கை விட வேண்டியது தானே? அல்லது தங்கள் நடித்த படம் மூலம் மக்கள் காசு சுரண்ட பட கூடாது என்று நினைத்தால் இலவசமாக படம் நடித்து திரையிட வேண்டியது தானே?

இந்திய கிரிகெட் அணி விளையாட்டை காண நுழைவு கட்டணம் பெற்று தான் செல்லவேண்டும். அதற்காக இந்திய அணி விளையாட்டில் மக்கள் பணம் சுரண்டப்படுகிறது என்று குற்றம் சாற்றுவர்களோ? தன்னிடம் பணம் இருக்கு என்பதற்காக வீட்டில் இருந்து தனது பண ஆளுமையை காட்டும் சில நடிகர்களால் பணம் இல்லாத, வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நடிகர்களின் மனதை எவ்வாறு அறியமுடியும்?

சினிமா என்பது ஒரு பொழுது போக்கு.. திரைக்குடும்பத்தின் தேவைகளை சரிசெய்ய அனைத்து நடிகர்களும் ஒன்றுகூடி நட்சத்திர கிரிகெட்டில் பங்கு கொள்கின்றனரே தவிர அவர்களது சொந்த செலவுக்கு அல்ல என்பதை அறியவேண்டும். விவாதம் செய்யும் நடிகர்கள் ஒரே ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவேண்டும் முதலில் அவர்கள் அவர்களின் திரை குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ நாம் என்ன செய்தோம் என்று யோசித்து பார்க்க வேண்டும்.”

இப்படித்தான் அதில் சொல்லப்பட்டு உள்ளது. இதை பார்க்கும்போது முழுக்க முழுக்க அஜித்தை குறிவைத்தே எழுதப்பட்டிருப்பது நன்றாக தெரிகிறது.. ஆனால் இதனை வெளியிட்டவர்கள் விஜய் அல்லது விஷால் ரசிகர்களாக இருக்கலாம் என தல ரசிகர்கள் கறுவிக்கொண்டு இருக்கிறார்களாம்.