ஜெமினியின் பேரன் தற்கொலை முயற்சி செய்தது ஏன்..!

மறைந்த காதல் மன்னன் ஜெமினி கணேசன் பேரன் அபினய் ‘ராமானுஜன்’ என்கிற படத்தில் நடித்தார். படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் அபினய்யின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஆனாலும் அடுத்து அவரைத்தேடி வாய்ப்புகள் எதுவும் வந்தபாடில்லை. அதனால் தன்னை வைத்து தானே படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்.

படத்திற்கு கே.ஏ.சூரியநிதி என்பவரை இயக்குனராக்கி, ‘விளம்பரம்’ என்று டைட்டிலும் வைத்தார். மனதார காதலிக்கும் ஹீரோ, ஹீரோயின் ஜோடி, விளம்பர படம் எடுப்பது சம்பந்தமாக மலேசியா செல்கின்றனர். அங்கு தன் பழைய காதலியை ஹீரோ சந்திக்கிறார். அத்துடன் விபரீத விளைவுகளையும் சந்திக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.

ராமானுஜம் படத்தில் தனக்கு கிடைத்த புகழை வைத்து எப்படியும் படத்தை பிசினஸ் பண்ணிவிடலாம் என்கிற கணக்கில், இரண்டு தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து மறைமுக பார்ட்னராக பணத்தை உள்ளே இறக்கினார். ஆனால் இன்றுதான் சினிமா வேறுமுகம் காட்டுகிறதே.. அது லேட்டாகத்தான் புரிந்திருக்கிறது ஜெமினியின் பேரனுக்கு.

படத்தை பிசினஸ் பண்ண முடியவில்லை… படத்தை போட்டுக்காட்டினால் பார்ப்பதற்கு வரக்கூட பலர் தயங்கினார்கள்.. வந்தவர்களோ இது தேறாது என்கிற ரீதியில் உதட்டை பிதுக்கினார்கள். இவை எல்லாம் சேர்ந்து அபினய்க்கு மன உளைச்சலை உண்டாக்க, தூக்க மாத்திரைகளை விழுங்கி, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது அபாயகட்டத்தை தாண்டியதோடு, ஓரளவு குணமாகி வீட்டிற்கு திரும்பியுள்ளாராம். அவரது பாட்டி சாவித்ரியே பீக்கில் இருக்கும்போது சொந்தப்படம் எடுத்து நஷ்டப்பட்டவர் தான்.. இந்த சின்ன வயசுல இந்தப்புள்ள இப்படி தயாரிப்பு அது இதுன்னு இறங்கலாமா என்கிறார்கள் தகவல் அறிந்த சில விநியோகஸ்தர்கள்.