நடிகர் சூர்யா மகிழ்ச்சி – கமலின் கலையுலக 60ம் ஆண்டு நிறைவையொட்டி இணையதளத்தை தொடங்கி வைத்தார்


நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் நடிக்க வந்து 60 வருடம் நிறைவு பெற்றுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை மேலும் சிறப்பிக்கும் வகையில் ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை நடிகர் சூர்யா தொடங்கி வைத்திருக்கிறார்.

இதுகுறித்து சூர்யா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது ‘நீங்கள் நடிக்க வந்து 60 ஆண்டுகளை குறிக்கும் வகையில் ஒரு இணையதளம் தயாரிக்கப்பட்டுள்ளது. உங்களை அண்ணா என்று அழைப்பதா? சித்தப்பா என்று அழைப்பதா? என்ற குழப்பம் எனக்கு இருக்கும். ஆனால் இந்த இணையதளத்தை எல்லா ரசிகர்களுடன் சேர்ந்து ஒரு ரசிகனாக வெளியிடுவதை ஒரு கர்வமாக, உரிமையாக, கடமையாக நான் பார்க்கின்றேன். இந்த வாய்ப்பளித்த உங்களுக்கும் இந்த இணையதளத்தை தயாரித்த அனைவருக்கும் எனது நன்றிகள் என்று கூறியுள்ளார்.

மேலும் ட்விட்டர் பக்கத்தில், ‘அன்பு அண்ணன் கமல்ஹாசன் அவர்களின் கலைக்குடும்பத்திலும் ரசிகக்குடும்பத்திலும் ஒருவனான எனக்கு அவரின் கலையுலக பயணத்தின் 60வது ஆண்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தை வெளியிடும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி’ என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.