விஜய்சேதுபதியை குறிவைக்கும் விஷமிகள்


விஜய் சேதுபதி கடந்த பிப்ரவரி 6-ம் தேதி செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்கத் தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘டிஜிகாப்’ என்ற மொபைல் செயலி குறித்து, காவல்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது விஜய் சேதுபதி, `காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி, இந்த `டிஜிகாப்’ செயலி மூலம் குறையும்” என்றார். இதைப் பிரபல செய்தி தொலைக்காட்சி பதிவிட்டது.

இதை வேறு சிலரோ, விஜய் சேதுபதி சொன்ன கருத்துக்கு மாறாக பகவத் கீதையை அவதூறு கூறுவதுபோல் இருக்கும் வாசகத்தை போட்டோஷாப் மூலம் வைத்துள்ளனர். அதை சில சமூக வலைதள பக்கங்கள் விஜய் சேதுபதியின் கருத்து போல் பதிவிட்டிருந்தன.

இதற்கு நிறைய எதிர்மறை கருத்துகள் வந்த வண்ணம் இருக்க, இச்செய்தியை அறிந்த விஜய் சேதுபதி தனது முக நூலில் விளக்கம் அளித்துள்ளார். அதில், செய்தி நிறுவனத்தின் உண்மைச் செய்தியையும், விஷமிகள் பரப்பிவிட்டு போட்டோ ஷாப் கருத்தையும் பதிவிட்டு,

“‪என் அன்பிற்குரிய மக்களுக்கு‬ ‪பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை‬ பேசவும் மாட்டேன்‬. ‪சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது‬.

‪எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்‬.” எனப் பதிவிட்டிருந்தார். இப்பதிவுடன் தான் பேசிய காணொலிக்கான லிங்கையும் பதிவு செய்துள்ளார்.

அதை பார்க்கும்போது விஜய்சேதுபதி காவல்துறை பற்றி மட்டுமே பேசியிருப்பது தெளிவாக தெரிகிறது. விஜய்சேதுபதியின் புகழை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே சில விஷமிகள் இப்படி அவதூறாக செய்திகள் வெளியிட்டுள்ளனர் என்பதும் புரிகிறது.