‘பாட்ஷா’ டைட்டிலை விட்டுக்கொடுக்க மாட்டோம்” – ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு..!

ஆன்னா ஊன்னா ஒரு ஆக்சன் கதையை ரெடி பண்ணிட்டு உடனே ரஜினி பட டைட்டில தேடி ஓடுறதே இன்னிக்குள்ள முன்னணி நடிகர்களுக்கும் அவங்களை உசுப்பேத்திவிட்டு படம் பண்ற இயக்குனர்களுக்கும் வேலையா போச்சு.. சில நாளைக்கு முன்னாடி தான் விஜய் வரைக்கும் ரஜினி டைட்டிலை தேடி ஓடுறத சொல்லியிருந்தோம். இப்போ அஜித்தும் அந்த லிஸ்ட்ல சேரப்போறதா தகவல் கசிந்திருக்கு.

அதாவது ரஜினியின் எவர்கிரீன் பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘பாட்ஷா’ டைட்டிலைத்தான் அஜித் நடிக்கும் படத்திற்கு வைக்க முடிவு செய்துள்ளார்களாம். அப்படினா கதை..? ஒரிஜினல பாட்ஷாவை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா தற்போது பாட்ஷா-2வுக்கான ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்து ரஜினியிடம் சொல்லியுள்ளார்.

ஆனால் பாட்ஷாவில் இருந்த ‘பெப்’பில் பாதி கூட இந்த இரண்டாம் பாகத்தில் இல்லை என்பதால் ரஜினி தயவு தாட்சண்யம் பார்க்காமல் ரிஜெக்ட் பண்ணிவிட்டாராம். ஆரம்பத்தில் சோர்ந்தாலும், உடனே அதே கதையை தூக்கிக்கொண்டு அஜித்திடம் போய் சொன்னாராம் சுரேஷ்கிருஷ்ணா..

அஜித்துக்கும் கதை பிடித்துப்போய் ஒகே சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. அப்படின்னா டைட்டில் என்னன்னு கேட்குறீங்களா..? அதே ‘பாட்ஷா-2’ தானாம். இப்படி ஒரு தகவல் வெளியானதும் தான் ரஜினி ரசிகர்கள் வட்டாரத்தில் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதுவரை தனுஷ் (மாப்பிள்ளை, படிக்காதவன்), விஷால் (பாயும் புலி), சுந்தர்.சி (தீ, குரு சிஷ்யன்), சிவா (தில்லுமுல்லு) என சிலர் ரஜினி டைட்டில்களை தங்களது படத்துக்கு பயன்படுத்தியுள்ளார்கள். ஏன் அஜித்தே கூட ரஜினியின் ‘பில்லா’ டைட்டிலை பயன்படுத்தி ஹிட் கொடுத்து, அடுத்ததாக ‘பில்லா-2’வை எடுத்து பிளாப்பும் கொடுத்தவர்தான்.

இதுவரைக்கும் கூட ரஜினி ரசிகர்கள் போனால் போகிறதென்று சகிப்புத்தன்மையுடன் பொறுத்துக்கொண்டார்கள்.. ஆனால் ‘பாட்ஷா’ டைட்டிலை கேட்டு எந்த ஒரு நடிகரும் கிளம்புவதை கடைநிலை ரஜினி ரசிகன் கூட விரும்ப மாட்டான். காரணம் இருக்கிறது.. சூப்பர்ஸ்டார் நடித்த படங்களில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்கள் அல்லாத பொதுமக்களையும் கவர்ந்திருக்கும்.. ஆனால் பாரபட்சமில்லாமல் அனைவரையும் கவர்ந்த ஒரே ரஜினி படம் என்றால் அது 1995ல் வெளியான, சூப்பர்ஸ்டாரின் எவர்கிரீன் பிளாக் பஸ்டரான ‘பாட்ஷா’ தான்.

பாட்ஷா இன்டர்வெல் பிளாக்கில் ரஜினி ஆடும் ருத்ர தாண்டவத்தை இன்று பார்த்தாலும், ஏன் நினைத்தாலே கூட புல்லரிக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்தப்படம் வெளியாகி இருபது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால் இன்றும் பண்டிகை நாட்களில் எத்தனையோ புதுப்படங்களை மற்ற சேனல்கள் ஒளிபரப்பினாலும் அவை அத்தனையையும் சமாளித்து, மொத்த ஆடியன்ஸையும் தன்பக்கம் திருப்ப சன் டிவி வைத்திருக்கும் முக்கியமான ‘துருப்புச்சீட்டே ‘பாட்ஷா’ தான்.

இந்தப்படத்திற்குப்பின் பல நடிகர்கள் நடித்த படங்களுக்கு சஸ்பென்ஸ் ஆக்சன் பிளாக்கிற்கு ரூட் போட்டுக்கொடுத்ததும் இந்த பாட்ஷா தான். இதற்கு முன்னும் பின்னும் ரஜினி பல வெள்ளிவிழா படங்களில் நடித்திருந்தாலும் ரஜினி ரசிகர்களுக்கு ‘பாட்ஷா’ என்றுமே தித்திக்குமே சர்க்கரை பொங்கல் தான். ரஜினியே இனி இதுபோல ஒரு படத்தில் நடிக்க முடியுமா என்பதும் சந்தேகம் தான்.

இதுபோக, தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாதது போல ‘பாட்ஷா’ டைட்டிலில் வேறு எவர் நடித்தாலும் அவர்களால் பாட்ஷாவாக மாறவே முடியாது.. மீறி முயற்சி செய்தாலும் அது காமெடியாக முடிந்துவிடும். ஆக பாட்ஷா என்றால் ரஜினி.. ரஜினி தான் பாட்ஷா.. இதைத்தான் தன் இதயத்தில் நிரந்தரமாக எழுதி வைத்துள்ளான் ரஜினி ரசிகன்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த ‘பாட்ஷா’ பட டைட்டிலை ஒருவேளை ரஜினியும், சத்யா மூவிஸ் நிருவனமும் கூட விட்டுத்தர சம்மதித்தாலும் நாங்கள் ஒரு போதும் சம்மதிக்கமாட்டோம். மீறினால் போராட்டத்தில் கூட இறங்குவோம் என கொந்தளிக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.. கொடுக்கப்போவதாக ஒரு பேச்சு எழும்போதே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், கொடுக்கும் சூழல் உருவானால்..? இந்த அனல் நிச்சயம் அஜித்தை அட்டாக் பண்ணும் என்பது உறுதி.