சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – விமர்சனம்

நீங்கள் சென்னையில் வசிக்கும் பேச்சிலரா..? அல்லது பேச்சிலர் வாழ்க்கையை கடந்து வந்தவரா..? அப்படியானால் இது உங்களுக்கான படம் தான். கதைக்காக தனியாக மெனக்கெடாமல் பேச்சிலர்கள் அன்றாட வாழ்வில் கடந்துபோகும் சம்பவங்களின் தொகுப்பாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மருதுபாண்டியன்..

சினிமாவில் இயக்குனராகும் லட்சியத்துடன் சென்னைக்கு வந்த சிம்ஹா, அவருடன் சினிமாவுக்கு முயற்சிக்கும் இன்னொரு நபரான பிரபஞ்செயன், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் லிங்கா இவர்கள் எல்லோரும் ஒரே ரூம் மேட். ஒருபக்கம் பிரபஞ்செயன் பண்ணும் அழிச்சாட்டியங்களாலும், இன்னொரு பக்கம் லிங்கா அடிக்கடி ஏதாவது ஒரு பெண்ணை ரூமுக்கு கூட்டிவந்து உல்லாசமாக இருப்பதாலும் பலமுறை வீடு மாறவேண்டிய சூழல் உருவாகிறது.

இதில் கிராமத்தில் இருந்து வேலை வாங்கித்தருவதாக ஆசைகாட்டி ஒரு விவாகரத்தான் பெண்ணை அழைத்து வரும் லிங்கா, அவரிடம் காதல் மொழியில் ஆசை வார்த்தை பேசி கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆகிறார். பிரச்சனைகள் தொடரவே, சிம்ஹாவும், பிரபஞ்செயனும் மீண்டும் புதிய ரூம், புதிய பிரச்சனைகள் என தொடர் அனுபவங்களுக்கு ஆளாகின்றனர். சென்னை அவர்களை உருப்பட வைத்ததா, ஊருக்கு விரட்டி அடித்ததா என்பதை கொஞ்சம் யதார்த்தம் மீறி சொல்லி முடித்திருக்கிறார்கள்.

நாலைந்து வருடங்களுக்கு முன் நடிக்க ஒப்பந்தம் ஆன படம் என்பதாலோ என்னவோ சிம்ஹாவை இடைவேளை வரை டம்மியாகவே வைத்திருப்பதும், அதன்பின் அவருக்கு கிடைத்த புகழால், இடைவேளைக்குப்பின் அவரை கதாநாயகனாக போகஸ் பண்ணுவதும் தெளிவாகவே தெரிகிறது. உருவமும் குரலும் கண்டினியூட்டி மிஸ்ஸாவது தவிர சிம்ஹாவின் நடிப்பில் குறையேதும் இல்லை.. ஹவுஸ் ஓனருக்கு தெரியாமல் மாடிப்படிகளில் காத்திருக்கும் காட்சி இன்றும்கூட சென்னையில் நம்மில் பலர் சந்திக்கும் அவலம் தான்.

ஊரில் தனது அம்மா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்து உடனே ஊருக்கு கிளம்பாமல், யாரவது காதலியுடன் உல்லாசம் அனுபவிக்க துடிப்பார்களா..? அப்படி ஒரு காட்சியின் மூலமே லிங்காவின் கதாபாத்திராம் வெளிப்படுவது, படம் முழுவதும் அவருக்கான காட்சிகளில் நம்மை ஒன்றவைக்கிறது. இப்படி ஒரு கதாபாத்திரத்தை பலரும் ரூம் மேட்டாக கடந்து வந்திருப்போம்தானே.. அந்தவகையில் சிம்ஹாவை விட லிங்கா கொஞ்சம் அதிகப்படியாக ஸ்கோர் செய்கிறார்.

விவாகரத்தாகி தனியாக வேலை தேடும் இளம்பெண்கள் எப்படி சில மன்மதன்களுக்கு இரையாகிறார்கள் என்பதை தனது கேரக்டர் மூலம் நடிப்பால் நிலைநிறுத்தியுள்ளார் சரண்யா.. போதையில் மாடியில் இருந்து ஹவுஸ் ஓனர் மீது யூரின் பாஸ் பண்ணும் பிரபஞ்செயன், லிங்கா-சரண்யா இருவரையும் சேர்க்கும் காட்சிகளில் மனதில் நிற்கிறார்.

இரண்டு பேரை ஒரே நேரத்தில் காதலிக்கும் காதலி, அதில் சீனியர் யார் என்பதிலான போட்டியில் காதலிக்காக தனது மீசையை எடுத்து, ‘எதுக்குடா மீசைய எடுத்த’ என தனது எதிராளியை சந்தேகத்தில் கொந்தளிக்கவிடும் அல்போன்ஸ் புத்திரன் (நேரம் பட இயக்குனர் தான்), முடிஞ்ச வாடகையை கொடுங்கப்பா என பரிவுகாட்டி, தங்கியிருக்கும் பேச்சிலர் பசங்களிடம் கடைக்கு போய்வரும் வேலைசெய்ய சொல்லும் யதார்த்த ஹவுஸ் ஓனர் என பல சுவராஸ்ய கேரக்டர்களும் படத்தை உயிர்ப்பாக வைக்கிறார்கள்.

ஒரு புதிய முயற்சியாக இந்தப்படத்தை மருதுபாண்டியன் இயக்கிருப்பது தெரிகிறது.. அதை சில சூழல்களில் சரியாக கையாளாமல் விட்டிருப்பதும் அப்பட்டமாக தெரிகிறது. க்ளைமாக்ஸில் டக்கென யதார்த்தத்தை விட்டு விலகியது ஏன் என்றுதான் புரியவில்லை. அதேபோல கிரமாத்தில் இருந்து சென்னைக்கு வந்து மார்க்கெட்டில் வேலைபார்க்கும் மருதுபாண்டியன் (படத்தின் டைரக்டர் தாங்க) கேரக்டரின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

ஆனால் இன்று சென்னையில் வசிக்கின்ற, சென்னைக்கு வந்து பிழைக்க முடியாமல் ஊர் திரும்பிய பலரின் ஞாபகங்களை கிளறிவிட்டுள்ள இந்தப்படத்தை, போரடிக்காமல், சுவராஸ்யமாக கொண்டு சென்றதற்காகவே இயக்குனர் மருதுபாண்டியனை தாராளமாக பாராட்டலாம்.