அனிருத்தை கழட்டிவிடும் ஆரம்பகட்ட முயற்சியில் தனுஷ்..?

பிரச்சனை வேறு கோணத்தில் நடந்துகொண்டிருந்தாலும் அதன் மையப்புள்ளி நாம் மேலே சொன்னதுதான். அதற்கு முன் நடந்த சில விஷயங்களை பார்த்துவிடுவோம்.. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ வெற்றிக்கூட்டணியான இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தனுஷ் கூட்டணி மீண்டும் ‘சூதாடி’ படத்தில் இணைவதாகத்தான் கொஞ்சநாள் வரை பேச்சு இருந்தது.

ஆனால், தற்போது அந்தக் கூட்டணியில் இருந்து ஜிவி.பிரகாஷ் விலகிவிட்டாராம். ஜி.வி.பிரகாஷ் நடிகரான பிறகு தனுஷுக்கும், அவருக்கும் இடையே விரிசல் விழ ஆரம்பித்தது தான் இதற்கு காரணம் என்கிறார்கள். வெற்றி மாறனும், ஜி.வி.பிரகாஷும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இதை வெளிப்படையாக உடைத்து சொல்வதில் தனுஷ் தயக்கம் காட்டவே, சூழ்நிலையை புரிந்து கொண்ட ஜி.வி.பிரகாஷ் தானாகவே சூதாடி படத்திலிருந்து விலகிக் கொண்டாராம்.

இத்தனைக்கும் சமீபத்தில் வெற்றிமாறன், தனுஷ் இணைந்து தயாரித்து தேசியவிருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்திற்குக் கூட ஜி.வி.பிரகாஷ்தான். இசையமைத்திருந்தார். சரி.. ஜி.வி வேண்டாம் என்றால் அவருக்குப் பதிலாக அனிருத்தை தானே தனுஷ் உள்ளே இழுத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்.. அங்கே தான் ட்விஸ்ட் வைத்தார் தனுஷ்.

அந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்கிற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. வழக்கமாக அனிருத்தைத்தானே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்வார், அப்படியிருக்க சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்தது ஏன் என்றும் கேள்விகள் எழத்தானே செய்யும்.

அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. இந்த விஷயத்திலும் தனுஷ் ரஜினி பாணியை பின்பற்றுகிறார் என்றே தெரிகிறது. அதாவது இளையராஜாவின் இசை பீக்கில் இருக்கும்போது தானே தேவாவை தனது படத்திற்கு ஒப்பந்தம் செய்தார் ரஜினி. அந்த இரண்டு பேர் இருக்கும்போதுதானே அவர்களை ஒதுக்கிவிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு மாறினார்.

ஆக பாடல்களில் மாற்றம் வேண்டும் என்பது தனுஷின் விருப்பம். இப்போது சந்தோஷ் நாராயணின் இசை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளது. போன வருஷம் ‘ஆகாயம் தீப்பிடிச்சா’ பாடலால் உருகவைத்தவர், இந்த வருடம் ஜோதிகாவுக்காக இசையமைத்த ‘வாடி ராசாத்தி’ பாடலை அனைவரையும் முணுமுணுக்க வைத்துவிட்டாரே..

இது தவிர அனிருத் ஒவ்வொரு முறையும் ஏதாவது வெளிநாட்டு படங்களில் இருந்தோ, அல்லது ஆல்பங்களில் இருந்தோ ட்யூன்களை சுட்டுப்போடுவது தனுஷுக்கு அவமானமாக இருக்கிறதாம். எப்பவாவது ஒருக்கான்னா பரவாயில்ல.. எப்பவுமேன்னா..? இதனால் அவரை வளர்த்துவிட்ட கூலியாக, தனது பெயரும் கெடுவதாக நினைக்கிறாராம் தனுஷ்.

மேலும் அனிருத் இசையமைக்கும் பாடல்கள் பெரும்பாலும் ஒரே டைப்பில் இருப்பதாகவும் நினைக்கிறார் தனுஷ். ஆனாலும் ஒரேயடியாக உடனே அவரை கழட்டி விடமுடியாது என்பதால், தான் தயாரிக்கும் படத்திற்கு அனிருத்தையும் மற்றவர்களின் படத்துக்கு வேறு நபர்களையும் மாற்றுவது தான் தனுஷின் பிளான்.

நல்லா பண்ணுறாங்கய்யா பிளானு..