பப்ளிசிட்டி ஸ்டன்டுக்கு பழகிவிட்டாரா விஜய்..?


விஜய் படம் ரிலீஸாவதற்கு முன் வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் படத்திற்கு பப்ளிசிட்டி தான்..ஆனால் சமீபகாலமாக விஜய தனது படங்களுக்கு வான்டட் ஆகி பப்ளிசிட்டியை தேடுகிறாரோ என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளன. குறிப்பாக மெர்சல் படம் ரிலீஸானபோது பிஜேபி எதிர்ப்பால் பயங்கரமான பப்ளிசிட்டி கிடைத்தது. சுமாராக ஓட வேண்டிய படம் சூப்பராக ஓடியது. எதிர்ப்பு மூலம் கிடைக்கும் இந்த பப்ளிசிட்டி விஜய்க்கு ருசி காட்டிவிட்டதோ என்னவோ..?

அதனால் தான் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் வெளியான ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்தப் புகைப்படத்துக்கு, சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தான் மத்திய அமைச்சராக இருந்தபோது, ‘இனிமேல் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்’ என 2007-ம் ஆண்டு விஜய் தனக்கு கொடுத்த வாக்குறுதியையும் நினைவூட்டினார் அன்புமணி ராமதாஸ்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் புகையிலைத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு, படத்தில் இடம்பெற்றுள்ள அந்தக் காட்சியை நீக்குமாறு விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ் ஆகிய மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. அதை ஏற்று, அந்த போஸ்டரை தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியது சன் பிக்சர்ஸ்.

இப்போது இந்த பிரச்சனை கோர்ட் வரைக்கும் வந்துவிட்டது. விஜய்யின் ஒப்புதல் இல்லாமல் இந்த போஸ்டர் நிச்சயம் வெளியாகி இருக்காது. விஜய் நினைத்திருந்தால் இதை தடுத்திருக்கலாம் என்றே பலரும் சொல்கிறார்கள். இப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பும் என தெரிந்தே இந்த போஸ்டரை வெளியிட செய்ததன் மூலம் பப்ளிசிட்டியை விஜய் தேடுகிறார் என்றே அர்த்தமாகிறது. ஒருவேளை பப்ளிசிட்டி ஸ்டன்டுக்கு பழகிவிட்டாரா விஜய்..?