வெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டது.. சத்யராஜின் அடடே கண்டுபிடிப்பு


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வார்த்தை சொன்னாலும் கூட அது பல வருடத்திற்கு தாக்கம் ஏற்படுத்த கூடிய வலிமை வாய்ந்ததாக இருக்கும். அப்படி கடந்த வருடம் எம்ஜிஆர் பல்கலைக்கழக விழாவில் மாணவர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியபோது, கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் அரசியலில் இல்லாததால் நல்ல தலைமைக்கான ஒரு வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நான் நிரப்புவேன் எனக் கூறினார்.. அவர் அப்படி சொன்னாலும் சொன்னார், தமிழகத்தில் உள்ள பிரபல கட்சி தலைவர்கள், தலைவர்களின் வாரிசுகள் எல்லாம் அப்போது இருந்து இப்போது வரை லபோதிபோ என அடித்துக் கொண்டு வெற்றிடம் இல்லை என முழங்கி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் செயல் தலைவர் ஸ்டாலின், சிலர் சொல்வது போல வெற்றிடம் எல்லாம் எதுவும் இல்லை அது கலைஞருக்கு பின்னால் தன்னால் நிரப்பப்பட்டு விட்டது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மறைமுகமாக பதில் அளிக்கும் விதமாக பேசினார்.

அவர் பேசியதையாவது ஏதோ ஒரு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.. சமீபத்தில் அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக திமுக நடத்திய விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் திமுகவின் வெற்றியை புகழ்ந்து பேசி இருந்தால் கூட பரவாயில்லை.. பேசுவதற்கு ஏதாவது ஒரு மேடை கிடைக்காதா, அந்த இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, அவர் சொன்ன கருத்துகளை கிண்டல் செய்ய தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கிடக்கும் சத்யராஜ் இந்த விழாவைப் பயன்படுத்திக் கொண்டார்.

இந்த விழாவில் அவர் பேசும்போது திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.. சிலர் சொன்னது போல வெற்றிடம் எல்லாம் எதுவும் இல்லை, அது ஸ்டாலினால் நிரப்பப்பட்டு விட்டது.. அறிவியல் கணக்கின்படி வெற்றிடம் என ஒன்று உருவானால் அது உடனடியாக அருகில் இருக்கும் காற்றினால் நிரப்பப்பட்டு விடும் என்பதே உண்மை அதன்படி கலைஞருக்கு பின்னால் ஸ்டாலினால் வெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டது என தனது ஆராய்ச்சி கண்டுபிடிப்பை அந்த மேடையில் உதிர்த்துள்ளார் திடீர் விஞ்ஞானி சத்யராஜ்.

அறிவியல் கோட்பாட்டின்படி அண்டவெளியில் நிறைய இடங்கள் வெற்றிடங்களாக உள்ளன ஆழ்வெளிக்கு செல்ல செல்ல வெற்றிடங்கள் இன்னும் அதிகரிக்கும்.. வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட்டு விடுவதில்லை வெற்றிடம் உருவான மறுகணமே அது நிரப்பப்பட்டு விடுகிறது என்பது தவறு என குவாண்டம் இயற்பியல் கூறுகிறது.. ஆனால் சத்யராஜ் போன்ற சிலர், தங்களுக்கு வேண்டியவருக்கு ஜால்ரா அடிக்கும் நோக்கத்துடன் அதேசமயம் தனக்கு வேண்டாதவரை கிண்டலடிக்கும் எண்ணத்துடன் இப்படி வாய்க்கு வந்ததை உளறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.. இதில் சத்யராஜ் லேட்டஸ்ட் சாம்பிள்

அப்படியே வெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டது என்றாலும் கூட கலைஞருக்கு பின்னால் அவரது கட்சியில் அந்த இடத்தை ஸ்டாலின் நிரப்பி இருக்கிறாரே தவிர, தமிழகத்தில் ஒரு நியாயமான நேர்மையான நல்ல தலைவருக்கான வெற்றிடம் இப்போது மட்டும் இல்லை, கடந்த பல வருடங்களாகவே இருக்கிறது என்கிறார்கள் நடுநிலை அரசியல் விமர்சகர்கள்.