சூரியின் வண்டவாளங்கள் தெரியவேண்டாம் என பார்க்கிறேன் ; அதிரவைத்த விஷ்ணு விஷால்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் மற்றும் ராட்சசன் படத்திற்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் சினிமாவில் இன்னும் சில படிகள் மேலே ஏறியுள்ளார். ஆனால் ராட்சசன் படம் ஹிட்டாகியும் கூட தொடர்ந்து மூன்று வருடங்களாக அவரது படம் எதுவும் வெளியாகவில்லை.. இன்னொருபக்கம் தனது சக நண்பராக பத்துவருடம் பழகி வந்த நடிகர சூரியுடனான பிரச்சனை, பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்யப்போவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஊடகவியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார் விஷ்ணு விஷால்.

“சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. முதலில் ‘காடன்’ வெளியாகிறது. அதைத்தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் ‘எஃப் ஐ ஆர்’ வெளியாகவிருக்கிறது. ‘மோகன்தாஸ்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறேன்.

அடுத்ததாக ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். ‘ஜீவி’ படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். வேறு சில படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அதற்கடுத்து மீண்டும் சொந்த பட நிறுவனம் சார்பாக புதிய படம் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் தன்னம்பிக்கையுடன் பணியாற்ற காத்திருக்கிறேன்.

இந்த ஆண்டிலேயே பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன். திருமண தேதி இன்னும் தீர்மானிக்கவில்லை. முடிவான உடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.

826 நாட்களுக்குப் பிறகு நான் நடித்த திரைப்படம் ஒன்று திரையில் வெளியாகிறது. இடைப்பட்ட காலத்தில் எனக்கு ஆதரவளித்த ஊடகவியலாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ராட்சசன்’ படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்து தருணங்களின் போதும் எனக்குப் பக்கபலமாக இருந்து சொந்த வாழ்க்கைக்கு மதிப்பளித்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றவர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்ல தவறவில்லை…

உங்களுக்கும், சூரிக்கும் இடையிலான பிரச்சினை குறித்து…?

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து விரிவாக பதிலளிக்க இயலாது. இருப்பினும் எனக்கோ என்னுடைய தந்தைக்கோ சூரியின் நிலம் தொடர்பான பண பரிவர்த்தனை விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை என்பது தான் உண்மை. இந்த விவகாரத்தில் நான் நேர்மறையாக இருக்க விரும்புகிறேன். இது தொடர்பாக என்னால் அதிகமான விவரங்களை தெளிவாக தர இயலும். சூரி கொடுத்த புகாரில் உள்ள ஒவ்வொரு விஷயங்களுக்கும் என்னால் விளக்கம் கொடுக்க இயலும். அதன்பிறகு அவருடைய இருண்ட பக்கங்களை விளக்க வேண்டியதாக இருக்கும். இதன் காரணமாக அவருக்கும் எனக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

சில ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தந்தையின் காலில் விழுந்து வணங்கி, ‘நீங்கள் தான் என்னுடைய கடவுள்’ என்று சொன்ன ஒருவர், தற்போது என் மீதும், என்னுடைய தந்தை மீதும் புகார் அளித்திருக்கிறார்.

கொரோனா காலகட்டத்தில் என்னுடைய தந்தையை வெளியே அனுப்பாமல் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தேன். ஆனால் சூரியின் புகாரின் காரணமாக அவர் வழக்கறிஞர்களை சந்திப்பதற்கும், நீதிமன்றத்திற்கும் அலைய வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கி விட்டார். இதை ஒரு மகனாக பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இருப்பினும் இறுதியில் உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும்.

ஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன். சூரி மூலமாகத்தான் நான் சம்பாதித்து சாப்பிட வேண்டும் என்ற நிலை எனக்கில்லை. என்னுடைய தந்தை கூலி வேலை செய்து, மாடு மேய்த்து, கடினமாக உழைத்து, படித்து அதன் பிறகு போலீஸ் அதிகாரியாக உயர்ந்திருக்கிறார்.

சூரியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள். அதனை முழுமையாக நம்பி எங்கள் மீது புகார் அளித்திருக்கிறார். உண்மை ஒருநாள் தெரிய வரும்பொழுது அவர் எங்களை பற்றி உணர்ந்து கொள்வார்.

என்று கூறிய விஷ்ணு விஷால்,. பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை திருமணம் செய்துகொள இருக்கிறேன்.. தற்பொழுது அவர் ஹைதராபாத்தில் இருக்கிறார். திருமண தேதி முடிவானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மரியாதை காரணமாகவே அவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஏனெனில் எனக்கு காதல் மீது நம்பிக்கை போய்விட்டது. நான்காண்டு காதல், ஏழு ஆண்டு திருமண வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன். உறவுமுறையில் மரியாதை கொடுத்து மரியாதை பெறுவதுதான் சிறந்தது. நான் இக்கட்டான சூழலில் சிக்கிக் கொண்டிருந்த பொழுது அவர்கள் என்னுடைய உணர்வை மதித்தார்கள். அவர்கள் அடிப்படையில் விளையாட்டு வீராங்கனை என்பதால், அவர்களின் நேர்மறையான அணுகுமுறை என்னை கவர்ந்தது.

அவர்கள் ஹைதராபாத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் அகாடமியை நிறுவி நிர்வகித்து வருகிறார்கள். எனக்கு அவர்கள் ஆதரவாக இருந்ததைப் போல், நானும் அவர்களுக்கு எதிர்காலத்தில் ஆதரவாக இருக்க விரும்புகிறேன்” என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *