இயக்குனர் விக்ரமனை டென்சனாக்கிய இப்ராஹிம் ராவுத்தர் பேச்சு..!

எந்த இடத்தில் எதை பேசுவது என்று ஒரு வரைமுறை இருக்கிறது தானே..? ஏதோ ஒரு பிரச்சனைக்காக ஒன்றுகூடிவிட்டு சம்பந்தம் இல்லாமல் ஆதரவு தெரிவிக்க வந்தவர்களைப்பற்றி தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டால் ரசாபாசம் ஆகத்தானே செய்யும்.. அப்படித்தான் நேற்று முன் தினம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திலும் நடந்தது..

படங்களை தியேட்டர்களில் திரையிடுவதில் கியூப் மற்றும் யு.எப்.ஓ நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து தயாரிப்பாளர்கள் சங்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், பெப்சி அமைப்பு ஆகியவை ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டன.

ஆனால் இந்த போராட்டத்தில் ஆர்யா, ஜீவா, உதயநிதி, நாசர், சரவணன், சந்தானம் தவிர மற்ற பெரிய நட்சத்திரங்கள் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அப்படி கலந்து கொண்டவர்கள்கூட பேருக்கு கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு கிளம்பி விட்டனர்.

இது ஒருபக்கம் இருக்க, உண்ணாவிரத்தில் தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் பேசும்போது, சம்பந்தப்பட்ட பிரச்சனையை பற்றி மட்டும் பேசாமல், “இயக்குனர்கள் மோசமான படங்களை எடுத்து தயாரிப்பாளர்களை ஏமாற்றுகிறார்கள்” என்று தேவையில்லாமல் வார்த்தையை விட்டுவிட்டார்..

உடனே அருகில் இருந்த இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் கோபத்துடன் எழுந்தவர், “இயக்குனர்களை தவறாக பேசுவதை அனுமதிக்க முடியாது” என்று கூறி உண்ணாவிரத பந்தலில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கூடவே இன்னும் சில இயக்குனர்களும் எழுந்து சென்றனர்.

“நான் எல்லா இயக்குனரையும் சொல்லவில்லை” என்று ராவுத்தர் சமாதானம் சொன்னாலும் கூட விக்ரமன் திரும்பி வரவே இல்லை. உண்ணாவிரதம் முடியும் நேரத்தில் பேசிய இயக்குனர் ஆர்.கே.செல்வமணி “காலையில் நடந்த சலசலப்பு முடிவுக்கு வந்துவிட்டது. இருவருமே சமாதானமாகி விட்டனர்” என்று சொல்லி பிரச்சனைக்கு ஒருவாறாக முற்றுப்புள்ளி வைத்தார்..